சனி, 27 ஜூலை, 2013

தமிழ் ஈழப் பொதுவாக்கெடுப்பு - கலைஞரின் அடுத்த வாய்வீச்சு!



பாவம் கலைஞர்! இதுவரை தங்கள் கோரிக்கைகளுக்காகத்தான் போராடுபவர்களைப் பார்த்துள்ளோம்! ஆனால், இவரோ,  தமிழ் ஈழப் பொதுவாக்கெடுப்புதான் தீர்வு எனக் கூறிக் கொண்டு ஒன்றுக்கும் உதவாத 13ஆவது அரசமைப்புச் சட்டத்தீர்மானத்திற்காகப் போராட்டம் நடத்துவாராம்! அவர் என்ன செய்வார்? எப்படியும் காங்.உடனான கள்ளக்காதலை வெளிப்படையாகக் கூட்டணியாக்கிச் சில இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும். அதே நேரம் ஈழத்தமிழர் படுகொலைகளின் கூட்டாளியான அதனுடன் மறைமுகக் கூட்டாளியான தான் உறவு வைப்பதால் மேலும் கரைந்து போகும் தன் குடும்பக் கட்சியைக் காப்பாற்றிக் கரை சேர வேண்டும். ஆகவே,  தடுமாறுகிறார். தற்காலிகத் தீர்விற்காகப் போராடலாம் எனில், அதற்காக முதல்வர் மடல் எழுதக் கூடாதா?  
  உண்மையில் கலைஞருக்குத் தம் வீட்டு மக்கள் நலனை விட உலகத் தமிழ் மக்கள்மீது பரிவு இருக்குமெனில்,  தேர்தல் அடிப்படையில் சிந்திக்காமல், தமிழ் ஈழம் மலரவும் கொலையாளிகள் தண்டிக்கப் பெறவும் உலகத்தமிழர்கள் எங்கிருந்தாலும் உரிமையுணர்வுடன் வாழவும் போராடி வெற்றி காண வேண்டும். ஆனால், அப்படிச் செய்யமாட்டார். அதே நேரம் தன்கட்சியின் பக்கம் உள்ள 30 % மக்களை ஏமாற்றுவதற்காக நடிப்பார். எல்லாக் கட்சிகளையும் தூக்கி எறியும் மனப்பான்மை மக்களுக்கு வந்தது எனில், யார் நடிப்பும் எடுபடாது. அந்த நாள் விரைவில் வருவதாக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கலைஞரின் நாடக உரை வருமாறு : -

13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஈழத்தமிழர் சிக்கலுக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது: கருணாநிதி

13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலையில் மாற்றம் எதுவும் இல்லை என்றும், தமிழர்களுக்குத் தன்னாட்சி கிடைக்கும் வரை மத்திய அரசின் பணி தொடரும் என்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
எனக்கு (கருணாநிதி), மற்றும் சீத்தாராம் யெச்சூரிக்கு முன்பு எழுதிய கடிதத்திலும் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை வாழ் தமிழர்கள் உள்பட அங்குள்ள அனைத்துத் தரப்பினரும் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற்று, நல்லணிக்கத்தோடு வாழ வேண்டுமென்ற கருத்தில் இந்தியா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.1987-ம் ஆண்டு இந்தியா - இலங்கைக்கு இடையே இலங்கையின் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் நிறைவேறியது.இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் தற்போது இலங்கை அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறது.
இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு முழுமையானதும், நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு காண வேண்டும்.ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா கடும் அழுத்தம் தர வேண்டும்.குரல் கொடுத்தவர்கள் எங்கே?... இலங்கையின் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தைத் ரத்து செய்யக்கூடாது என்று முதல்வர் கடிதம் எழுதி,அதற்கு பிரதமர் உடனடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.
இதிலிருந்தே இலங்கைத் தமிழர் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும்.சட்டப்பேரவையில் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தபோது, சிலர் தமிழ் ஈழமே கிடைத்துவிட்டது என்பதைப் போல மகிழ்ந்தனர்.தற்போது 13-வது அரசியல் சட்டத் திருத்தம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியக் கூடிய நிலைதான் உள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னை என்றாலே தாங்கள்தான் என்பது போல எல்லாவற்றுக்கும்  முந்திக் கொண்டு வந்தவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தேட வேண்டிய நிலை இருக்கிறது.ஆர்ப்பாட்டம்: 13-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் ஈழத் தமிழர் பிரச்னைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது.
இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா.மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண்பதுதான் நல்ல தீர்வாக அமையும்.எனினும் தாற்காலிக தீர்வாவது ஏற்பட வேண்டும் என்பதற்குத்தான் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் இதை வலியுறுத்தியே டெசோ சார்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் "தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்' நடைபெற உள்ளது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.




இலங்கையில் பொது ஓட்டெடுப்பு: கருணாநிதி அடுத்தகட்ட யோசனை
 
சென்னை:"அனைத்து நாடுகளிலும், வாழும் இலங்கை த் தமிழர்களிடையே, பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும்' என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவே, தற்போது, அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, "இலங்கையிலே, 13 து சட்டத் திருத்தம் நீர்த்துப் போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும்' என, பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி, அதற்கு பிரதமரும் பதில் எழுதியிருக்கிறார்.சட்டசபையில், இலங்கை பிரச்னைக்காக, பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என, தீர்மானம் கொண்டு வந்தபோது, தமிழ் ஈழமே கிடைத்து விட்டது என்பதைப் போல, மகிழ்ச்சி அடைந்து, வானத்திற்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்தனர்.இலங்கை தமிழர் பிரச்னைக்கு, 13வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம், முழு அரசியல் தீர்வாக அமையாது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும், இலங்கை தமிழர்களிடையே பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்பது தான், "டெசோ' அமைப்பின் நிலைப்பாடு.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக