தமிழக மறுவாழ்வு முகாம்களில் வசித்து, மீண்டும் தாயகம் திரும்பும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இலங்கையை விட, தமிழகம் பாதுகாப்பு என, அவர்கள் உணர்வதே, இதற்கு காரணம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள, 102 அகதிகள் முகாம்களில், 60,725 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், நிதியுதவியும், அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படுகின்றன.
அகதிகள் மறுவாழ்வு முகாம்:
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, சொந்த நாட்டுக்கு செல்லும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பும்போது, முகாம் அமைந்துள்ள, அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பர். பின் அந்த மனு,மறுவாழ்வு துறைக்கு அனுப்பப்படும். அவர்கள் போலீசாரிடம்இருந்து பெறப்படும் அறிக்கையோடு, மனுவை இணைத்து,
உலக நாடுகளின் அகதிகளுக்கான கமிஷனர் அலுவலகமான, யூ.என்.எச்.சி.ஆர்., நிறுவனத்துக்குஅளிப்பர்.
பொருள் உதவி:
அவர்கள், சொந்த நாடு செல்ல விரும்பும் அகதிகளிடம் நேர்காணல் நடத்தி, இலவசமாக விமானம் மூலம் செல்ல, ஏற்பாடு செய்வர். மேலும், நம் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கான சான்றிதழ் பெறுவதற்கும், பாஸ்போர்ட் எடுப்பதற்கும் துணை புரிவர்.இலங்கைக்கு சென்றவுடன், விமான நிலையத்தில் இருந்து, அவர்களது சொந்த ஊர் செல்ல, போக்குவரத்து செலவாக, 4,000 இலங்கை ரூபாய் அளிக்கப்படும். பின் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கும், புதிதாக வாழ்க்கை ஆரம்பிப்பதற்கும், 18 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு, 12 ஆயிரம் ரூபாயும், 18 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு, 9,000 ரூபாயும் வழங்கப்படும்.
குறைவு:
கடந்த, 10 ஆண்டுகளில், 2004ல், இலங்கையில் சமாதான பேச்சு வார்த்தை நடந்தபோது, அதிகபட்சமாக, 3,078 பேர் சென்றனர். அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில்,
Advertisement
இறுதிப்போர் துவங்கிய போது, முற்றிலும் குறைந்தது. 2007ல் யாரும் இலங்கைக்கு செல்லவில்லை.பின், 2009ல் போர் முடிவுக்கு வந்தபோது, மீண்டும் தாயகம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், உச்சத்துக்கு சென்ற எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:இறுதி போருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்தவர்களே, போரின் முடிவுக்கு பின், சொந்த ஊருக்கு செல்கின்றனர். மற்றபடி, தற்போதுள்ள இளைய தலைமுறையினர் யாரும், இலங்கைக்கு செல்ல விரும்புவதில்லை.காரணம், "தங்கள் சொந்த நாட்டை விட, தமிழகமே பாதுகாப்பானது; உறவானது' என, நினைக்கின்றனர்.முகாம்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களில், பெரும்பாலான இளைஞர்கள், தமிழகத்துக்கு வந்த பின்னரே பிறந்தவர்கள்.
சிங்களர் குடியிருப்பு :
எனவே அவர்கள், இலங்கை செல்வதை காட்டிலும், தமிழகத்தில் இருக்கவே விரும்புகின்றனர். அதுமட்டுமின்றி, போருக்கு பின், தமிழர்களின் குடியிருப்புகளில், சிங்களர் குடியிருப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. எனவே, அங்கு செல்வதைப் பாதுகாப்பு குறைவானதாக நினைக்கின்றனர். எனவே, தாயகம் செல்கிறவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எதிர்வரும் காலங்களில், இன்னும் குறையலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
-தினமலர் செய்தியாளர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக