வெள்ளி, 27 ஜூலை, 2012

போராட்டங்களை உத்தரவுகள் என்ற பெயரில் நீதிமன்றத்தால் நசுக்க இயலாது.

"நந்திகிராமம் அனுபவம் தமிழ்நாட்டுக்கு வேண்டா'

தினமணி First Published : 27 Jul 2012 02:12:29 AM IST


சென்னை, ஜூலை 26: மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராமம், சிங்கூர் பகுதிகளில் ஏற்பட்ட அனுபவம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.  கொச்சி - கூட்டநாடு- மங்களூர் - பெங்களூர் இடையே குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெயில் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்துக்காக தமிழ்நாட்டின் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வழியே குழாய் பதிக்கப்பட உள்ளது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில் தங்கள் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து அந்த 7 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், குழாய் பதிக்கும் தங்கள் பணிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு மாநில உள்துறை செயலாளர் மற்றும் 7 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடக் கோரி கெயில் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு மனுவை தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டார்.  தங்களின் விவசாய நிலத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழலில், ஜனநாயக ரீதியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது என்பது இயல்பானதுதான். அத்தகைய ஜனநாயக ரீதியிலானப் போராட்டங்களை உத்தரவுகள் என்ற பெயரில் இந்த நீதிமன்றத்தால் நசுக்க இயலாது.  இதனை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்ற ரீதியில் அணுக முடியாது. விவசாயிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலான தீர்வினை ஏற்படுத்தும் கடமை அரசுக்கு உள்ளது.  ஏற்கெனவே இதுபோன்ற பிரச்னைகளில் மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்திலும், சிங்கூரிலும் ஏற்பட்ட சம்பவங்கள் நமக்கு அனுபவங்களாக உள்ளன. அதுபோன்ற அனுபவங்கள் தமிழகத்திலும் ஏற்பட்டு விடக் கூடாது.  உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பின் மூலமே எந்தத் தொழில் திட்டத்தையும் செயல்படுத்திட முடியும். இந்தப் பிரச்னையில் விவசாயிகளை சமாதானப்படுத்தி, சுமுகத் தீர்வினை ஏற்படுத்திடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. இதற்காக அரசு ஒரு உயர் நிலைக் குழுவை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சூழலில் திட்டத்தை செயல்படுத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கெயில் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக