ஞாயிறு, 21 ஜூலை, 2013

முதுகுத்தண்டு வடச் சிக்கலால் துவண்டுவிடாதே தோழா-ஞானபாரதி

முதுகுத்தண்டு வட ச் சிக்கலால் துவண்டுவிடாதே தோழா-ஞானபாரதி

சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் பலரை நீங்கள் கடைத் தெருவில், ரோட்டில், ஆஸ்பத்திரி வாசலில், கல்வி கூடங்களில், அரசு அலுவலகங்களில் என்று பல இடங்களிலும் பார்த்து இருப்பீர்கள்.
இதில் பலரை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு செல்வார்கள், சிலர் தாங்களே சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டோ, அல்லது எரிபொருளின் உதவியுடன் உருளும்படி செய்தோ செல்வார்கள்.
சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் எல்லாம் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே நம்மில் பலரும் எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல.
அவர்களில் பெரும்பாலோனார் முதுகுதண்டு வட பாதிப்பு அடைந்தவர்கள்.
முதுகு தண்டு வட பாதிப்பு என்பது கடுமையான விஷயமாகும்.
தலைக்கு பின் பக்கம் மூளையில் இருந்து ஆரம்பிக்கும் முதுகு தண்டு வடத்தினுள் செல்லும் நரம்புகள்தான் உடம்பின் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் இயக்குகிறது, கட்டுக்குள் வைக்கிறது. மூளையிடும் உத்திரவை இந்த நரம்புகள்தான் செயல்படுத்துகிறது.
இந்த நிலையில் முதுகு தண்டு வடத்தில் அடிபடும் போது எந்த இடத்தில் அடிபடுகிறதோ, அந்த பகுதியில் இருந்து அதன் செயல்பாடுகள் நின்று போகும்.
முதுகுதண்டு வடம் எப்படி பாதிக்கும்:


உயரமான இடத்தில் இருந்து கீழே விழும்போது, விபத்தில் சிக்கும்போது என பல்வேறு காரணங்களால் முதுகுதண்டு வடம் பாதிக்கும்.
முதுகு தண்டு வட பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தன் உடல் உறுப்புகளை இயக்குவது என்பது மிக கடினமான ஒன்று, மூளை சொல்வதை நரம்புகள் எடுத்துச் செல்லாது, இதன் காரணமாக கையை யாராவது கத்தியைக் கொண்டு அறுத்தாலும் வலி என்கின்ற உணர்வு மூளைக்கு செல்லாது.


மிகவும் பாதிப்பு என்பது சிறுநீர் போவதும், மலம் கழிப்பதும்தான், இந்த இரண்டு பிரதான விஷயங்களுமே இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதால், என்னதான் சமாதானம் செய்துகொண்டாலும், இவர்களைப் பொறுத்தவரை அன்றாடம் தங்கள் வாழ்க்கையை ஒரு நரகமான வாழ்க்கையாகவே நினைக்கின்றனர்.


பிறகு படுக்கை புண் வரும். கொசு கடித்தால் கூட யாரையாவது கூப்பிட்டுதான் அடிக்கச் சொல்ல வேண்டும், படுக்கை அல்லது சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை கழிக்கவேண்டி இருக்கும். தொற்று நோய் எளிதில் பரவும்.


இரண்டாவது உலகப்போரின் போதுதான் முதுகு தண்டு வட பிரச்னைக்கு ஆளானவர்கள் அதிகம் பேர் இருந்தனர், இவர்கள் அதிகபட்சமாக அடிபட்டு ஆறுமாத காலம்தான் இருந்தார்கள் பிறகு தொற்று காரணமாக இறந்தனர். அதன்பிறகுதான் மருத்துவ உலகம் விழித்துக் கொண்டு இவர்களுக்கான மருந்து மாத்திரைகளை கண்டு பிடித்தது, கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறது. ஆனாலும் இதுவரை திருப்தியான தீர்வு என்பது கிடைக்கவில்லை.


இதன் காரணமாக இறந்து போகும் நாள் தள்ளிப்போனதே தவிர இழப்பை எந்த விதத்திலும் இன்றைக்கு வரை ஈடு செய்யமுடியவில்லை.


நமது நாட்டைப் பொறுத்தவரை முதுகு தண்டு வடத்திற்கான சிகிச்சை மையம் போதுமானதாக இல்லை.


சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் உயர்பதவியில் இருப்பவர் ஞானபாரதி. சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ரயில் விபத்தால் முதுகு தண்டு வட பிரச்னைக்கு உள்ளானவர். தனக்கு இந்த பிரச்னை வந்த பிறகு இவர் நிறையவே அனுபவப்பட்டுவிட்டார். அந்த அனுபவங்கள் எல்லாம் மிக வேதனையானவை.


தனது வேதனையை தீர்க்க நிறைய இடங்களுக்கு பயணப்பட்டார், நிறைய தேடல்களில் ஈடுபட்டார்.


இந்த பிரச்னையில் இருந்து தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இப்போதும் ஒரே வழி சீக்கிரமாக செத்துப் போவதுதான் அவ்வளவு கொடுமையான விஷயமாக இருக்கிறது. இதில் இந்த நோய்க்கொடுமை ஒரு பக்கம் என்றால் இந்த நோயாளிகளை அரசும், மருத்துவர்களும் அணுகும் முறையும் கொடுமையாக இருக்கிறது என்கிறார்.



சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிறைய பேர் வேதனையின் உச்சத்தில் உள்ளனர். நான் பட்ட அனுபவங்கள் மற்றும் தேடுதலை பகிர்ந்து கொள்வதன் மூலம் முதுகு தண்டு வட பிரச்னை உள்ளவர்களுக்கு உதவிக்கொண்டு இருக்கிறேன். இவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் முயற்சியில் நண்பர்கள் துணையோடு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன். மத்திய, மாநில அரசிடமும், மருத்துவத்துறையிடமும் நிறைய கேட்க வேண்டியிருக்கிறது.என் வாழ்க்கையில் பெரும் பங்கினை இதற்காகவே செலவழித்தாலும் பராவாயில்லை ஆனாலும் இந்த பிரச்னைக்கு ஒரு சரியான தீர்வு காண வேண்டும். போக வேண்டிய தூரம் அதிகம் என்றாலும் பயணத்தை துவக்கி விட்டேன் என்று ‌சொல்லும் ஞானபாரதியிடம் தொடர்பு கொள்ள: 9962528232.



- எல்.முருகராசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக