“சரத் பொன்சேகா ஒரு திறந்தவெளிக் கைதியே” – சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா
பதியப்பட்ட நாள்May 23rd, 2012 நேரம்: 12:07
சிறையில்
இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி
சரத் பொன்சேகா ஒரு திறந்தவெளிக் கைதியே என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை
நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள விடுதலை பொதுமன்னிப்பின் அடிப்படையிலானது அல்ல.
அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ்
பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், ஒருவர் மீதான குற்றச்சாட்டு, அதன்
அடிப்படையில் குற்றவாளி என்று கருதப்பட்டு அளிக்கப்பட்ட தண்டனை, அதனால்
ஏற்படும் தகுதி நீக்கம் ஆகிய அனைத்தும் நீக்கப்படும்.
ஆனால் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழான பொதுமன்னிப்பு அல்ல.
அரசியலமைப்பின் 34-1 (டி) வது பிரிவின்படி
ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ சிறிலங்கா
அதிபர் நிறுத்தி வைக்கலாம்.
இதன் அடிப்படையில் வெள்ளைக்கொடி வழக்கில்,
உயர்நீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு வழங்கிய தண்டனையை சிறிலங்கா அதிபர்
முற்றாக நிறுத்தி வைத்துள்ளார்.
சரத் பொன்சேகா குற்றவாளி என்று,
நீதிமன்றம் விதித்த மூன்றாண்டு காலச் சிறைத் தண்டனையை சிறிலங்கா அதிபர்
நிறுத்தி வைத்துள்ளாரே தவிர, அவர் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு
அப்படியே உள்ளது.
இந்த விடயத்தில் அவருக்கு மன்னிப்பு ஏதும் வழங்கப்படவில்லை.
அதேவேளை, சிறிலங்கா இராணுவத்துக்கு
கருவிகள் வாங்கியதில் ஊழல் செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு
விவகாரத்தில் அவர் இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின்
அடிப்படையிலான தண்டனையின் ஒரு பகுதியைத் தான் சிறிலங்கா அதிபர் நிறுத்தி
வைத்துள்ளார்.
இந்த இரு வழக்குகளிலும் அவர் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டுள்ளார்.
இராணுவ நீதிமன்ற வழக்கின் தீர்ப்பின் காரணமாகவே சரத் பொன்சேகா குடியியல் உரிமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டது.
அந்த வழக்கில் இராணுவ நீதிமன்றம் அவருக்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இராணுவச் சட்டத்தின் அடிப்படையில்
தண்டிக்கப்பட்டவர்களுக்கு இத்தகைய சலுகையை வழங்க முடியாது என்று
சட்டமாஅதிபர் திணைக்களம் கருத்துக் கூறியதாக அறிய முடிகிறது.
இருந்தபோதிலும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் தண்டனைக் காலத்தை சிறிலங்கா அதிபர் குறைத்துள்ளார்.
அத்துடன் சரத் பொன்சேகா விடுவிக்கப்பட்டுள்ள போதும், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட குடியியல் உரிமைகள் மீள வழங்கப்படவில்லை.
இதன் மூலம் அவர் ஏழு ஆண்டுகளுக்குத் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.
என்றாலும், சரத் பொன்சேகாவுக்கு ஏனைய
அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் உரிமை உள்ளிட்ட உரிமை உள்ளது.“ என்றும்
அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக