வியாழன், 26 ஜூலை, 2012

பாடப்பகுதியில் இருந்து தமிழ் வாழ்த்துப் பகுதி நீக்கம்



தினத்தந்தி தஞ்சாவூர் பதிப்பு

பாடப்பகுதியில்  இருந்து தமிழ் வாழ்த்துப் பகுதி நீக்கம்

தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்

சென்னை,  சூலை 25 -
  பாடப் புத்தகத்தில்  இருந்து தமிழ் வாழ்த்துப் பகுதி நீக்கப்பட்டதற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாகத் தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவர்  இலக்குவனார் திருவள்ளுவன்  வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது : -

தமிழ் வாழ்த்துப் பகுதி

 9  ஆம் வகுப்பில் இருந்து தமிழ்ப்பாடநூல்களில் வாழ்த்துப் பகுதியில் முதலில் இறை வாழ்த்தும் அடுத்துத் தமிழ் வாழ்த்தும் இடம் பெறும்.  ஆனால், இப்பொழுது தமிழ்வாழ்த்துப் பகுதி எடுக்கப்பட்டு விட்டது.கருணாநிதியின் செம்மொழிப்பாடல் இடம் பெறுவதற்காகத்தான் இவை எடுக்கப்பட்டன எனப் பாடநூல் குழுவினர் வழி அறிய வருகிறது.

  செம்மொழிப்பாடல், பாடப்புத்தகத்தில் இடம் பெறாத பொழுது  தமிழ் வாழ்த்துப்பகுதியை எடுக்க வேண்டிய தேவையே இல்லை.மேலும், செம்மொழிப்பாடலை எடுத்தபின்பு தமிழ் வாழ்த்தைப் பள்ளிக் கல்வித்துறையினர் ஏன் சேர்க்கவில்லை.

நாட்டுப்பாடல்

  எல்லாப் பாட நூல்களிலும் நீராரும் கடலுடுத்தஎனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளதே. அது போதாதா என்கின்றனராம் அவர்கள்.சனகனமண என்னும் நாட்டுப்பாடல் எல்லாப் பாடங்களிலும இருந்தாலும் நாடடு வாழ்த்துப்பாடலும இடம் பெறுகிறது. அவ்வாறிருக்க தமிழ் மொழி வாழ்த்தை எடுக்க வேண்டிய தேவை என்ன?

 பள்ளிக்கல்வித்துறை சமச்சீர்க்கல்வி எனக்  கூறிக்கொண்டு பழந்தமிழ் இலக்கியங்கள் கற்பிக்கப்படுவதையும்  குறைத்துள்ளது ஏன்?   சமச்சீர்க்கல்வி அறிமுகப்படுத்துவதற்கு முன்பு 9 ஆம் வகுப்பில்  7 பிரிவுகளில் 24 இலக்கியங்கள் இருந்துள்ளன.  10 ஆம் வகுப்பில் 7 பிரிவுகளில் 28 இலக்கியங்கள் இருந்துள்ளன. ஆனால், சமச்சீர்க்கல்வி அறிமுகத்திற்குப்பின் 9 ஆம் வகுப்பில் 19  இலக்கியங்களும் 10 ஆம் வகுப்பில் 16 இலக்கியங்களும் மட்டுமே உள்ளன. மனப்பாடப்பகுதி வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

சுற்றறிக்கை
  சமச்சீர்க்கல்வி என்ற போர்வையில் தமிழுக்கு எதிரான செயல்பாட்டை மேற்கொண்ட  தமிழ்ப்பகைவர்கள் யார்?  முந்தைய ஆட்சியில் நடந்த தவறு என்று விட்டுவிடாமல் தமிழ்த்தேசிய உணர்விற்கு மதிப்பளிக்கும் இப்போதைய அரசு இதனை உடனே சரி செய்ய வேண்டும். 

  6 ஆம் வகுப்பில் இருந்தே வெவ்வேறு தமிழ் வாழ்த்துப்பாடல்களை ஒவ்வொரு வகுப்பிற்கும் அறிமுகப்படுத்தி அவற்றை மனப்பாடப் பகுதியாகவும் அறிவித்துச் சுற்றறிக்கை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக