http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_683970.jpg
உயிரி ஊடுருவல்கள்! அன்னிய தாவரங்களின்
ஊடுருவலால், இந்திய மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கூறும், காளிதாசன்:
நான், கோவையைச் சேர்ந்த,"ஓசை' எனும், சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவராக
செயல்படுகிறேன். மரபணு பொறியியல் வளர்ந்ததால், ஒரு நாட்டின் மீது அணு
குண்டு வீசி தான், போர் செய்ய வேண்டிய அவசியம் என்பது இல்லை. உணவு
தானியங்கள், களைத் தாவரங்கள் மூலமும், வன மற்றும் வேளாண் வளங்களை அழிக்க
முடியும். வெளிநாட்டினர் மூலம், பல அன்னிய தாவரங்கள் இந்தியாவில் ஊடுருவி,
நீர் நிலைகளை வற்ற வைப்பது, காடுகளை அழிப்பது என, பல பாதிப்புகளை மறைமுகமாக
ஏற்படுத்தி உள்ளன. இவற்றை தடுக்க சமீபத்தில், "வேளாண் உயிரி பாதுகாப்பு
ஆணையம்' உருவாக்க, பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த,
1877ல், விறகு மற்றும் வேலிக்காக அறிமுகப்படுத்தப்பட்டது, வேலிக்காத்தான்
முள் செடி. இது விவசாய நிலங்களையும் விட்டு வைக்காமல், நச்சு முட்புதராக
மாற்றி, என்ன செய்தாலும் அழிக்க முடியாமல், அரசு தடுமாறுகிறது.
வெளிநாட்டவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட, "கேட் பிஷ்' என்ற வேட்டை மீன்,
நம் நீர் நிலையில் உள்ள அயிரை, கெண்டை, கெளுத்தி வகை மீன்களையே சாப்பிட்டு
அழித்து விட்டதால், இவ்வகை மீன்களை வளர்க்க, தமிழக அரசு தடை விதித்து
உள்ளது. அமேசான் காடுகளைப் பூர்வீகமாக கொண்டது, ஆகாயத் தாமரைச் செடி. இது
காவிரி, தாமிரபரணி உட்பட, தமிழகத்தின் பெரும்பான்மை நீர் பரப்புகளை
ஆக்கிரமித்து, நீர் நிலைகளை வற்ற செய்கிறது. "லேன்டினா கேமலா' என்ற புதர்
வகை தாவரத்தை, இந்திய காடுகளில் விதைத்ததால் புதர்கள் அதிகரித்து, காட்டில்
உள்ள புல்வெளிகள் அழிந்தன. இந்த ஆணையம் துவக்கப்பட்டால், தானியங்கள் முதல்
செல்லப் பிராணிகள் வரை, திறன் வாய்ந்த நிபுணர் குழுவால் ஆராய்ந்த பிறகே,
இந்தியாவிற்கு கொண்டு வர முடியும். ஆணையம் செயல்பட ஆரம்பித்தால், களைச்
செடிகள் மட்டுமல்ல, நாட்டுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தும், எந்த வித
நுண்ணுயிர்களும், உள்ளே நுழைய முடியாது.
இள வயது இசை மேதை! 11
வயதிலேயே கீபோர்டுக் கான, "கிரேடு8' தேர்வில் தேர்ச்சி பெற்ற, சிறுமி
ரபேகா: நான், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவள். வேலம்மாள் வித்யாஷ்ரம்
பள்ளியில் படிக்கிறேன். மூன்றரை வயதிலிருந்தே, கீபோர்டு வாசிக்க பயிற்சி
பெறுகிறேன். அப்போதே, 20 நிமிடங்கள் தொடர்ந்து வாசிப்பேன். இப்போது,
பயிற்சியாளரிடம் கீபோர்ட் வாசிக்க பயிற்சி பெற்றாலும், ஆரம்பத்தில்,
தந்தையிடமே பயிற்சி பெற்றேன். சென்னையில் உள்ள, டிரினிட்டி காலேஜ் ஆப்
லண்டன் மியூசிக் அகடமியில், கீபோர்டுக்கான கிரேடு தேர்வுகள் நடத்தினர்.
நான்கு வயதிலேயே, "கிரேடு 1'க்கான எழுத்து தேர்வு எழுதினேன். எழுதிய முதல்
மூன்று தேர்விலும், வெற்றி பெற முடியவில்லை. மனம் தளராமல், பயிற்சியாளரிடம்
தீவிரமாக கற்றேன். "கிரேடு 4' தேர்வுக்கு சென்ற போது, என்னைத் தவிர மற்ற
அனைவரும், வயதில் பெரியவர்கள். பின், நேரடியாக, "கிரேடு 6' தேர்வு எழுதி,
75 சதவீத மதிப்பெண் பெற்றேன். எட்டு வயதிலேயே, "கிரேடு 6' முடித்ததால்,
டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் லண்டன் மூலம், பரிசு கிடைத்தது. 11
வயதிலேயே, "கிரேடு 8' தேர்வு எழுதி, 73 சதவீத மதிப்பெண் பெற்று, சாதித்து
காட்டினேன். ஹாங்காங்கில் உள்ள, "வேர்ல்டு ரெக்கார்ட் அசோசியேஷன்' என்
சாதனையை பதிவு செய்து, சான்றிதழ் தந்துள்ளது. என் சாதனையை, "கின்னஸ்
மற்றும் லிம்கா' சாதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டில்,
இச்சாதனைக்கான வயது வரம்பு நீக்கப்பட்டதால், போட்டியில் பங்கேற்றதற்கான
சான்றிதழ் மட்டும் கிடைத்தது. இசையமைப்பாளர் இளையராஜாவும், என் சாதனையை
பாராட்டி சான்றிதழ் தந்துள்ளார். தற்போது கீபோர்டில் உள்ள, அடுத்த
கட்டங்களுக்கான தேர்வுக்கு தயாராகி வருகிறேன். நான் வளர்ந்து பெரியவள்
ஆனதும், புதிய இசைக் குழுவை உருவாக்குவேன். இசைக்கான பள்ளியை துவக்கி,
ஆர்வமான ஏழைக் குழந்தைகளுக்கு, இசையை கற்று தருவேன். 25 வயதிற்குள்,
இசையமைப்பாளராக வரவேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்படுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக