ஞாயிறு, 21 ஜூலை, 2013

இயற்கை குடிகொண்டுள்ள இனிய கருவூலம் குற்றாலம்

இயற்கை குடிகொண்டுள்ள இனிய கருவூலம் குற்றாலம்
குற்றாலம்.

தமிழகத்திற்கு இயற்கை தந்துள்ள இணையில்லா நன்கொடை.
ரியல் எஸ்டேட்காரர்களின் பிடியில் சிக்கி அதிகம் சீரழியாத தண்ணீர் தேசம்.
நெல்லை மாவட்டம் தென்காசி வட்டத்தில் தமிழகத்தின் எல்லையாக இருக்கும், அகத்தியர் வாசம் செய்த பொதிகை மலையில் பிறப்பெடுத்து வரும் ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, செண்பகா அருவி, புலியருவி என்று பல்வேறு அருவிகளைக் கொண்டுள்ள அற்புதமான இடம்.
ஏழை,எளிய மக்களுக்கு இறையும், இயற்கையும் கொடுத்த வரப்பிரசாதம்.
அதிகம் செலவில்லாமல் குடும்பத்துடன் குதூகலிப்பதற்கு ஏற்ற ஒப்பற்ற தலம்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம்தான், சீசன் துவங்கியது முதல் எல்லா அருவிகளிலும் தண்ணீர் வற்றாது கொட்டிவருகிறது. இங்குள்ள மலைகளுக்குள் பெய்யும் மழையானது மூலிகை செடிகளின் வழியாக அருவியாக விழுவதால் எவ்வளவு நேரம் குளித்தாலும் அலுக்காது.
தீம் பார்க்குளில் தேக்கிவைக்கப்பட்ட தண்ணீரை மோட்டார் மூலம் சிறிது உயரத்திற்கு எடுத்துச் சென்று செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவியாக விடுவார்கள், பத்து நிமிடம் குளிப்பதற்கு நிறைய கட்டணம் உண்டு தவிர நிறைய மின்சார சக்தியும் செலவிட வேண்டும், பலர் குளித்த தண்ணீரேயே திரும்ப, திரும்ப குளிக்கவேண்டிய சுகாதார கேடான சூழ்நிலையும் கூட.
ஆனால் சுத்தமான, சுகாதாரமான அற்புதமான இந்த மூலிகை தண்ணீரில் குளிக்க எந்த கட்டணமும் கிடையாது, இதற்கு இணையாக செயற்கையாக எந்த அருவியும் உருவாக்க முடியாது, இது போல இனி உருவாக்க நினைத்து கூட பார்க்கமுடியாது.
இப்படிப்பட்ட புனிதமான அருவி தண்ணீரை போற்றி வணங்காவிட்டாலும் பரவாயில்லை குடித்துவிட்டு அருவிக்கு குளிக்கவராதீர்கள், தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று சொல்லியுள்ளனர், அந்த அளவிற்கு தாயினும் மேலான அருவியை தெய்வமாக வணங்கும் நிலையில் அருவிக்கு வாருங்கள் என்பதுதான் வேண்டுகோள்.
அதே போல இந்த அருவி தண்ணீர்தான் பல கிராமங்களின் விவசாயத்திற்கும், குடிநீர் உபயோகத்திற்கும் செல்கிறது, ஆகவே ஷாம்பு, சோப்பு போட்டு குளிக்க வேண்டாம். ஷாம்புவின் ரசாயனத்தன்மை நச்சுத்தன்மையாக மாறி குடிநீரைக் கெடுத்துவிடும் என்கிறார்கள். யாரும் கேட்பதாக இல்லை, தயவு செய்து கேளுங்கள்.
இதுவரை குற்றாலம் போகாதவர்கள் இந்த சீசனுக்கு போய் அருவிகளில் குளித்து பாருங்கள் ஆனந்தம், மகிழ்ச்சி, ஜாலி, உவகை என்ற எல்லா வார்த்தைக்கும் ஒரே அர்த்தம் குற்றாலம் என்பது தெரியவரும்.
குற்றாலம் தொடர்பான படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்யவும்.

எல்.முருகராசு, 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக