வெள்ளி, 26 ஜூலை, 2013

கடல் அலைகள் மூலம் மின்சாரம்

கடல் அலைகள் மூலம் மின்சாரம்: கல்பாக்கம் இயக்குநர் வாசுதேவ(ராவ்) தகவல்

காரைக்குடி: எதிர்காலங்களில் மின்தேவையை ப் பூர்த்தி செய்ய "ஜியோ தெர்மல்',(புவி வெப்ப ஆற்றல்) கடல் அலைகள் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி நடக்கிறது என, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய இயக்குனர் வாசுதேவராவ் பேசினார்.

காரைக்குடி சிக்ரி நிறுவன நாள் விழா நடந்தது. தலைமை விஞ்ஞானி பழனிச்சாமி வரவேற்றார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலைய இயக்குனர் வாசுதேவ ராவ் தலைமை வகித்து பேசியதாவது: கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 175 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல் படுகின்றன. யுரேனியம் 238 தனிமத்தை எரிபொருளாக கொண்டு பயன்படுத்தி 500 மெகா வாட் திறன் கொண்ட அணு உலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் 96 சதவீத பணிகள் முடிவடைந்தன. 2014-ல் முதல் கட்ட மின் உற்பத்தி துவங்கும். 2015 முதல் முழு அளவிலான மின் உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2050ல் நம்முடைய மின்தேவையை, அனல் மின் நிலையம் மூலம் பூர்த்தி செய்ய, 1.6 பில்லியன் டன் நிலக்கரி தேவை. எனவே இதற்கு மாற்றாக, நியூக்கிளியர், சோலார், காற்றாலை மூலம் தற்போது மின் உற்பத்தி செய்கிறோம். எதிர்காலங்களில் இவற்றை மட்டும் வைத்து மின்தேவையை பூர்த்தி செய்ய முடியாது. எனவே "ஜியோ தெர்மல் (புவி வெப்ப ஆற்றல்), கடல் அலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பது குறித்தான ஆய்வுகள் நடக்கின்றன. கூடங்குளம் அணு உலையால் பொது மக்கள் பயப்பட தேவையில்லை. அங்கு உருவாகும் அணுக்கழிவுகளை ஒரு ரூம் அளவிலேயே வைத்து அடைத்து விடலாம். அந்த கழிவுகள் வெளியேற வாய்ப்பில்லை. யுரேனியத்தை பிரித்தெடுப்பதால், வரும் கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவது குறித்தான ஆய்வுகளும் நடக்கிறது,என்றார். விழாவில், சிக்ரி ஆராய்ச்சி குழும தலைவர் ஜேக்கப், காரைக்குடி சிக்ரி இயக்குனர் விஜயமோகன் பிள்ளை பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக