புதன், 10 ஏப்ரல், 2013

உகாதித் திருநாள் வாழ்த்தில் கலைஞரின் தெலுங்குப் பாசம்

தெலுங்கின் மீது பற்றுக் கொண்டவர் கலைஞர் என்று தெரியும். அதற்காகத் தமிழ்க்குடும்பத்தைச்சேர்ந்த தமிழ்ச்சேய்மொழிகளான தெலுங்கு,  கன்னடம் எனக் குறிப்பிடாமல், < திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய முக்கிய மொழிகளான தெலுங்கு, கன்னட மொழிகள்  > என்று வரலாற்றைத் திரித்துக் கூறலாமா? <தமிழகத்தில் தமிழ்ச்சமுதாய மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் > அவர்கள் மாநிலங்களில் தமிழ் மக்களை அவ்வாறு நடத்துகிறார்களா என்பதையும் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் எதிராகவே நடந்து கொள்கிறார்கள் என்பதையும் தாய்க்குரிய மரியாதையைத் தமிழுக்குத்  தராமல் ஆரியப்புதல்வர்களாக நடந்து கொள்கிறார்கள் என்பதையும் இப்புத்தாண்டு முதலாவது தமிழர்களின் உரிமைகளைப் பறிக்காமல் நல்லுறவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கலாம். இவ்வேண்டுதலுடன் நாமும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உகாதித் திருநாள் எழுச்சியுடன் கொண்டாடப்படுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி: கருணாநிதி

உகாதி திருநாள் நாளை எங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்படுவது அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெலுங்கு, கன்னட புத்தாண்டு - உகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,.
திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய முக்கிய மொழிகளான தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் புத்தாண்டு திருநாளாகக் கொண்டாடும் உகாதி திருநாள் வியாழக்கிழமை (11.4.2013) அன்று எழுச்சியோடு எங்கும் கொண்டாடப்படுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகம் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் எதனையும் கருதாமல், எல்லோரிடமும் அன்பு பாராட்டும் மனிதநேயம் மிகுந்த மாநிலம்; எப்பொழுதும், எவர் மீதும் பகை கொள்ளாது, பரிவுகாட்டிடும் சிறந்த நாகரிகத்தைப் பழங்காலம் தொட்டுக் கடைப்பிடித்து வரும் மண் இது. இதனை, உலகப் பேரறிஞர்கள் பெரிதும் போற்றிப் பாராட்டும், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனும் புறநானூற்றுத் தொடர்
புலப்படுத்தும். இந்த அடிப்படையில்தான் தமிழ் மக்களின் கவசமாகத் திகழும் திமுக தனது அரசு அமையும் காலங்களில் மட்டுமல்லாமல், எக்காலத்திலும் அண்டை மாநிலங்களுடன் நேசக்கரம் நீட்டி நல்லுறவு பேணுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. கழகத்தின் இந்த அணுகுமுறையை அனைவரும் நன்கு அறிவர்.
2001இல் அமைந்த அ.தி.மு.க. அரசு ரத்து செய்த உகாதி திருநாளுக்கான அரசு விடுமுறையை, 2006இல் அமைந்த கழக அரசு தெலுங்கு கன்னட மக்களின் நலம் நாடி மீண்டும் நடைமுறைப்படுத்தியமை; உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் படைத்தளித்த திருவள்ளுவரின் திருவுருவச் சிலை பெங்களூருவில் நிறுவப்பட்டு, பதினெட்டு ஆண்டு காலம் மூடிக் கிடந்த நிலையில் கழக அரசின் சார்பில் கருநாடக மாநில அரசோடு நெருங்கிப் பேசி நல்லிணக்கம் பேணி, அங்கு நடைபெற்ற விழாவில் எனது கரத்தினால் அச்சிலையைத் திறந்து வைத்ததுடன், கன்னட மொழிக் கவிஞர் சர்வக்ஞர் சிலையை சென்னை மாநகரில் நடைபெற்ற விழாவில், கருநாடக மாநில முதல்வரைக் கொண்டு திறந்து வைத்தமை; தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களின் குழந்தைகள் பயில உரிய பாட நூல்களைத் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் தயாரித்து வழங்கி, அவர்களின் மொழி உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்தமை போன்ற நிழ்வுகளோடு; தமிழகத்தில் உள்ள பிறமொழிகள் பேசும் அனைத்து மக்களையும் உறவினர்களாக, உடன் பிறப்புகளாகவே கருதி வரும் திமுக.,வின் உயரிய கொள்கையையும் இவ்வேளையில் நினைவுபடுத்தி, தமிழகத்தில் தமிழ்ச்சமுதாய மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
- என்று கூறியுள்ளார்.


உகாதி திருநாள்: தலைவர்கள் வாழ்த்து
 
உகாதி திருநாள்: கவர்னர்-தலைவர்கள் வாழ்த்து
சென்னை, ஏப்.10-

நாளை உகாதி திருநாளையொட்டி கவர்னர்-தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழக கவர்னர் கே.ரோசைய்யா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உகாதி திருநாளை யொட்டி தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லெண்ணம், ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் மூலம் நமது தேசத்தை வலுப்படுத்துவோம். உகாதி என்றால் வெற்றியை குறிக்கிறது. நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் வெற்றியை அடைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்து செய்தி வருமாறு:-

திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய முக்கிய மொழிகளான தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் புத்தாண்டு திருநாளைக் கொண்டாடும் உகாதி திருநாள் நாளை (வியாழக்கிழமை) எழுச்சியோடு எங்கும் கொண்டாப்படுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகம் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் எதனையும் கருதாமல், எல்லோரிடமும் அன்பு பாராட்டும் மனிதநேயம் மிகுந்த மாநிலம், எப்பொழுதும் எவர் மீதும் பகை கொள்ளாது, பரிவு காட்டிடும் சிறந்த நாகரீகத்தைப் பழங்காலம் தொட்டுக் கடைபிடித்து வரும் மண் இது.

இதனை, உலகப் பேரறிஞர்கள் பெரிதும் போற்றிப் பாராட்டும், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ எனும் புறநானூற்றுத் தொடர் புலப்படுத்தும். இந்த அடிப்படையில்தான் தமிழ் மக்களின் கவசமாகத் திகழும் தி.மு.க எக்காலத்திலும் அண்டை மாநிலங்களுடன் நேசக்கரம் நீட்டி நல்லுறவு பேணுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பிற மொழிகள் பேசும் அனைத்து மக்களையும் உறவினர்களாக, உடன் பிறப்புகளாகவே கருதி வரும் தி.மு.க வின் உயரிய கொள்கையையும் இவ்வேளையில் நினைவுபடுத்தி, தமிழகத்தில் தமிழ்ச்சமுதாய மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த உகாதி திருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருமே தமிழர்களின் மொழி வழி சகோதர, சகோதரிகள்தான். தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைத்து வசதிகளுடனும், சுதந்திரமாகவும் வாழ தமிழகம் வகை செய்துள்ள அதேநேரத்தில், தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் பெருமளவில் பங்களித்திருக்கிறார்கள்.

தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல் போல் தழைத்தோங்க இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். உகாதி என்பதில் ‘ஆதி’ என்பதன் பொருள் புதிய தொடக்கம் என்பதாகும். அதற்கேற்ற வகையில் தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைப் பதற்கான தொடக்கமாக இந்த ஆண்டு உகாதி திருநாள் அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:-

புத்தாண்டு என்பது ஒவ்வொரு இன மக்களின் வாழ்கையிலும் புதிய ஆரம்பத்தை தருவதாகும். அந்த நன்னாளை ஏழை, பணக்காரர்கள் என்ற வேறுபாடின்றி அவரவர் சக்திக்கு ஏற்ப எல்லோரும் கொண்டாடுவது வழக்கம்.

நாளை தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு உகாதி என்ற புத்தாண்டு மலர்கிறது. அந்த நன்னாளில் அவர்கள் புதிய நம்பிக்கையுடனும், புதிய எழுச்சியுடனும் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க வரவேற்பது இயல்பு. இத்தகைய நன்னாளில் அவர்கள் எல்லா நலனும், முன்னேற்றமும் பெற்று இனிதே வாழ தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 
 
Wednesday, April 10,2013 01:23 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
தெலுங்கின் மீது பற்றுக் கொண்டவர் கலைஞர் என்று தெரியும். அதற்காகத் தமிழ்க்குடும்பத்தைச்சேர்ந்த தமிழ்ச்சேய்மொழிகளான தெலுங்கு, கன்னடம் எனக் குறிப்பிடாமல், < திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய முக்கிய மொழிகளான தெலுங்கு, கன்னட மொழிகள் > என்று வரலாற்றைத் திரித்துக் கூறலாமா? <தமிழகத்தில் தமிழ்ச்சமுதாய மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் > அவர்கள் மாநிலங்களில் தமிழ் மக்களை அவ்வாறு நடத்துகிறார்களா என்பதையும் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் எதிராகவே நடந்து கொள்கிறார்கள் என்பதையும் தாய்க்குரிய மரியாதையைத் தமிழுக்குத் தராமல் ஆரியப்புதல்வர்களாக நடந்து கொள்கிறார்கள் என்பதையும் இப்புத்தாண்டு முதலாவது தமிழர்களின் உரிமைகளைப் பறிக்காமல் நல்லுறவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கலாம். இவ்வேண்டுதலுடன் நாமும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக