புதன், 24 ஏப்ரல், 2013

காக்க... காக்க.... கல்லீரல் காக்க...!






காக்க... காக்க.... கல்லீரல் காக்க...!
நம் உடலின் உட்பகுதியில் இருக்கும் பெரிய திண்ம உறுப்பு கல்லீரல். "அதிகம் மது அருந்தினால், கல்லீரல் கெட்டுப் போகும்' என்பது தான், சாதாரண மக்களுக்கு, கல்லீரல் பற்றிய அதிகபட்ச விழிப்புணர்வு. மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்று, கல்லீரல் நோய்கள் தொடர்பாக, நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.
இதயமாற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்று, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இப்போது தான் பிரபலமாகி வருகிறது. ஆனால், இந்தியாவில், பத்து லட்சம் பேர், பல்வேறு கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் அதிர்ச்சி தகவல்.
இந்தியாவில், இதுவரை நடந்துள்ள, இரண்டாயிரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில், 500 சிகிச்சைகளில் பங்கேற்றவர் பிரபல டாக்டர் ஆனந்த் ராமமூர்த்தி. லண்டனில், இது தொடர்பாக சிறப்பு பயிற்சி பெற்றவர். சென்னை அப்பல்லோ மருத்துவமனை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான இவர், கல்லீரல் நோய்கள் தொடர்பாக கூறியதாவது:
உடலின் வளர்சிதை மாற்றம், புரோட்டீன் உற்பத்தி, ரத்த உறைவு உட்பட பல முக்கிய செயல்களை கல்லீரல் செய்கிறது. நம் உடலின் மையத்தில் உள்ள கல்லீரல், முற்றிலும் பாதிக்கப்பட்டால், மற்ற உறுப்புகளும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்து விடும். எனவே, கல்லீரலை கவனமாக காக்க வேண்டும். அது, நம் கையில் தான் உள்ளது.
மது அருந்துதல், கொழுப்பு மிக்க துரித உணவு, சுகாதாரமற்ற உணவு சாப்பிடுவது, தூய்மையற்ற தண்ணீர் அருந்துவது, அதிக உடல் எடை, உடல் பருமன், டென்ஷன் அடைவது, சர்க்கரை நோய், ரத்தம் பெறும் போது ஏற்படும் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால், கல்லீரல் நோய்கள் உண்டாகின்றன. சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே, என்சைம் கோளாறுகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.
மஞ்சள் காமாலை மற்றும் பலவகை ஹெபடைடிஸ், கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய், கல்லீரலில் கட்டிகள் போன்றவை முக்கிய நோய்கள்.
பசி இல்லாமை, உடல் சோர்வு, எடை குறைதல், மயக்கம், கால் வீக்கம், ரத்த வாந்தி, ரத்தம் வெளியேறுதல் போன்றவை, கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள். கல்லீரல், 70 சதவீதம் பாதிக்கும் வரை, நிறைய பேருக்கு அறிகுறிகள் தெரிவது இல்லை. மஞ்சள் காமாலை போன்றவை, உடனடி சிகிச்சையின் மூலம் குணமாகும். மற்ற கல்லீரல் நோய்களுக்கும் தொடர் சிகிச்சைகள், தடுப்பூசிகள் உள்ளன. ஆனால், முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.
நம் நாட்டில் பதிமூன்று ஆண்டுகளாக, இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து வருகிறது. எனினும், இது தொடர்பான விழிப்புணர்வு, பொதுமக்களிடம் போதிய அளவில் இல்லை. சென்னை அப்பல்லோவில் மட்டும், 225 மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
சிறுநீரகம் போன்று, "டயலிசீஸ்' செய்ய இயலாது. கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டு இருந்தால், உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால், மற்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்ட பின், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது இயலாத காரியம்.
உடல் உறுப்பு தானம் செய்வோரிடம் இருந்து, இறந்த குறிப்பிட்ட மணி நேரத்திற்குள், கல்லீரல் பெறலாம்; அல்லது நெருங்கிய உறவினரிடமிருந்து, கல்லீரலின், 70 சதவீத பகுதி வரை வெட்டி எடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தலாம். இதனால், இருதரப்பிற்கும் பாதிப்பு இல்லை. கல்லீரல் அளித்தவர், அறுவை சிகிச்சைக்கு பின், ஏழு நாட்கள் மருத்துவமனையில் தங்கினால் போதும். புண் ஏற்படும், வலி ஏற்படும் என்ற பீதி ஏதும் வேண்டாம். பின்னர், வழக்கமான வாழ்க்கை வாழலாம். வெட்டப்பட்ட கல்லீரல், இரண்டு மாதத்திற்குள் வளரும்.
எனவே, ஒருவர் முற்றிலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை விட, நெருங்கிய உறவினர் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்தால், அந்த உயிரை காப்பாற்றலாம். ஒருவர் தினமும் மது அருந்தினால், உறுதியாக கல்லீரலை பாதிக்கும். சிலர் எப்போதாவது மது அருந்துபவர்களாக இருக்கலாம். ஆனால், அவருக்கு, கொழுப்பு படிந்து, கல்லீரல் பாதிப்பு ஏற்கனவே இருந்தால், அது ஆபத்து. எனவே, நம் வாழ்க்கை முறை, உணவு முறைகளை மாற்றினால் கல்லீரலை காக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்லீரல் பாதிப்பால் உயிர் இழப்புகளை தவிர்க்க, உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்போம்! தொடர்புக்கு, அலைபேசி எண்: 97911 90000.

சி.வி. இரமேசுகுமார்
  





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக