உயர்கல்விக்கு ஒதுக்கியது ரூ. 85,600 கோடி, இதுவரை கிடைத்தது ரூ.6,600 கோடி: யு.ஜி.சி. துணைதலைவர் தகவல்
சென்னை, நவ. 2: உயர்கல்விக்கு 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ. 85,000 கோடியில் ரூ.6,600 கோடி மட்டுமே இதுவரை யு.ஜி.சி.-க்கு கிடைத்துள்ளது. மீதித் தொகை அரசின் கோப்புகளில் முடங்கியுள்ளது என்றார் யு.ஜி.சி. துணை தலைவர் வேத் பிரகாஷ். இது குறித்து அவர் மேலும் கூறியது: 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கென ஒதுக்கப்பட்ட ரூ.2.62 லட்சம் கோடியில் தொடக்கக் கல்வியை விரிவுபடுத்த ரூ.1.25 லட்சம் கோடியும், மேல்நிலைக் கல்வியை விரிவுபடுத்த ரூ.52 ஆயிரம் கோடியும், உயர்கல்வியை மேம்படுத்த ரூ. 85,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த தொகை 10-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட 9 மடங்கு கூடுதல் ஆகும். உயர்கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.46,600 கோடி பொதுக் கல்விக்கும், மீதித் தொகை தொழில் கல்விக்கும் ஒதுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது என்றும் வேத்பிரகாஷ் தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மால்கம் எஸ். ஆதிசேஷையா நினைவுச் சொற்பொழிவு பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் வேத் பிரகாஷ் பேசியதாவது: நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் விகிதம் 15 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்கள் நிலை உணர்ந்து சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில் 20 சதவீதத்தை சுலபமாக எட்டிவிட முடியும். உயர்கல்வியின் தேவை அதிகரித்து வரும் வேளையில், ஆராய்ச்சிக்கான அனைத்து வளங்களும் இருக்கும் போது, பல்கலைக்கழகங்களில் சமூக அக்கறையுள்ள ஆராய்ச்சிகள் அதிகம் மேற்கொள்ளப்படவில்லை. பல்கலைக்கழகங்கள் தொலைநோக்கு திட்டத்துடனும், பார்வையுடனும் செயல்படுவது அவசியம் என்றார்.ஆராய்ச்சியில் சமூகப் பயன்பாடு: 152 ஆண்டுகள் பழமையும் தரமும் வாய்ந்த சென்னை பல்கலைக்கழகத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கியுள்ள யு.ஜி.சி., அதைவிட குறைந்த கால வரலாற்றைக் கொண்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு ரூ. 252 கோடி ஒதுக்கியுள்ளது. இத்தகைய பாகுபாடு இருக்கக் கூடாது. எனினும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான அளவு நிதியுதவி அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களைப் பார்த்து கல்வியாளர்கள் மகிழ்வது போல், சாதாரண நிலையில் உள்ளவர்களும் மகிழும் வகையில், பல்கலைக்கழகங்களில் சமூக அக்கறையுள்ள ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்றார் துணைவேந்தர் திருவாசகம். சென்னை மேம்பாட்டு கல்வி மையத்தின் இயக்குநர் மரிய சலேத், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) துரைசாமி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்
என்ன செய்வது? படைத்துறைக்கு ஒதுக்கீடு செய்தால் தனியாக ஒதுக்கிப் பதுக்கி வைத்துக்கொள்ள முடியும். கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்வதில் ஓரளவுதானே கை வைக்க முடியும்! யார் கல்வி கற்றால் அல்லது கற்கா விட்டால் நமக்கென்ன? அரசியல்வாதிகளின் ஊழல்அதிகாரிகளின் பெட்டிகள் நிரம்பினால் சரி! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2009 4:23:00 AM
11/3/2009 4:23:00 AM