ஞாயிறு, 21 ஜூலை, 2013

1. காய்கறித்தோட்டம் நாமே உருவாக்கினால் என்ன? 2. சிக்கலைத் திறமையாகச் சமாளியுங்கள்

நாமே உருவாக்கினால் என்ன!

காய்கறிகளின் விலை உயர்வை ச் சமாளிக்க, வீட்டிலேயே தோட்டம் அமைப்பதன் அவசியத்தை கூறும், சுல்தான் அகமது இஸ்மாயில்:
நான், சென்னை புதுக் கல்லூரியின், முன்னாள் துணை முதல்வர். சுற்றுச்சூழல் மற்றும் மண்புழுக்களை ஆராய்வதில் மிகுந்த ஆர்வம். இதுதொடர்பாக உரையாற்ற, பயிற்சியளிக்க என, பல வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளேன். தற்போது, காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், வீட்டிலேயே தோட்டம் அமைக்க, சிலருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எல்லாருக்குமே, வீட்டு தோட்டம் அமைப்பதில், விழிப்புணர்வு தேவை. பெரிய பெரிய கட்டடங்களின் சுவர் வெடிப்புகளில், அரச மரமே வளரும் போது, கைப்பிடி மண்ணில், ஏன் காய்கறி செடியை வளர்க்க முடியாது என்ற, நேர்மறையான சிந்தனை இருந்தாலே, ஒரு பைசா கூட செலவில்லாமல், நாமே கொத்து கொத்தாக காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். இதனால், விண்ணை முட்டும் விலைவாசியில் இருந்து எளிதில் தப்பிக்கலாம். நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் டப்பா, பெயின்ட் வாளிகளை முதலில் சேகரிக்க வேண்டும். குப்பையாக தூக்கி எறியும் காய்கறி கழிவுகளை, மண்ணுடன் சேர்த்து அதில் போட்டால், இயற்கை உரம் ரெடி. அத்துடன் சிறிது மண்ணை சேர்த்து, சற்று அழுகிய அல்லது உடைந்த தக்காளியை பிழிந்தால், சில நாட்களில் தக்காளி செடி முளைக்கும். சந்தையில் விற்பனையாகும், மற்ற காய்கறி விதையும் போடலாம். தேங்காய் நார், ஒரு மிக சிறந்த நீர் தேக்கி. அதை மண்ணுக்குள் புதைத்து, காய்கறி அலசிய நீரை ஊற்றினாலே போதும்; ஒரு வாரத்திற்கு தாக்கு பிடிக்கும். வீட்டு தோட்டம் என்றாலே, பூச்சிகள் அதிகம் இருக்கும் என்ற பயம் வேண்டாம். இஞ்சி, பூண்டு, பெருங்காயத்தை 100 கிராம் வீதம் சேர்த்து அரைத்து, 10 லிட்டர் நீரில், 15 நாட்கள் ஊற வையுங்கள். பசுவின், 1 லி., கோமியத்துடன், 9 லி., நீர் சேர்த்து ஊற வைத்து, அந்த இரண்டையுமே செடிகளின் மீது தெளித்தால், பூச்சி தாக்குதல் இருக்காது. அனைத்தும் இயற்கை முறை என்பதால், எந்த பாதிப்பும் வராது. குடும்ப செலவும் மிச்சப்படும்.


பிரச்சினையைச் சாதுரியமாகச் சமாளியுங்கள்!

வீட்டை விட்டு பெண்கள் வெளியே போக கூடாது என்ற குடும்பத்தின் எதிர்ப்பை, சாதுர்யமாக சமாளித்து, எச்.ஆர்., துறையில் சாதித்த, அனிதா
: என் அப்பாவின் வேலையில் மாற்றல் அதிகம் இருந்ததால், மும்பையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்தேன். பட்டப் படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றதால், கோல்கட்டா, ஐ.ஐ.எம்.,மில், எம்.பி.ஏ., சீட் கிடைத்தது. "கட்டிக் கொடுக்க போகும் பொண்ணுக்கு படிப்பு எதற்கு' என, என் படிப்பை நிறுத்த முயற்சித்தனர். வந்த வரை லாபம் என, மும்பையிலேயே, எம்.பி.ஏ., படித்தேன். பேச்சு போட்டியில் வென்ற பல கோப்பைகளை கூட, மற்றவர் பார்வையில் படும்படி வைக்க அனுமதிக்கவில்லை. "வாயாடி' என, நினைத்து, உன்னை பெண் பார்க்க வரமறுப்பர் என, காரணம் கூறினர். படிப்பு முடிந்ததும், என் திறமையை பார்த்து, மனித வள துறையில் பெரிய நிறுவனமான, ஏ.எப். பர்கூசனில் வேலை கிடைத்தது. "நீ தான் வசதியான குடும்பத்துல பிறந்தவளாச்சே... நீ சம்பாரிச்சு தான் சொத்து சேர்க்கணுமா? நல்லவங்க, கெட்டவங்க என, பல ஆண்கள் வேலை செய்வதால், தேவையற்ற பிரச்னை வரும்' என, பெண்களை வீட்டின் உள்ளேயே பூட்டி வைக்க, நம் சமுதாயம் அடிக்கடி சொல்லும் அறிவுரை இது தான்.
பெண்ணாக பிறந்தது முதல், இப்படி பல பிரச்னைகளை சந்தித்து வந்தாலும், யாரிடமும் சண்டை போடாமல், சாதுர்யமாக சம்மதிக்க வைத்தேன். இதனால் தானோ என்னவோ, கோடிகளில் புழங்கும் பெரிய நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையில், ஏதாவது பிரச்னை இருந்தால், சாதுர்யமாக சமாதானப்படுத்தி, பிரச்னையை தீர்க்கும், "ரிவார்ட் மேனேஜ்மென்ட்' என்ற கடினமான வேலையை கூட, திறம்பட செய்ய முடிந்தது. எச்.ஆர்., துறையின் நுணுக்கங்களை அறிந்து, படிப்படியாக முன்னேறியதால், "செரிபிரஸ் கன்சல்டன்ட்' என்ற, எச்.ஆர்., நிறுவனத்தை நானே ஆரம்பித்தேன். பெரிய நிறுவனங்களின் பிரச்னையை சாதுர்யமாக தீர்த்து வைப்பதால், இன்று, மனிதவள மேம்பாட்டு துறையில், இந்தியாவின் மிக முக்கிய முகமாக கவனிக்கப்படுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக