Last Updated :
ஆனையிறவுப் போர்த்திட்டம் குறித்தும், நடந்த போர் குறித்தும் பழ. நெடுமாறனின் தமிழீழம் சிவக்கிறது நூலின் 220-234 பக்கங்களில் விரிவான விவரணை உள்ளது. அதன் பகுதி மற்றும் சுருக்கம் வருமாறு: ஆனையிறவுத் தளம் ஐந்து பெரிய முகாம்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. 1. தடை முகாம்; 2. உப்பள அலுவலக முகாம்; 3. உப்புக் கூட்டுத்தாபன முகாம்; 4. பாடசாலை முகாம்; 5. உல்லாச விடுதி முகாம். இதில் மையப் பகுதியில் இருக்கும் உப்புக்கூட்டுத்தாபன முகாமே தளத்தின் பெரியதும் தலைமை முகாமுமாகும். இங்கு ஹெலிகாப்டர் இறங்குதளம் உண்டு. இதன்மூலம் உணவு, வெடிமருந்துகள் வழங்க வசதியுள்ளது. தளத்தின் வடபகுதியில் (இயக்கச்சிப் பக்கம்) இருக்கும் தடை முகாமிற்கும், தென் பகுதியில் உள்ள (பரந்தன் பக்கம்) உல்லாச விடுதி முகாமிற்கும் முன்னால் புலிகளின் காவலரண்கள் உண்டு. தளத்தின் மற்ற பகுதிகளில் புலிகளின் காவலரண்கள் கிடையாது. ஏனெனில், அவை நீரிணையால் சூழப்பட்டுப் பாதுகாப்பாக உள்ளன. மேற்கூறப்பட்ட இரு முகாம்களுக்கு ஊடாகத்தான் தளத்தின் மற்ற பகுதிகளுக்குப் பாதை உண்டு. தடை முகாமுக்கு முன்பாக சுமார் 200-300 மீட்டர் தூரத்திலும், உல்லாச விடுதி முகாமுக்கு முன்பாக சுமார் 500-600 மீட்டர் தொலைவிலும் புலிகளின் காவலரண்கள் உள்ளன. இந்த இடைவெளி முழுவதிலும் சிங்கள ராணுவம் மிதிவெடிகளைப் புதைத்து வைத்திருந்தது. ஆயிரக்கணக்கான படை வீரர்கள், ஏராளமான இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் ஏவுகணைகள், நீண்டதூரம் பாயும் ஆட்டிலறிகள், பலமான காவலரண்களையே தகர்த்தெறியும் பீரங்கிகள், ஆர்.சி.எல். எனப்படும் பீரங்கிகள், கவச வாகனங்கள் போன்ற தளவாடங்கள் இத் தளத்தில் குவிக்கப்பட்டிருந்தன. விமானங்களும் ஹெலிகாப்டர்களும் சிங்களவர்களுக்கு நம்பிக்கைக்குரிய முக்கிய ஆயுதங்களாக இருந்தன. ஆனையிறவுப் பகுதி முழுமையுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் இரண்டு அல்லது மூன்று அடி தோண்டினாலே நீர் சுரந்துவிடுகிறது. எனவே, பதுங்கு குழிகள் தோண்டுவது சாத்தியமற்றது. இத்தனை தடைகளையும் மனத்தில் கொண்டுதான் புலிகள் தங்கள் போர்த் திட்டத்தை வகுத்தனர். இப்பெரும் போரைத் திறம்பட நடத்துவதற்காக ஒவ்வொரு போர் முனைக்கும் கள அனுபவம் வாய்ந்த தளபதிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒட்டுமொத்தமாக ஆனையிறவுப் போரை நடத்துவதற்குப் பொறுப்பாக புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரான பொட்டு நியமிக்கப்பட்டிருந்தார். ஆனையிறவு ராணுவ தளத்தின் தென்பகுதி முனையில் நடைபெறும் போருக்குப் பொறுப்பாக சார்லஸ் அன்டனியும் சிறப்புப் படையணிக்குத் தளபதி பால்ராஜும் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்குக் கீழ் இப்பகுதி தாக்குதல் அணிகளுக்கு நேரடித் தலைமை தாங்க தளபதி சூசை நியமிக்கப்பட்டிருந்தார். இவருடன் மகளிர் பிரிவின் தளபதிகளுள் ஒருவரான ஜெனாவும் நியமிக்கப்பட்டிருந்தார். அதேசமயம் இதே பகுதியில் வான்வழி தரை இறக்கத்தை எதிர்பார்த்து நின்ற காவல் அணிகளுக்குத் தளபதியாக தண்டேஸ் நியமிக்கப்பட்டிருந்தார். (பின்னர் நடந்த மணலாற்றுப் போரில் இவர் வீரமரணம் அடைந்தார்) இவருடன் மகளிர் படைப்பிரிவின் துணைத் தளபதி ராதா நியமிக்கப்பட்டிருந்தார். இப்பகுதியின் வழங்கல்களுக்குப் பொறுப்பாகத் தளபதி குட்டியும், தளபதி மனோவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இப்பகுதியின் மீட்பு வேலைகளுக்குப் பொறுப்பாகத் தளபதி மல்லியும் மருத்துவ வேலைகளுக்குப் பொறுப்பாகத் திவாகரும் நியமிக்கப்பட்டனர். இத் தளத்தின் வடமுனையில் நடைபெறும் போருக்குப் பொறுப்பாக யாழ் மாவட்டத் தளபதி தினேஷ் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் தலைமையின் கீழ் இப்பகுதி தாக்குதல் அணிகளுக்குத் தளபதி குணாவும் மகளிர் படைப் பிரிவின் தளபதிகளுள் ஒருவரான விதுஷாவும் நியமிக்கப்பட்டிருந்தனர். வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு கடற்கரைப் போருக்குப் பொறுப்பாக லெப். கர்னல் சூட்டி நியமிக்கப்பட்டிருந்தார். 1991-ம் ஆண்டு, ஜூலை மாதம், 10-ம் நாள் ஆனையிறவுப் போரைத் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. ஜூலை 9 ஆம் நாள் இரவு, போராளிகளிடையே வே. பிரபாகரன் தோன்றி, ""எங்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரனது உயிர் பறிக்கப்படும் வரை எமது போராளிகள் உயிர் இழந்து கொண்டுதான் இருப்பார்கள். எனவே எதிரியின் அரண்களுக்குள் பாய்ந்து செல்லுங்கள். எதிரிகளை எவ்வளவு விரைவாக வீழ்த்த முடியுமோ, வீழ்த்துங்கள். அதன்மூலம் வெற்றியைப் பெறுங்கள்- செல்லுங்கள்- வீழ்த்துங்கள்- வெல்லுங்கள்- புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'' என்ற அவரின் பேச்சு போராளிகளுக்கு உரமாக அமைந்தது. பிரபாகரனிடம், போராளிகள் தங்களின் போர் உத்தி குறித்து விளக்கங்கள் கேட்டு அறிந்தனர். ஜூலைத் திங்கள் 10-ம் நாள் அதிகாலை 4.30 மணியளவில் "பசீலன்' ராக்கெட்டுகள் சிங்களப் படை முகாமில் விழுந்தன. இதற்கெனவே காத்திருந்தது போன்று சிங்கள ராணுவத்தின் ஹெலிகாப்டர்களும், சிறுரகப் போர் விமானங்களும் வானில் சீறிப் பறந்தன. இதை எதிர்பார்த்த போராளிகள் வானில் பறந்த ஹெலிகாப்டர்களுக்கும், விமானங்களுக்கும் குறிவைத்து தாக்கினர். இதன் காரணமாக அவை கீழே தாழ்ந்து பறக்க முடியாத சூழ்நிலை உருவாகியது. கவசமிடப்பட்ட புல்டோசர்களையும், உழவு எந்திரங்களையும் சிங்களப் படை முகாமை நோக்கி செலுத்தி, அதன் பின்னால் போராளிகள் முன்னேறினர். புலிகளின் முதல் இலக்கு "சுற்றுலா விடுதி முகாமை'. அன்றிரவே கைப்பற்ற வேண்டும் என்பதுதான். கடும் சண்டைக்குப் பின்னர், போராளிகள் இழப்புக்குப் பின்னர், காவல் அரண் தகர்க்கப்பட்டு, உள்ளே நுழைந்து "சுற்றுலா விடுதி முகாமை' நள்ளிரவில் கைப்பற்றினர். இதை வாக்கி டாக்கி மூலம், இத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய தளபதி சூசை அறிவித்தார்.ஜூலை 11-ஆம் நாள், இரவு 7.30 மணியளவில் தடை முகாம் மீது யாழ் மாவட்டத் தளபதி தினேஷ், தளபதிகள் குணா, செல்வி விதுஷா ஆகியோர் தலைமையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. கடும் சண்டை நடந்துகொண்டிருந்தபோது புல்டோசர்களும் உழவு எந்திரங்களும் மண்ணில் புதைந்து விட்டதால் பெரிய அளவில் போராளிகளுக்கு இழப்பு ஏற்பட்டும், காயமடைந்தும் போனதால் தங்களின் முகாமிற்குத் திரும்பினார்கள். அடுத்ததாக ஜூலை 13-ஆம் நாள், ஏற்கெனவே கைப்பற்றப்பட்டிருந்த உல்லாச விடுதிக்கு அடுத்திருந்த உப்பள அலுவலகம் மீது தளபதி பால்ராஜ் கண்காணிப்பிலும், தளபதி சூசை தலைமையிலும், பெண்புலிகளின் தளபதி ஜெனா தலைமையிலும் உப்பளப் பகுதிக்குள் புகுந்தனர். புல்டோசர் தாக்குதலுக்கு ஆளாகிச் செயலிழந்தது. இதனால் மேஜர் ரெட்டி தலைமையில் இன்னொரு அணி உள் நுழைந்தும், நினைத்தபடி காவல் அரண்களைக் கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும் சிங்கள ராணுவத்திடமிருந்து ஏராளமான ஆயுதங்களைக் கைப்பற்றிச் சென்றனர். ஆனையிறவு முகாம் மீது புலிகள் முற்றுகை நீடித்ததால், கடல் வழியாகப் படைவீரர்களைக் கொண்டு வந்து இறக்க, சிங்களப்படை முற்பட்டது. இதனை முறியடிக்க வெற்றிலைக்கேணி பகுதிக்குப் பொறுப்பாக இருந்த, தளபதி சூட்டி, ஜூலை 14-ஆம் தேதி தாக்குதல் தொடுத்தார். இத் தாக்குதலில் சூட்டி உயிரிழந்தார். இருப்பினும், இதற்கு முன்பு நடந்த ஒரு போரில் ஒரு கையை இழந்த மேஜர் யாசின் தலைமையில் புலிகள் சிங்களப் படையுடன் நேருக்கு நேர் யுத்தம் புரிந்தனர். இந்தப் போரில் சிங்கள ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஆஞ்சலோ பீரிஸ் கொல்லப்பட்டார். ஒவ்வொரு நாளும் போர் தணிவதும் உக்கிரமாவதுமாக இருந்தது. எண்ணிக்கையிலடங்கா வீரர்களைப் பலி கொண்ட இந்த யுத்தத்தில் இழந்த இடங்களையும் சிங்களப் படை இறுதியில் மீட்டது. புலிகளுக்கு இந்தப் போரில் வெற்றி கிடைக்கவில்லை. ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை ஒரு மாதகாலம் நேருக்கு நேர் நடைபெற்ற யுத்தத்தில் புலிகள் பல படிப்பினைகளைப் பெற்றார்கள். அனைத்து நிலைகளிலும் பாதகங்களே சூழ்ந்திருந்தபோது நடைபெற்ற இந்தயுத்தத்தின் மூலம், புலிகளின் வீரம் உலகுக்குத் தெரியவந்தது; மரபுவழி ராணுவமாக புலிகளின் படை உருவெடுத்ததையும் உலகம் அறிந்தது. விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள், பீரங்கிப்படைகள், கவச வாகனங்கள் போன்ற கனரக சாதனங்களுடன் சிங்களப் படை போரிட்டது. அவர்களது படைப்பிரிவில் 10 ஆயிரம் சிங்கள வீரர்கள் இருந்தனர். புலிகள் தரப்பில் 2 ஆயிரம் போராளிகள் போரிட்டனர். ஆனையிறவுப் போர் தொடர்பாக பி.பி.சி.யின் கொழும்பு நிருபர் கிறிஸ்டோபர் மோரிஸ் என்பவருக்கும் லண்டன் தலைமையகத்தில் உள்ள விமர்சகருக்கும் 28-7-1991 அன்று நடந்த உரையாடல் வருமாறு: விமர்சகர்: ஆனையிறவில் என்ன நடக்கிறது? நிருபர்: புலிகள் ஆனையிறவை முற்றுகையிட்டு உக்கிரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த ராணுவம் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இழப்புகள் பற்றி ராணுவத் தரப்பில் இருந்து வரும் தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவையாக உள்ளன. பத்தாண்டுக் காலமாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் முதல் தடவையாக மரபுவழிப் போர் முறையில் புலிகள் போராடுகிறார்கள். ஸ்ரீலங்கா ராணுவமும் அதற்கெதிராக மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையை.... இடைமறித்த விமர்சகர்: ஆகவே, இப்பொழுது இலங்கையில் இரு ராணுவங்கள் இருப்பதாகக் கூறுகிறீர்களா? நிருபர்: ஆம்! அப்படித்தான்!நாளை: சிங்கள ராணுவ முகாம்கள் அழிப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக