செவ்வாய், 23 ஏப்ரல், 2013

தன்னம்பிக்கை எரியவில்லை!




தன்னம்பிக்கை எரியவில்லை!


சென்னை எழிலக த் தீ விபத்திலிருந்து தன்னம்பிக்கையோடு மீண்டு வந்த, தீயணைப்பு துறையின் முதல் பெண் அதிகாரி, பிரியா ரவிச்சந்திரன்: தமிழக தீயணைப்பு துறையின், முதல் பெண் அதிகாரி நான் தான். தமிழக அரசின் முக்கிய ஆவணங்கள் வைக்கப்படும் எழிலகத்தில், 2012ம் ஆண்டு, நள்ளிரவில் நடந்த தீ விபத்தை தடுத்து, தீயணைத்த போது, எதிர்பாராதவிதமாக தீ விபத்தில் சிக்கினேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, நான் பிழைப்பதே கடினம் என, என்னைப் பார்க்க வந்தவர்கள் கூறினர். ஏனெனில், என் உடலின், 45 சதவீத பகுதிகள், தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. என் குழந்தைகளிடம், நான் பணி நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளதாகச் சொல்லி குடும்பத்தினர் சமாளித்துள்ளனர்.தீ விபத்தில், என் முகம் மட்டுமல்ல; முதுகு, கை, கால்களிலும் காயம் ஏற்பட்டதால், திரும்பி படுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒரே நிலையில் நீண்ட நேரம் படுத்திருப்பது, எளிதான காரியம் இல்லை. கொஞ்சம் நகர்ந்தாலே, தீயினால் பாதிக்கப்பட்ட தோல், உடனே உரிந்து, சிராய்ப்பு ஏற்பட்டு விடும்.தீ கொழுந்து விட்டு எரிந்த போது, சிதிலமடைந்த எழிலக கட்டடத்தினுள் நுழைந்ததை நான் தவிர்த்திருக்கலாமே என, இப்போது சொல்கின்றனர்.

ஒருவேளை நான் உள்ளே செல்ல தயங்கி இருந்தால், என் சக தீயணைப்பு வீரர்களும், தயக்கம் காட்டியிருப்பர். தீயை அணைப்பதே, ஒரு அதிகாரியின் கடமை; அதைத் தான் நான் செய்தேன்.இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் ஆறு மாதங்கள், நரக வேதனையாக இருந்தது. நெருப்பாற்றில் நீந்திய உணர்வுடன் இருந்தேன். முதல்வர் ஜெயலலிதாவும், என் குடும்ப உறுப்பினர்களும் கொடுத்த தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகளே, நான் மீண்டு வர உதவியது.தீக்காயத்திலிருந்து சிறிதளவு மீண்டு, தமிழக தீயணைப்புத் துறையின் துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று, பணிக்கு திரும்பிய என் தன்னம்பிக்கையை, முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார். மீண்டும் இது போன்ற தீயணைக்கும் பணி வந்தால், கட்டாயம் செய்வேன்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக