திங்கள், 22 ஜூலை, 2013

சிறுநீரை அடக்கக்கூடாது!

சிறுநீரை அடக்கக்கூடாது!

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும், தொற்று பற்றியும், அதற்கான தீர்வையும் கூறும், மருத்துவர் சியாமளா கோபி: நான், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறேன். நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு, சம்பளம் மற்றும் பணிச்சுமை அதிகம் என்பதால், கூடுதலாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்தால், யாராவது தவறாக நினைப்பரோ என்ற எண்ணத்தில், பலர், சிறுநீர் கழிக்க மாட்டார்கள். சிறுநீர் பையின் சாதாரண கொள்ளளவு, வெறும், 300 முதல் 500 மி.லி., மட்டுமே. எனவே, சராசரியாக நாள் ஒன்றுக்கு, 3 லிட்டர் நீர் குடித்து, இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, சிறுநீரை வெளியேற்றுவது அவசியம். இல்லையெனில், அடிவயிற்றில் வலி, காய்ச்சல் வருவது போன்ற உணர்வு, ரத்தம் கலந்து வருவது, அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் தானாக வெளியேறுதல் என, பல பாதிப்புகள் வரும். குறிப்பாக, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, சொட்டு சொட்டாக சிறுநீர் கசிவதும், சிறுநீரகத்தில் கல் வளர்வதும் அதிகரிக்கும். இரவில் குறைந்தளவே நீரை பருகி, தூங்குவதற்கு முன்னரே வெளியேற்றுவது நல்லது. இரவில் தான், சிறுநீர் அதிக நேரம் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், சிறுநீர் பையில் கிருமிகள் வளர்ந்து, "யூரினரி இன்பெக்ஷன்' எனும், சிறுநீர் தொற்றை உருவாக்கும். டயாபட்டீஸ் மற்றும் பக்கவாத நோய்களாலும், இந்த தொற்று ஏற்படுகிறது. மேலும், பொது இடங்களில் உள்ள, "வெஸ்டர்ன் டாய்லெட்'டை பயன்படுத்தும் போது, "கம்மோட்' என்ற அமரும் பகுதி அசுத்தமாக இருக்கும் பட்சத்தில், நம் தோலில் கிருமி தொற்று ஏற்பட்டு, அது சிறுநீர் தொற்றாகவும் மாற வாய்ப்பு இருக்கிறது. சிறுநீரக பிரச்னைக்கு, நவீன மருத்துவ வசதிகள் நடைமுறையில் இருந்தாலும், போதிய விழிப்புணர்வுடன், தேவையான நீர் அருந்தி, சரியான நேரத்தில் சிறுநீர் கழித்தாலே, சிறுநீர் தொற்றால் பாதிப்படையாமல், நலமாக இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக