வன்முறை யிலிருந்து காக்கும் ஆடைகள், கருவிகள்: விதவிதமாக கண்டுபிடித்து அசத்தும் மாணவியர்
புதுதில்லி:பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய விடாமல்
தடுக்கும் அதிநவீன கருவிகளை, மாணவியர் மற்றும் பெண்கள் தயாரித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள், சமீப காலமாக
அதிகரித்துள்ளன. அதனால், பாலியல் பலாத்காரத்திலிருந்து பெண்களை காக்கும்
கருவிகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.
எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி:
சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில், "ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்' படிக்கும் மனிஷா, இன்ஜினியரிங் மாணவர்களான, நீலாத்ரி பாசு மற்றும் ரிம்பி திரிபாதி ஆகியோருடன் இணைந்து, "எஸ்.எச்.இ.,' என்ற கருவியை கண்டு பிடித்துள்ளார்.சாதாரண, "நைட்டி' போல காட்சியளிக்கும் உடையில், அதிநவீன கருவி இணைக்கப்பட்டுள்ளது. பிறரால் பலாத்காரத்திற்கு உள்ளாகிறோம் என்பதை அறிந்தவுடன், அந்த உடையில் பொருத்தப்பட்டிருக்கும், பொத்தானை அழுத்தினால் போதும்; 3,800 கிலோ வாட், "எலக்ட்ரிக் ஷாக்' அடித்து, தொட்ட நபர் மயங்கி சரிவார்.ஆனால், இந்த உடையை அணிந்திருக்கும் பெண்ணுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், அடுத்த வினாடி, உடையுடன் இணைக்கப்பட்டிருக்கும், ஜி.பி.ஆர்.எஸ்., கருவி செயல்பட்டு, போலீஸ், பெண்ணின் உறவினர்கள் மொபைல் போன் எண்களுக்கு, எச்சரிக்கை செய்திகளை அனுப்பும்.
குறைந்த விலையில்:
""இது போன்ற கருவியை, அமெரிக்காவின், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் தயாரித்துள்ளனர். அதன் விலை, பல லட்ச ரூபாய் இருக்கும் என, கூறப்படுகிறது. ஆனால், நாங்கள் தயாரித்துள்ள ஆடையின் விலை, அதிகபட்சம், 1,500 ரூபாய்க்குள் தான் இருக்கும்; ஆடையை சலவையும் செய்யலாம்,'' என, மாணவி மனிஷா தெரிவிக்கிறார். அது போல், தேசிய ஆடை அலங்கார தொழில் நுட்பம் படிக்கும் மாணவர்கள், நிஷாந்த் பிரியா, ஷாஜத் அகமது ஆகியோர், பேராசிரியர், நூபூர் ஆனந்த் துணையுடன், "ஜாக்கெட்' ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதை அணிந்திருக்கும் போது, தேவையில்லாமல் யாராவது தொட்டால், தொட்ட நபருக்கு, எலக்ட்ரிக் ஷாக் கிடைக்கும்.
பயங்கர "ஷாக்':
எலக்ட்ரிக் ஷாக்கால் பாதிக்கப்பட்டவர், 15 நிமிடத்திற்கு எதுவும் செய்ய முடியாது; மயக்க நிலையை அடைந்து விடுவார். அந்த ஜாக்கெட்டிலிருந்து வெளியாகும், 110 வோல்ட் மின்சாரம், சில்மிஷ நபரையோ அல்லது பலாத்கார நபரையோ நிலைகுலையச் செய்து விடும்.வியர்வை மற்றும் மழை நீர் பட்டாலோ, அணிந்திருப்பவருக்கு எத்தகைய ஆபத்தையும் அளிக்காத வகையில், இந்த ஜாக்கெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த வரிசையில், தவறான எண்ணத்துடன் தொட்டவுடன், சகிக்க முடியாத நாற்ற நீரை, அந்த நபர் மீது பீய்ச்சி அடைக்கும் ஆடைகள், தொட்டவுடன், முள்ளெலி போல, கூர்மையான கம்பிகளால், பலாத்காரம் செய்பவனின் உடலை துளைக்கும் ஆடைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.அவை, காப்புரிமைக்காகவும், குறைந்த விலையில் தயாரிப்பதற்காகவும், அடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக