திங்கள், 8 ஏப்ரல், 2013

இசுடெர்லைட்டு ஆலை : போராட்டம் வெற்றி: வைகோ

இசுடெர்லைட்டு ஆலையை அகற்ற தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெற்றி: வைகோ அறிக்கை
 
ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெற்றி: வைகோ அறிக்கை
சென்னை, ஏப். 8-

தூத்துக்குடி மாநகரில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக் குழு அறிவித்த முழு கடை அடைப்பு பொது வேலை நிறுத்தப் போராட்டம், அம்மாநகர வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத அளவுக்கு, பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்று உள்ளது.

20,000-க்கும் மேற்பட்ட கடைகளை, வணிகர்கள் தாங்களாவே அடைத்து விட்டனர். ஒருநாள் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், மினி பஸ்கள் எவையுமே ஓடவில்லை. வீதிகள் வெறிச்சோடி விட்டன. ஒவ்வொரு குடும்பத்திலும் தங்களின் உடல் நலனை, தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வாழ்வை, உயிரை, பாதுகாத்துக் கொள்வதற்கு ஸ்டெர்லைட் நாசகார ஆலையை, அகற்றியே தீர வேண்டும் என்று, மக்கள் முடிவு எடுத்து விட்டனர்.

நிலம், நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நச்சுமயமாக்கி, போபால் விஷவாயு அழிவைப் போல், உயிர் குடிக்கும் எமனாக அமைந்து உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை, மக்களின் தர்ம யுத்தம் தொடரும். அரசியல் கட்சிகள், சாதி, மத எல்லைகள் அனைத்தையும் கடந்து, பொதுமக்கள் போர்க் கோலம் பூண்டு விட்டனர்.

வீட்டுக்கு ஒரு பிள்ளை, ஸ்டெர்லைட்டை அகற்றும் போர்க்களத்தில் பங்கு ஏற்கின்ற உன்னதமான நாளும் வரத்தான் போகிறது. மக்கள் சக்திதான், நீதியைத் தீர்மானிக்கும் என்பதை, கடந்த காலங்களில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து எரிமலையாகச் சீறிய தீராதி தீரர்கள் உலவிய வீர பூமிதான் தூத்துக்குடி என்பதை, மீண்டும் அம்மக்கள் நிரூபித்து விட்டனர்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக