Last Updated :
லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் அலுவலகத்தில் இருந்த கிட்டு, ராஜீவ் கொலையைத் தாங்கள் செய்யவில்லையென்றும் இந்தப் படுகொலைக்கும் தங்களது இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மறுத்தார். ஆனால் படுகொலை நடந்த இடத்தில் கிடந்த காமிரா மூலம், ராஜீவ் காந்தியின் இறுதி நிகழ்ச்சிகளாகப் பதிவு செய்யப்பட்ட படங்களில் "தனு' படமும் இடம்பெற்றிருந்தது. அவர் "புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்' என்று கருதப்பட்டது. இக் கொலைச் சம்பவத்துக்கு யார் காரணம் என்பது உறுதியாவதற்கு முன்பாகவே, விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழகத்தில் விமர்சனத்துக்கும், பலத்த கண்டனத்துக்கும் உள்ளானது. இதன் காரணமாக இவ்வியக்கம் பெருமளவில் பின்னடைவைச் சந்தித்தது.இந்த சோகத்துக்கிடையே நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறுமா -ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. மூன்று கட்டங்களாக நடைபெறவிருந்த 1991 நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்டத் தேர்தல்கள் முடிவுற்றிருந்த நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தல்கள் முறையே மே மாதம் 23 மற்றும் 26 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தன. நாடெங்கும் நிலவிய கொந்தளிப்பான சூழ்நிலையில், தில்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாகத் தேர்தலை மறுபடியும் ஜூன் மாதம் 12 மற்றும் 15 தேதிகளில் நடத்துவது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தலும் சட்டமன்றத்துக்கான தேர்தலும் 15-ஆம் தேதியன்று நடத்தப்பட்டன. தேர்தல் கருத்துக்கணிப்பு மூலம் தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்றும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தெரியவருவதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் ராஜீவ் காந்தியின் அகால மரணத்தால் எழுந்த அனுதாப அலை காரணமாக, காங்கிரஸ் கட்சி 244 இடங்களில் வென்று மக்களவையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவரும், ஆந்திரப் பிரதேசத்தவருமான பி.வி.நரசிம்மராவ் ஆளும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்றார். பாஜக கட்சியோ அனுதாப அலையையும் மீறி 120 இடங்களில் வென்றது. தமிழக சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் அஇஅதிமுக -காங்கிரஸ் அணி பெரும்பாலான இடங்களில் வென்று பெரும்பான்மை பலம் பெற்றது. திமுக இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது. அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு ஏற்றார்.""ராஜீவ் காந்தி படுகொலையை நிகழ்த்தியது யார் என்பதில் பல்வேறு யூகங்களும் பதிவுகளும் வெளியான நிலையில், சி.பி.ஐ. கூடுதல் இயக்குநர் கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு அதற்கான அலுவலகமும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்டது. தொடர்ச்சியாக நீதிபதி வர்மாவின் தலைமையில் "வர்மா கமிஷன்' அமைக்கப்பட்டு, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்தனவா என்று ஆராயப்படும் என்றும், ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் சதிச் செயல் இருக்கிறதா -அதில் யாரெல்லாம் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்று ஆராய நீதிபதி ஜெயின் தலைமையில் "ஜெயின் கமிஷன்' ஒன்றும் அமைக்கப்பட்டது (ஆகஸ்ட் 1991).யாழ்குடாவையும், வடபகுதியையும் இணைக்கும் பாதையில் ஆனையிறவு உள்ளது. யாழ் கோட்டையை இழந்த பின்னர் இங்கே பெருமளவில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. இந்த முகாம் இருபகுதி மக்களையும் பிரித்து வைப்பதில் கண்ணாக இருந்தது. பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், எந்தப் பொருளும் இந்த ஆனையிறவு வழியாக யாழ்குடா செல்வதைத் தடுப்பதிலும் தீவிரமாக இருந்தது. யாழ்ப்பாணம்-கண்டி தேசிய நெடுஞ்சாலை, ரயில்பாதை ஆகியவை துண்டிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக சிலாவத்துறையில் இருந்த சிங்களப் படை முகாமை நான்கு முனைகளில் முற்றுகையிட்டு, போர் புரிந்து சாதனை நடத்தியிருந்ததால், அந்த அனுபவம் மூலபலமாக கொள்ளப்பட்டது. மன்னார் -மடு நெடுஞ்சாலையில் உள்ள பகுதி சிலாவத்துறை ஆகும். இப் பகுதி சிங்கள ராணுவ முகாம்களின் இருப்பிடமாக மாறி பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. தமிழர் வாழ்விடமான இப் பகுதியில் 6000 ஏக்கர் முந்திரிப் பண்ணையை உருவாக்கி சிங்களவர் குடியேற்றம் நிகழ்ந்த காரணத்தால் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்தார்கள். இந்த முகாம்களைத் தகர்ப்பது என முடிவெடுத்துதான் தாக்குதல் தொடுக்கப்பட்டது. நான்கு நாள்கள் இத்தாக்குதல் நேருக்கு நேர் நடத்தப்பட்டது. சிலாவத்துறையில் பெண் புலிகளுக்குத் தலைமை ஏற்ற தளபதி ராதா, "கொக்கிளாய் சண்டை, மாங்குளம் சண்டை ஆகியவை எங்களுக்கு தரைப்படைச் சண்டை அனுபவத்தைப் பெற்றுத் தந்தன. சிலாவத்துறை போர் முப்படையையும் ஒரே சமயத்தில் சந்திக்கும் வல்லமையையும் அதற்குரிய அனுபவத்தையும் எங்களுக்குப் பெற்று தந்தது' என்று கூறியதற்கொப்ப ஆனையிறவுப் போர் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனையிறவை சிங்களப் படை முக்கியமாகக் கருதுவதற்குண்டான காரணங்கள் என்ன? * ஆனையிறவு முகாமை இழந்தால் தமிழீழம் கைவிட்டுப் போய்விடும் என்ற பயம் சிங்களவருக்கு உண்டு. * ஆனையிறவு முகாம்- பல முகாம்களுக்குண்டான வலிமை கொண்டது. * ஆனையிறவு முகாமைச் சுற்றி இயற்கை அரண் போல கடல்நீர் ஏரி உள்ளது. பெருங் கடலுடனும் அது தொட்டுக் கொண்டிருக்கிறது. பொட்டல் வெளியும் அதிகம். எனவே யுத்தம் என்றால் நேருக்கு நேர் மோதினால்தான் உண்டு. இது அனைத்து வகையிலும் சிங்கள ராணுவ முகாமுக்கு மிக மிக பாதுகாப்பானது. பல்வேறு துன்பங்களை அளித்து வந்த ஆனையிறவு முகாம் தகர்ப்பு என்பது புலிகளின் அவசியத் திட்டமாக இருந்தது.நாளை: ஆனையிறவுப் போர்!
By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2009 4:42:00 AM
By Tamil Aadhavan, USA
11/2/2009 2:50:00 AM
By Alphonse, USA
11/2/2009 1:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*