வெள்ளி, 27 ஜூலை, 2012

கண்டுபிடிப்புகளுக்கு ஒதுக்கீடு வேண்டும்

சொல்கிறார்கள்
கண்டுபிடிப்புகளுக்கு ஒதுக்கீடு வேண்டும்
அரக்கை உருக்கி, "சீல்' வைப்பதற்கு, புதிதாக கருவியை கண்டு பிடித்துள்ள மாஷா நசீம்: என் சொந்த ஊர், கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை. தற்போது, சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன். என் அப்பா, நாகர்கோவில் கருவூலத்தில் அதிகாரியாக இருக்கிறார்.

உதவியாளர் இல்லாத வேளைகளில், அரக்கை உருக்கி, ஆவணங்கள், கடிதங்களுக்கு, "சீல்' வைப்பார். அரக்கை உருக்கும் போது, மெழுகு, உடல் மேலே சிந்தி, சிரமப்படுவார். அதற்குத் தீர்வு காண யோசித்த போது உருவானது தான், இந்த, "நெருப்பில்லா முத்திரை வைப்பான்' கருவி.

வெறும், 130 கிராம் எடையுள்ள இந்த கையடக்கக் கருவியில், அரக்குக் குச்சியை உள்ளே செலுத்தி, "சுவிட்ச் ஆன்' செய்தால், வட்ட வடிவில், "சீல்' விழுந்து விடும். கால் மணி நேரத்தில், மின்னல் வேகத்தில், 100 "சீல்'கள் வைத்து
விடலாம்.

தற்போது, நாடு முழுக்க தினசரி, ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட, "சீல்'கள், நெருப்பில் காட்டித் தான் வைக்கப்படுகின்றன. கடந்த சட்டசபைத் தேர்தலில், தேர்தல் கமிஷன் அனுமதியுடன், நாகர்கோவில் தொகுதியில் இரண்டு ஓட்டுச் சாவடிகளில், இந்த, "சீல் மேக்கர்' கருவியைப் பயன்படுத்தி, "சீல்' வைத்தனர்.

தமிழகம், கேரளா, குஜராத், டில்லி மாநில அரசுகளும், இந்த கருவியைப் பயன்படுத்துவது குறித்து, எனக்குக் கடிதம் எழுதியுள்ளன. இது, என் முதல் கண்டுபிடிப்பு அல்ல; என் கண்டுபிடிப்புகளுக்காக, நான் ஏற்கனவே, இரண்டு சர்வதேச விருதுகள், ஐந்து தேசிய விருதுகள், ஒரு தென்னிந்திய விருது, தமிழக அரசின் சிறப்புப் பரிசு என பெற்றிருக்கிறேன்.

விளையாட்டில் ஜொலிப்பவர்களுக்கு, படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் பல சலுகைகள் வழங்கி வருகிறது அரசு. அதுபோல், அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் என்னைப் போன்றவர்களுக்கு, அறிவியல் கோட்டாவில், இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்கினால், எங்கள் கண்டுபிடிப்புகளுக்கு அதிக நேரம் செலவிட முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக