வெள்ளி, 27 ஜூலை, 2012

உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகள் என்னென்ன?

உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகள் என்னென்ன?

dinamani First Published : 27 Jul 2012 12:31:15 AM IST


சென்னை, ஜூலை 26: பள்ளி வாகனங்கள் தொடர் விபத்துக்கு உள்ளாகி வருவதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, தீவிரமாகப் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் நடைமுறையில் பெரும்பாலான பள்ளிகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.  தமிழகத்தில் ஆண்டுக்கு 300-க்கும் மேற்பட்ட விபத்துகளில் பள்ளி வாகனங்கள் சிக்கி, மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தபோதும், தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களும் கடுமையாக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்களும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது, அதிகாரிகள் சட்டத்தைப் பின்பற்றுகிறார்களா என்ற சந்தேகத்தை பெற்றோரிடையே ஏற்படுத்தியுள்ளது.  கவனக்குறைவு, போதிய பராமரிப்பு இல்லாதது, அதிக நபர்களை ஏற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளி பஸ்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த விபத்துகளைக் குறைத்து பள்ளிச் சிறுமிகள் இறப்பதைத் தடுக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டம் மேலும் கடுமையாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.  உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள்:  * பள்ளி பஸ்களில் மஞ்சள் நிற வர்ணம் அடிக்க வேண்டும்  * பஸ்ஸின் முன்புறமும், பின்புறமும் -பள்ளி வாகனம்- என எழுத வேண்டும். தனியார் வாகனம் என்றால் -பள்ளி பயன்பாட்டுக்காக- என எழுத வேண்டும்  * பஸ்ஸில் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும்  * பஸ்ஸில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட வண்டும்  * பஸ் ஜன்னல்களில் படுக்கை வாக்கில் கம்பிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்  * விபத்தின்போது பஸ்ஸிலிருந்து எளிதாக வெளியேறும் வகையில் -அவசர வழி- ஒன்று பொருத்தப்பட வேண்டும்  * பஸ்ஸின் மீது பள்ளியின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் எழுதப்பட வேண்டும்  * பஸ்ஸின் கதவுகளில் முறையான பூட்டுகள் இருக்க வேண்டும்  * பஸ்ஸில் பயணம் செய்யும் குழந்தைகள் தங்களுடைய உடைமைகளை பத்திரமாக வைக்கும் வகையில் இருக்கைகளுக்கு அடியில் கேரியர்கள் வைக்க வேண்டும்  * பஸ்ஸில் குழந்தைகளுக்கு உதவ உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும்  * பஸ்ஸில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இருப்பதை பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ உறுதி செய்யவேண்டும். அல்லது, ஆசிரியர் ஒருவர் அந்த பஸ்ஸில் பயணிப்பது சிறந்தது  * பள்ளி பஸ்ஸின் டிரைவராக நியமிக்கப்படுபவர், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்  * ஓர் ஆண்டில் சிக்னலை மதிக்காதது, சாலையில் பஸ் வழித் தடத்தில் செல்லாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்தில் இரண்டு முறை சிக்கிய டிரைவரை பணிக்கு வைக்கக் கூடாது  * இதுபோல் அதிகவேகமாக வாகனத்தை ஓட்டியது, குடித்துவிட்டு பஸ்ûஸ ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களில் ஒரு முறை சிக்கிய டிரைவரை பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது.  * பள்ளி பஸ் ஒவ்வொரு ஆண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறுவது கட்டாயம்.  இந்த வழிகாட்டுதல்கள் அனைத்தையும், கேரள மாநில அரசு அம்மாநில மோட்டார் வாகனச் சட்டம் 1988-ல் இடம்பெறச் செய்யும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டுவந்து அதை 2010 மே மாதத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.  ஆனால், ஆண்டுக்கு 300 பள்ளி வாகன விபத்துகளுக்கு மேல் நடைபெறும் தமிழகத்தின் மோட்டார் வாகனச் சட்டத்தில் இதுபோன்ற சட்டத் திருத்தம் இதுவரை கொண்டுவரப்படவில்லை. மாறாக உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கையாக மட்டுமே அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக