கியூபாவில் அமெரிக்காவுக்குச் சொந்தமாக உள்ள
குவான்டனாமோ ராணுவ சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளில் 92 பேர்
உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இந்த சிறையில் சுமார் 166 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தாங்கள்
காரணமின்றி, குற்றச்சாட்டுகள் இல்லாமல், சட்டபூர்வ விசாரணை நடத்தாமல் கடந்த
11 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தங்களை விடுவிக்க வேண்டும்
என்றும் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கைதிகள் தரப்பு
வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளில் 17 பேருக்கு மூக்கு வழியாக
குழாயை செலுத்தி கட்டாயப்படுத்தி உணவு அளிக்கப்படுவதாக சிறை அதிகாரி
தெரிவித்தார். 2 கைதிகள் நிலைமை மோசமாகி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த கைதிக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை
என்றும் சிறை அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் பிப்ரவரி 6 முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினர். ஆனால்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கையை அதுபற்றி தகவல்
வெளியிடும்போது திட்டமிட்டு குறைத்து ராணுவம் தெரிவிப்பதாக கைதிகள் தரப்பு
வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பிப்ரவரியிலிருந்து இப்போதைய
நிலவரப்படி 130 பேர் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவிக்கிறார் டேவிட் ரீம்ஸ்
என்கிற வழக்குரைஞர்.
ஆரம்பத்தில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமே நடத்தவில்லை என்று மறுத்தது
சிறை நிர்வாகம். ஆனால் நிர்வாகத்தின் கூற்றுக்கு மாறாக உண்ணாவிரதப்
போராட்டம் மேற்கொள்ளும் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
2 கைதிகள் தற்கொலை முயற்சி மேற்கொண்டனர் என்பதை சிறை செய்தித்
தொடர்பாளர் கர்னல் சாமுவேல் ஹவுஸ் ஒப்புக்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து
சுமார் 60 கைதிகள் பொது சிறைப் பகுதியிலிருந்து மாற்றப்பட்டு தனிமை சிறைப்
பகுதியில் அடைக்கப்பட்டுள்ளனர். பொது சிறைப்பகுதியில் கைதிகள் சேர்ந்து
சாப்பிடலாம். ஆனால் தனிமைச் சிறையில் ஒரு நாளைக்கு சுமார் 2 மணி நேரமே
கைதிகள் கூடி இருக்க அனுமதிக்கப்படும்.
உண்ணாவிரதத்தை கைவிடுவதுடன் சிறை விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி
தந்தால் பழையபடி பொது சிறைப் பகுதிக்கு மாற்றப்படுவார்கள் என்றார் ஹவுஸ்.
அறையில் தாங்கள் வைத்திருந்த மத புனித நூலை, கடத்தல் பொருள் என கூறி
அதிகாரிகள் சோதனை நடத்தியதும் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்க காரணமாக
அமைந்தது.
அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படை ஆப்கானிஸ்தானில் தலிபான்களை
விரட்ட நடத்திய போரில் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை கைது செய்து இந்த சிறையில் அடைத்துள்ளது
அமெரிக்கா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக