வெள்ளி, 25 மே, 2012

திருகோணமலையில் பெயர்ப் பலகையில் தமிழ் அழிப்பு

திருகோணமலையில் பெயர்ப் பலகையில்

 தமிழ் அழிப்பு

trinco
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையினால் அதன் எல்லைக்குட்பட்ட சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்காம் கட்டை மற்றும் ஐந்தாம் கட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளுக்கு போடப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் ஆங்கிலம் என மும்மொழிகளிலான பெயர்ப்பலகைகளில் தமிழில் எழுதப்பட்ட பெயர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாறான இனக் குரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சி.நந்தகுமார் இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் பட்டினமும் சூழலும் பிரதேச சபை அமைந்துள்ளது. மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்த வீதிப் பெயர்ப் பலகைகளில் இருந்த தமிழ் மொழியில் எழுதப்பட்ட பெயர்களை கடந்த வாரத்திலிருந்து இனந்தெரியாவதர்கள் அழித்து வருகின்றனர். இது கவலைக்குரியது என்றும் இப் பிரதேசத்தில் நிலவும் இன ஐக்கியத்தை விரும்பாத விஷமிகளே இதன் பின்னணியிலிருந்து செயற்படுவதாகவும் நகர சபை உறுப்பினர் நந்தகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு சமூகங்கள் தங்களுக்கு இடையேயான பேதங்களை மறந்து ஒன்றிணைவதைத் தடுக்கும் செயலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. இவ் விஷமிகளுக்கு தமிழ் மொழி மீது ஏன் இந்த கொலை வெறித்தனம் என்பது எமக்குப் புரியவில்லை. என்று நகர சபை உறுப்பினர் நந்தகுமார் அறிக்கையில் கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக