புதன், 25 ஜூலை, 2012

தொழிலாளர்களின் நலனுக்காக த் தொழிலை மாற்றினேன்!

சொல்கிறார்கள்
 
மூடப்பட்ட தன் சாயப்பட்டறையை, பால் பண்ணையாக மாற்றியுள்ள சுப்ரமணி: திருப்பூர் மாவட்டம், வேட்டுவபாளையம் தான் என் சொந்த ஊர். அப்பா ஆறுமுகம் மாட்டு வண்டி ஓட்டி, அதில் வரும் வருமானத்தில் தான், எங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்தார். படிப்பின் அருமை தெரியாததால், ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி, அப்பாவிற்கு உதவியாக மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்படியே, ஆட்டோ, கார் போன்ற வண்டிகளையும் ஓட்டக் கற்றுக் கொண்டேன். சம்பாதித்து சேர்த்த பணத்துடன், வங்கியில் கடன் பெற்று, சொந்தமாக ஒரு கார் வாங்கி, டாக்சி டிரைவராக வேலை பார்த்தேன். அச்சமயத்தில் தான், திருப்பூரில் சாயப்பட்டறை அறிமுகமாகிக் கொண்டிருந்தது. அந்தத் தொழிலில் நன்றாக சம்பாதிக்கலாம் என, சிலர் அறிவுரை கூற, டாக்சியை விற்று, சாயப்பட்டறை ஆரம்பித்தேன். சாயப்பட்டறை ஆரம்பித்த புதிதில், 10 பேர் வேலை பார்த்தனர். பின், படிப்படியாக, 150 பேருக்கும் மேல் உயர்ந்தனர்; நல்ல லாபமும் வந்தது. இந்நேரத்தில் தான், கோர்ட் உத்தரவை மதித்து, சாயப்பட்டறையை மூடியே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சாயப்பட்டறையை மூடினாலும், சாப்பாட்டிற்கு எனக்கு பிரச்னை இல்லை. ஆனால், என்னை நம்பி வந்த தொழிலாளர்களை, வேலையில்லாமல் அனுப்ப எனக்கு மனமில்லை. அந்த இடத்தில் மாட்டுப் பண்ணை வைக்கலாம் என தோன்றியது. உடனே, அதற்கான வேலையில் இறங்கினேன். கோவை விவசாயப் பண்ணையில், மாடு வளர்ப்பு பற்றி, மூன்று மாதம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். 30 லட்சம் ரூபாய் முதலீட்டில், சாயப்பட்டறை இருந்த இடத்தை, மாட்டுப் பண்ணையாக மாற்றினேன். சாயப்பட்டறையில் வேலை பார்த்தவர்களுக்கு, இங்கு எப்படி வேலை பார்க்க வேண்டும் என, கற்றுக் கொடுத்தேன். தொழிலாளர்களும், சந்தோஷமாக வேலை செய்கின்றனர். என் பண்ணையில் இருந்து தினமும், 300 லிட்டர் பால், வீடுகளுக்கும், ஓட்டல்களுக்கும், "சப்ளை' செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக