தமிழக அரசின் சித்திரை புத்தாண்டுத் திருநாள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்த அரசின் அறிவிப்பு:
‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்த தமிழ்’ என்னும்
பழமையுடைய, இலக்கிய வளம் நிறைந்த தமிழ் மொழியைப் பேசுபவர்கள் 2000
ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி
வந்துள்ளதைக் கருத்தில் கொண்டும், ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு
மதிப்பு அளிக்கும் வகையிலும் சித்திரைத் திங்கள் முதல் நாளை மீண்டும்
தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். 2012
ஆம் ஆண்டில் சிறந்த தமிழமைப்புக்கு தமிழ்த்தாய் விருதும் சிறந்த
தமிழறிஞர்களுக்கு கபிலர் விருதும், உ.வே.சா. விருதும் வழங்கப்பட்டன.
தில்லி தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது:
* 2013 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான
தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த
அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும்
பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
கபிலர் விருது: கவிஞர் முத்துலிங்கம்
கபிலர் விருது, தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மரபுச்
செய்யுள்/கவிதைப் படைப்புகளைப் புனைவதில் ஆற்றல் மிகுந்த கவிஞர்
முத்துலிங்கத்துக்கு வழங்கப்படவுள்ளது.
உ.வே.சா விருது: ம.வே.பசுபதி
உ.வே.சா. விருது ஓலைச் சுவடிகள், அரிய கையெழுத்துப் படிகள்,
கிடைத்தற்கரிய நூல்களைத் தொகுத்து தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில்
பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் ம.வே.பசுபதிக்கு வழங்க
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கம்பர் விருது: பால.ரமணி
இத்தமிழ்ப்புத்தாண்டு முதல் ஆண்டுதோறும் கம்பராமாயணத்தின் உயரிய
கருத்துக்களைப் பரப்பும் சிறந்த அறிஞருக்கு கம்பர் விருதும் சிறந்த
இலக்கியப் பேச்சாளருக்கு சொல்லின்செல்வர் விருதும் வழங்கப்படும் என ஆளுநர்
அவர்களின் உரையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான கம்பர் விருது முனைவர் பால.இரமணி, சொல்லின்செல்வர் விருது முனைவர் ம.லோகநாயகி ஆகியோருக்கும் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய்
1 லட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச் சான்று மற்றும்
பொன்னாடையும் முதல்வரால் 15.4.2013 அன்று வழங்கப்படும்.
சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா முதல்வரால் காணொலிக்
காட்சியின் மூலம் தொடங்கி வைக்கப்படும்
சித்திரை முதல்நாள் தமிழர்களது புத்தாண்டு அல்ல. அது இந்துக்களின் புத்தாண்டு. ஜெயலலிதா மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருப்பது அவரது இந்த்துத்வா மனப்பான்மையைக் காட்டுகிறது. சித்திரையை தமிழர்கள் புத்தாண்டாகக் கொண்டாடினார்கள் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் இல்லை. சித்திரை முதல்நாள் இந்திரவிழாவாக சிலகாலம் கொண்டாடப்பட்டது.
பதிலளிநீக்கு