சனி, 13 ஏப்ரல், 2013

மனைவிக்குக் கோவில்: மனைவி சிலையை வழிபடும் கணவன்





http://img.dinamalar.com/data/gallery/gallerye_001959625_688958.jpg

பாச மனைவிக்கு வீட்டில் எழுப்பிய கோவில்: மனைவி சிலையை வழிபடும் கணவன்



புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மனைவி மீது கொண்ட பற்றுதல் காரணமாக, அவரது மறைவுக்கு பின் வீட்டின் ஒரு பகுதியை கோவிலாக்கி அதில் மனைவியின் சிலையை வைத்து வழிபட்டு வரும், 78 வயதான முதியவரின் பாசப்பிணைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

புதுக்கோட்டை அடுத்த உசிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா, 78. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி செண்பகவல்லி. இவர்கள், பத்து குழந்தைகளை (ஆண்-5, பெண்-5) பெற்றெடுத்தனர். இவர்களில் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பருவத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டனர்.தற்போது மகேந்திரவர்மன், நரேந்திரவர்மன், சவரணபவன், கணேசன் என, நான்கு ஆண் பிள்ளைகள், குழல்வாய்மொழி, அருள்மொழி, பொய்யாமொழி, வாசுகி என, நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

பிள்ளைகளில் மூத்தமகன் மகேந்திரவர்மன், இளைய மகன் கணேசன் ஆகியோர் மட்டுமே உசிலங்குளத்தில் உள்ள தந்தை சுப்பையா வீட்டில் அவருடன் வசித்துவருகின்றனர்.திருமணத்துக்கு பின், 48 ஆண்டு வரை, இணை பிரியா தம்பதியராக சுப்பையா - செண்பகவல்லி வாழ்க்கை நடத்திவந்தனர். சிறுநீரக கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்ட செண்பகவல்லி, 2006 செப்.,7ல் மரணமடைந்தார்.
மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் மனம் வருந்திய சுப்பையா அதிலிருந்து மீள்வதற்காக ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நூல்களை படிப்பது வழக்கம். ராமாயணத்தில் சீதையின் உருவபொம்மையை வைத்து ராமன் அஸ்வமேத யாகம் நடத்திய வரலாற்றுத் தகவல் சுப்பையா நினைவுக்கு வந்தது.

மனைவியின் மீது கொண்ட பாசத்தால், பொம்மையை ராமன் அஸ்வமேத யாகம் நடத்தியது போல, தன்னுடைய அன்பு மனைவிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உயரிய எண்ணம் உருவானது.ஆரம்பத்தில் மனைவியின் படத்தை வைத்து வணங்கி வந்த சுப்பையா, நாளடைவில் அவருக்கு சிலை வடிக்க முடிவு செய்தார். இதற்காக திருச்சியில் உள்ள ஒரு பாத்திரக்கடை உரிமையாளரை (மங்கள் அன்ட் மங்கள்) தொடர்புகொண்டு தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.அவரது ஏற்பாட்டில் கும்பகோணத்தைச் சேர்ந்த சிற்பி ஒருவரிடம் ஐம்பொன்னால் ஆன சிலை வடிவமைக்கப்பட்டது. பின்னர் சிலையை வைத்து வழிபடுவதற்காக வீட்டின் ஒரு பகுதி கோவிலாக மாற்றப்பட்டு, அதில் இரண்டு அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு அதன்மீது மூன்றரை அடி உயரம் கொண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. கோவில் மற்றும் சிலைக்காக அவர் மூன்று லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளார்.

மனைவிக்கு ஐம்பொன் சிலையுடன் கூடிய கோவில் எழுப்பிய மகிழ்ச்சியில் சுப்பையா நாள்தோறும் காலை, 6 மணிக்குள் எழுந்து குளித்துவிட்டு, விபூதி பூசியபின் கோவிலுக்கு சென்று மனைவியின் சிலைக்கு விளக்கேற்றியும், சூடம் காண்பித்தும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.தனக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி, ஏதாவது காரியங்கள் கைகூட வேண்டும் என்பதற்காக மனைவின் சிலை முன் நின்று, வேண்டுவதையும் கணவர் சுப்பையா வழக்கமாக கொண்டுள்ளார்.மனைவியின் பிறந்தநாள் மற்றும் நினைவு(திதி) நாள் அன்று அன்னதானம் வழங்கி வருகிறார். அம்மா மீதான அன்பு காரணமாக, அப்பா நடத்தும் நிகழ்ச்சிகளில் அவரது பெண் குழந்தைகள் குடும்பத்துடன் பங்கேற்றுவருகின்றனர். ஆரம்பத்தில் தவிர்த்த ஆண் பிள்ளைகள், தற்போது ஆதரவு தெரிவிப்பதாக சுப்பையா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:திருமணத்துக்கு பின், 48 ஆண்டு வரை, நானும் என் மனைவி செண்பகவல்லியும், இணை பிரியா தம்பதியினராக வாழ்ந்துவந்தோம். பத்து குழந்தைகளை பெற்றெடுத்தோம். இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. என் மனைவி செண்பகவல்லி நோய்வாய்பட்டு, 2006ம் ஆண்டு இறந்துவிட்டார். மனைவியின் மரணம் என்னை நிலைகுலைய செய்தது. அவருக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என, எண்ணினேன். அப்போது ராமாயணத்தில் சீதையின் பொம்மையை வைத்து, ராமன் அஸ்வமேத யாகம் நடத்தியது நினைவுக்கு வந்தது.ராம பக்தன் என்பதால் அவரைப் போன்று மனைவிக்கு சிலை வடித்து வழிபட முடிவு செய்தேன். வீட்டின் ஒரு பகுதியை கோவிலாக்கி அதில் மூன்றடி உயரம் உள்ள மனைவி செண்பகவல்லியின் ஐம்பொன் சிலையை வைத்து வணங்கி வருகிறேன். என் வேண்டுதல்களை அவர் நிறைவேற்றி வருகிறார்.இவ்வாறு கண்கலங்க கூறினார்.

மனைவிக்கு ஐம்பொன் சிலையுடன் கோவில் எழுப்பி வழிபட்டுவரும், 78 வயதான முதியவரின் பாசப்பணிவிடைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக