ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வீட்டில் உருவாக்கலாம் குப்பை மாற்றுத் தொழிற்சாலை



வீட்டில் உருவாக்கலாம் குப்பை மாற்றுத்  தொழிற்சாலை
சென்னையில், குப்பை பிரச்னை நாளுக்கு நாள் அதிரிகத்து வருகிறது. குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் குப்பை மாற்று திட்டத்தை செயல்படுத்த, மாநகராட்சி முயன்று வருகிறது.மேலும், மக்கும் குப்பை, மக்கா குப்பை தொட்டிகள் வைத்து, குப்பை சேகரிக்கும் முயற்சியும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. குப்பை பிரச்னைக்கு, மாநகராட்சி போன்ற பெரிய நிர்வாகம் மட்டுமேயல்லாமல், ஒவ்வொரு தனி மனிதனாலும் தீர்வு அளிக்க முடியும்.தனி நபர் நினைத்தால், குப்பையால் உருவாகும் சமூக கெடுதலை குறைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஆதம்பாக்கத்தை சேர்ந்த, சிவசுப்ரமணியன் என்பவர், 2003ம் ஆண்டு முதல், வீட்டு குப்பையை, தெரு தொட்டியில் போடாமல், "வெர்மிக் கம்போசிங்' முறையை கையாண்டு, குப்பையை

மறுசுழற்சி செய்து வருகிறார். என்ன செய்ய வேண்டும்?
*மொத்தம், 200 லி., கொள்ளளவு கொண்ட, ஒரு டிரம் தயார் செய்ய வேண்டும்.
*அதன் அடிப்பகுதியின் நடுவில், வட்டமாக ஒரு திறப்பையும், அதற்கானமூடியையும் உருவாக்க வேண்டும்.
*அதன் வாய் பகுதி அருகில், பக்கவாட்டில், ஒரு திறப்பை தயார் செய்ய வேண்டும்.
*வீட்டின் வசதியான மண் தரையில், டிரம்மின் விட்டம் அளவுக்கு, அரை அடி மண் சமப்படுத்தி, அதன் மீது, வைக்கோலும் மாட்டு சாணமும் கலந்த கலவையை இட வேண்டும்.
*அதற்கு மேல், அரை அடி மண் போட வேண்டும்.
*இப்படி தயார் செய்யப்பட்ட மண் தரையின் மீது, டிரம்மை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.
*டிரம்மின் மேல் பகுதியில் உள்ள திறப்பின் வழியாக, உணவு கழிவு, காய்கறி கழிவு போன்ற மக்கும் குப்பையை உள்ளே போட்டு, அதன் மீது ஒரு கைப்பிடி மண்ணையும் தூவ வேண்டும்.
*வைக்கோல், மாட்டு சாண கலவையில், ஐந்து நாட்களில் புழு உற்பத்தியாகி, மக்கும் குப்பையை உண்டு, அவற்றை உரமாக்கி விடும்.
*மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, டிரம்மின் கீழ் திறப்பின் வழியாக, மண் உரத்தை எடுத்து
தாவரங்களுக்கு பயன்படுத்தலாம்.
குப்பை உரமாகும்:

இதுகுறித்து, சிவசுப்ரமணியன் கூறியதாவது:என் வீட்டில், மூன்று சின்ன குப்பை தொட்டிகள் வைத்துள்ளேன். ஒன்றில், காய்கறி மற்றும் உணவு கழிவு, இரண்டாவதில், பால் கவர், சாக்லெட் கவர் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்கள், மூன்றாவது தொட்டியில், பொட்டல காகிதம், பேக்கரி அட்டை போன்ற காகித கழிவுகளை சேகரித்து வைப்பேன். மக்கும் குப்பையை, தினமும் மாலையில் டிரம்மில் போட்டு, மேலே ஒரு கைபிடி மண் தூவுவேன். சில நாட்களில் அது உரமாக மாறிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை, அந்த உரத்தை எடுத்து, செடிகள், தென்னை மரத்திற்கு உரமாக பயன்படுத்துவேன். இந்த மறு சுழற்சியில், டிரம்மில் பாதிக்கு மேல் குப்பை தேங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்திற்கு கெடுதல் இல்லை:

மீதமுள்ள இரண்டு தொட்டியில், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பழைய தாள்களை மாதம் ஒரு முறை, பழைய பேப்பர் கடையில் இலவசமாக கொடுப்பேன்.இதை கடந்த, 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். துவக்கத்தில் என் வீட்டில் கூட எதிர்ப்பு இருந்தது. நாளடைவில் அவர்களும் சேர்ந்து இந்த பணியை ஆர்வமுடன் செய்கின்றனர்.
என்னால், என் வீட்டினரால் இந்த சமூகத்திற்கு எந்த கெடுதலும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இது, பெரிய வேலை ஒன்றும் கிடையாது. தினமும் நாம் செய்யும் வீட்டு வேலையில், இதுவும் ஒரு வேலை, அவ்வளவு தான். தினமும் இரண்டு நிமிடம் தான் செலவாகும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இவருக்கு உறுதுணையாக இருக்கும் இவரது மனைவி உமாதேவி கூறியதாவது:துவக்கத்தில், கணவரின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாக செய்து வந்தேன். பள்ளிக்கரணை மற்றும் பெருங்குடி குப்பை கிடங்கில், திடீரென எரியும் குப்பை பற்றி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பார்த்து, நம்மால் தானே சுற்றுச்சூழல் கெடுகிறது என, கலங்கினேன்.பின் நானே முழு மனதுடன், "வெர்மிக் கம்போசிங்' முறையை கையாண்டு வருகிறேன். இந்த நடைமுறை இப்போது, எனக்கு முழு சந்தோஷத்தை கொடுக்கிறது.இவ்வாறு, உமாதேவி கூறினார்.

நம்மால் தான், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. தொடர் விழிப்புணர்ச்சியை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும். இலவசங்கள் வழங்குவதை குறைத்துவிட்டு, இதுபோல், வீட்டில் குப்பையை மறுசுழற்சி செய்கிறவர்களுக்கு அரசு வரிச்சலுகை வழங்கலாம். இதன் மூலம், சுற்றுச்சூழல் சீர்கேட்டில் இருந்து சமூகம் பாதுகாக்கப்படும்சிவசுப்ரமணியன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக