புதன், 24 ஏப்ரல், 2013

இசுடெர்லைடு ஆலை தீர்ப்புக்கு எதிராக வைகோ சீராய்வு மனு

இசுடெர்லைடு ஆலை தீர்ப்புக்கு எதிராக வைகோ சீராய்வு மனு

First Published : 23 April 2013 12:33 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் வைகோ சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இது குறித்து மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி தொழிற்பேட்டையில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை நிறுவுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதை எதிர்த்து ம.தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997-ஆம் ஆண்டு ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். 2010-ஆம் ஆண்டு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த ஆலையில் இருந்து வெளியேறிய கழிவுகள் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி விட்டன என்பன உள்ளிட்ட காரணங்களால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் வைகோ ஆஜராகி வாதாடினார். எனினும், உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சாதகமாக வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வைகோ சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்தச் சீராய்வு மனுவில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 1994-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியபோது அந்த ஆலை இயற்கை உயிரினங்கள் வாழ் பகுதியில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. மன்னார் வளைகுடாப் பகுதி, தேசிய கடல் பூங்கா என்பதால் இயற்கை உயிரினங்கள்வாழ் பகுதியாகும். 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் ஆலை அமைந்துள்ள பகுதியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் வான் தீவும், 7 கி.மீ. தூரத்தில் கசாவர் தீவும் 15 கி.மீ. தூரத்தில் கரைச்சில்லி மற்றும் விலாங்குச்சில்லித் தீவுகள் இருக்கின்றன. அதனால் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள இடம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்த நிபந்தனையை மீறியது. காற்று மாசுபடுத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் நீர் மாசுபடுத்தல் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் ஆலை நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது சட்டக் கட்டாயம். ஆனால், ஸ்டெர்லைட் ஆலை 01.10.2007 முதல் 18.09.20909 வரை சுமார் இரண்டு ஆண்டுகள் சட்டப்படி ஒப்புதலைப் பெறாமலேயே அதே போலவே 01.04.2009 முதல் 13.08.2009 வரை நான்கு மாதங்களும், 01.01.2010 முதல் சட்டப்படி ஒப்புதல் பெறாமலேயே ஆலையை இயக்கி வந்துள்ளது. அவ்வாறு ஆலை இயங்கியது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியபோது 250 மீட்டர் அகலத்தில் ஆலையைச் சுற்றி பசுமை அரண் அமைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த நிபந்தனை ஒரே வாரத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் 25 மீட்டராகக் குறைக்கப்பட்டது. ஆனால், ஆலை தொடங்கி பல ஆண்டுகள் ஆன பின்னும் 2012-இல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆலையை ஆய்வு செய்த ‘நீரி’  அமைப்பு 25 விழுக்காடு பசுமை அரண் அமைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தன்னிடம் 172.17 ஹெக்டேர் நிலம் இருப்பதாகச் சொல்லி உள்ளது. இதில் 25 விழுக்காடு நில அளவு 43.04 ஹெக்டேர் ஆகும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலை 26 ஹெக்டேர் அளவில்தான் பசுமை வளாகம் அமைத்துள்ளது. இன்னும் 17.04 ஹெக்டேர் பசுமை வளாகம் அமைக்கப்பட வேண்டும். எனவே, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்த 25 விழுக்காடு பசுமை வளாகத்தை ஸ்டெர்லைட் ஆலை இன்றுவரை அமைக்கவில்லை.
ஸ்டெர்லைட் ஆலை ஆஸ்திரேலியாவில் இருந்து மூலப் பொருளாக தாமிர அடர்த்தியை இறக்குமதி செய்கிறது. அந்த மூலப் பொருள்களில் யுரேனியம், ஆர்சானிக், பிஸ்மத், ஃபுளோரின் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்களும் சேர்த்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. யுரேனியம் என்ற பொருளைக் கையாளுவதற்கு உரிய சட்ட அனுமதியை ஸ்டெர்லைட் ஆலை பெற்றிருக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் நச்சு மாசுப் பொருள்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறியதையும், அதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டதையும் கருத்தில் கொண்டுதான் ஆலையை மூட உத்தரவிட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது ஆலை 29.09.2010-இல் மூடப்பட்டு விட்டதையும் ஆலையை நடத்துவதற்கான சட்டப்படியான ஒப்புதலைப் பெறாமல் இருந்ததையும் மறைத்து வழக்கு தொடர்ந்து உள்ளது. உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உண்மையை மறைத்தும், திரித்தும் மேல் முறையீடு செய்துள்ளது என்பதை ஏற்றுக் கொண்ட பின்பும் இந்த ஆலையில் 1,300 பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள்; தூத்துக்குடி துறைமுகத்தில் 10 விழுக்காடு வர்த்தகத்தை ஸ்டெர்லைட் ஆலை தருகிறது; மத்திய, மாநில அரசுகளுக்கு வருமான வரியாகவும், ‘வாட்’ வரியாகவும், சுங்க வரித் தீர்வையாகவும் பெருமளவில் செலுத்துவதால் ஆலையை மூடத் தேவையில்லை என்று கூறி ஆலையை நடத்த அனுமதியளித்து தீர்ப்பளித்தது.
சில சட்டபூர்வமான வினாக்களுக்கு விடை காண வேண்டி உள்ளது.
காற்று மாசுத் தடுப்புச் சட்டம் பிரிவு 21-இன் கீழும், நீர் மாசுத் தடுப்புச் சட்டம் பிரிவு 25-இன் கீழும் ஆலையை நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமா? அல்லது சாதாரண நடைமுறையா?
ஆலையை அமைத்துக் கொள்ள அனுமதி கொடுத்தபோது 25 கி.மீ. இயற்கை உயிரினங்கள்வாழ் பகுதிக்கு அப்பால் அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை ஆலையில் இருந்து எந்தக் கழிவும் வெளியேற்றப்படவில்லை என்று ஸ்டெர்லைட் ஆலை கூறியதால் அந்த நிபந்தனை தளர்த்திக் கொண்டது சரியா?
மன்னார் வளைகுடாப் பகுதி இயற்கை உயிரினங்கள்வாழ் பகுதி என்று திட்டங்களைச் செயல்படுத்தி வரும்போது வன விலங்குகள்  சட்டத்தின்கீழ் அரசு அறிவிக்கை  கொடுத்தால் மட்டுமே இயற்கை உயிரினங்கள்வாழ் பகுதியாக மன்னார் வளைகுடாப் பகுதியை ஏற்றுக் கொள்ள முடியும் என்றால் சரியா?
1998, 1999, 2003, 2005 ஆண்டுகளில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த ‘நீரி’ அமைப்பு (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம்) கொடுத்த ஆய்வு அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்தியுள்ளது என்று கண்டறிந்த பின்பும், இழப்பீடு தொகை செலுத்தினால் ஆலையை இயக்கலாம் என்றால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க இயலுமா?
உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட தீர்ப்புகளை வழங்கும்போது ஓர் ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்தினாலும் அதிகமான வரியை அரசுக்குச் செலுத்துகிறது; ஒரு பொருளைப் அதிகமாக உற்பத்தி செய்து வணிக வாய்ப்பை அதிகரிக்கின்றது; பொருளாதாரம் மேம்பாடு அடைகிறது என்பன போன்ற நடவடிக்கைகளைக் கவனத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாக்க முடியும்?
ஸ்டெர்லைட் ஆலை உண்மைகளை மறைத்தும் பொய்யானதாகவும் மேல்முறையீட்டைச் செய்திருப்பது உண்மைதான் என்பதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் முன்னுதாரணத் தீர்ப்புகளின்படி ஸ்டெர்லைட் ஆலை வழக்கைத் தள்ளுபடி செய்யாமல் அந்த ஆலையின் வணிகத்தை மட்டும் கணக்கில் கொண்டு ஆலைக்குச் சாதகமாக தீர்ப்பு அளித்திருப்பது சட்டத்தின் பார்வையில் ஏற்புடையதா?
என்ற வினாக்களையும் எழுப்பி உள்ளார்.
இவ்வாறு மனு வைகோ, உச்ச நீதிமன்றம் 02.04.2013 அன்று அளித்த தீர்ப்பைச் சீராய்வு செய்து திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றம் 28.09.2012 அன்று ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக