பாராட்ட வேண்டிய முயற்சி. நகர்கள்தோறும் உருவாக்க வேண்டும். ஆனால், மரங்கள் அடர்ந்த பகுதியை ப் பூங்கா என்று சொல்லக்கூடாது. பூஞ்சோலைகள் உள்ள தோட்டம்தான் பூங்கா. ஆனால், இப்பொழுது பூங்கா என்பதைப் பொதுச் சொல்லாக ஆக்கிவிட்டார்கள். ஆங்கிலத்தில் பார்க்கு(park) என்றால் வைப்பிடத்தையே குறிக்கும். அவ்வாறு கொண்டுவந்து நிறுத்தி வைக்கப்படுவன ஊர்திகளாக இருக்கலாம்; படைக்கலன்களாக இருக்கலாம் ; உயிரினங்களாக இருக்கலாம்; பொதுமக்களுக்காக உருவாக்கப்படும் செடி,கொடிகளின் தொகுப்பாக இருக்கலாம். இதனை அப்படியே நாம் தமிழில் பரவலாகப் பயன்படுத்துவது தவறு. இந்த இடத்தில் வனம் என்றுதான் சொல்ல வேண்டும். காடு என்பது அடர்ந்த மரதங்கள் நிறைந்து இயற்கையாய் ஊருக்கு வெளியே அமைவது. வனம் என்பது ஊரை அடுத்து அல்லது ஊர்ப்பகுதியில் அமைவது.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
6 காணி பரப்பில் 600 மரங்களுடன் உயிர்வளித் தொழிற்சாலை
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 1,600க்கும் அதிகமான "ரிசர்வ் சைட்'கள் உள்ளன. இவற்றில், நூற்றுக்கும் உட்பட்ட இடங்கள் மட்டுமே, மாநகராட்சி நிர்வாகத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன; பெரும்பான்மையான பொது ஒதுக்கீட்டு இடங்கள், பராமரிப்பின்றி, முட்புதர்காடுகளாக மாறியுள்ளன. மாநகரில், ஏழு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வலம் வரும் நிலையில், அவை வெளியிடும் கார்பனின் அளவுக்கேற்ப மரங்களை வளர்க்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. எனவே, மாநகராட்சிக்குச் சொந்தமான "ரிசர்வ் சைட்'களிலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும், அரசு அலுவலக வளாகங்களிலும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் மரங்களை வளர்க்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில், நகருக்கு மட்டுமின்றி, மாநிலத்துக்கே முன்னோடியாக, கோவை நகரின் மத்தியில் அற்புதமாக உருவாகிக்கொண்டிருக்கிறது பிரமாண்டமான மரப்பூங்கா.
கோவை சவுரிபாளையம் அருகிலுள்ள ஜி.வி.ரெசிடென்சி குடியிருப்பு, கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரப்பிலான பெரிய குடியிருப்புப் பகுதி. அங்கீகரிக்கப்பட்ட இந்த "லே-அவுட்'க்கான பொது ஒதுக்கீட்டு இடம், 7 ஏக்கர் பரப்பில் ஒரே இடத்தில் அமைந்திருப்பது, வேறு எங்குமே இல்லாத சிறப்பம்சம். இந்த குடியிருப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடம், முட்புதர்களும், களைச் செடிகளும் நிறைந்த காடாக இருந்தது. அதனால், ஆக்கிரமிப்பு முயற்சிகளும் நடந்தன; உள்ளரங்க விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தீவிரமாகப் போராடி, அந்த முயற்சிகளை முறியடித்தனர். அது மட்டுமின்றி, அந்த இடத்தை பூங்காவாக மாற்றவும் முடிவு செய்தனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்குச் சிறப்பு செய்யும் வகையில், இதற்கான திட்டத்தை வகுத்தனர். அதன்படி, இங்குள்ள பொது ஒதுக்கீட்டு இடத்தில் 6 ஏக்கர் பரப்பில், 2010 நவம்பரிலிருந்து மரக்கன்றுகளை நடத்துவங்கி, கலாமின் 80வது பிறந்த நாள் தினமான 2011 அக்., 15 வரையிலும் 600 மரக்கன்றுகளை நட்டனர். குறுகிய காலத்தில் வளர்ந்து, சீக்கிரமே மடிந்து போகும் அலங்கார மரங்களை நடாமல், நமது மண்ணுக்குரிய மரக்கன்றுகளை நட்டதோடு, அவற்றை நன்கு பராமரிக்கவும் செய்தனர். அதன் விளைவாக, தற்போது அங்கு 250 வேப்ப மரங்கள், 250 புங்கன் மரங்கள் அழகாக வளர்ந்து நிற்கின்றன; இவற்றைத் தவிர்த்து, நாவல், மலை வேம்பு, நீர் மருது, பூவரசு மரங்களும் 100க்கும் அதிகமாகவுள்ளன. இரு ஆல மரக்கன்றுகளும் தளிர்த்து, செழித்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில், இந்த பூங்காவே, மகத்துவமான மரப்பூங்காவாகவும் பல லட்சம் மக்களுக்கான புதிய ஆக்சிஜன் தொழிற்சாலையாகவும் மாறும் என்பது நிச்சயம்.
அனைவருக்கும் அழைப்பு:
இந்த பூங்காவை உருவாக்கி, பராமரித்து வரும் குடியிருப்போர் நலச்சங்கம், "ராக்' மற்றும் "சிறுதுளி' அமைப்புகளின் சார்பில், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் உதவியுடன் "நமக்கு நாமே' திட்டத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பில், நடைபாதை அமைக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. "ராக்' அமைப்பின் செயலர் ரவீந்திரன் கூறுகையில், ""இதேபோல, நகரில் பராமரிப்பில் இல்லாத பொது ஒதுக்கீட்டு இடங்களில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள் முயற்சி எடுத்து, மரங்களை வளர்த்தால், கோவை நகரமே விரைவில் பசுமை நகரமாக மாறும். ஆக்கிரமிப்பு நடப்பதற்கான வாய்ப்பும் தவிர்க்கப்படும்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக