சனி, 28 ஜூலை, 2012

முகநூல் மூலம் மக்கள் தொண்டு



"பேஸ்புக்' மூலம் சமூக சேவை!
"பேஸ் புக்' மூலம், பல சமூக சேவைகளைச் செய்து வரும் வசந்தகுமார்: நான் ஒரு ஓவியன். விளம்பரப் பதாகைகள், விளம்பர போர்டுகள் போன்றவற்றை, 10 ஆண்டுகளுக்கு முன், கையாலேயே வரைந்து, "டிசைன்' செய்து வந்தேன்; விஞ்ஞான வளர்ச்சியால், அதே வேலையை, கம்ப்யூட்டரில் செய்கிறேன்.என் வேலை பெரும்பாலும், இணையத்தை சார்ந்திருந்ததால், ஓய்வு நேரம் கிடைக்கையில், விளையாட்டாக, "பேஸ் புக்கில்' நுழைந்தேன். நண்பர்களின் பிறந்த நாள், மண நாள் விழாக்களுக்கு, வாழ்த்து அட்டைகள், "டிசைன்' செய்து அனுப்பினேன்; நண்பர்கள் மகிழ்ந்தனர்.முதன் முதலில் நண்பர்களை வைத்து, இணையம் மூலம் பட்டிமன்றம் நடத்தி, அதற்குப் பரிசுகளும் அளித்தோம். இதனால், என் நட்பு வட்டம் பெருகியது. "பேஸ் புக்'கில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதோடு இல்லாமல், சமூக சேவைகளிலும் ஈடுபட்டோம்.வெளிநாட்டில் வாழும் நண்பர்கள், தங்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில், ஆசிரமங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவளிக்க விரும்பினர். அதை இங்கிருந்தே நாங்கள் செய்தோம்.அப்போது தான், இந்த சேவையை மேலும் விரிவுபடுத்தலாம் என்ற எண்ணம் தோன்றியது. தற்போது, "பேஸ் புக் நண்பர்கள் அறக்கட்டளை'யை உருவாக்கியுள்ளோம். எங்கள் சங்கத்தில், உலக அளவில், 170 உறுப்பினர்கள் உள்ளனர்.எங்களின் கவனத்திற்கு வரும் விஷயங்களின் உண்மைத் தன்மையை, முதலில் ஆராய்கிறோம். அவை உண்மை எனும் பட்சத்தில், "பேஸ் புக்கில்' அது குறித்து வெளியிடப்படும். அதைக் காணும் நண்பர்கள், தானே முன் வந்து உதவுவர்.ஒரு ஊரில் ஒருவருக்கு உதவி தேவைப்படும் நிலையில், அந்த ஊருக்கு அருகிலுள்ள எங்கள் நண்பர்கள் சென்று, அந்த உதவியைச் செய்து வருகிறோம். மதுரை, சேலம், காஞ்சி உட்பட, பல ஊர்களில் நிறைய உதவிகள் செய்திருக்கிறோம்.எங்களின் ஒரே தைரியம், ஆயிரக்கணக்கான, "பேஸ் புக்' நண்பர்கள், எங்களை கைவிட மாட்டார்கள் என்பது தான்!

1 கருத்து: