வெள்ளி, 25 மே, 2012

"மனக் காயத்திற்கு மருந்திடுகிறேன்!'ஆதரவற்ற பெண்களுக்கு, ஸ்ரீ மகா ஹோம் கேர் என்ற இல்லம் மூலம் உதவிகளை செய்யும் ஆலிஸ்: என் சொந்த ஊர் நெல்லை. டிரைவர் ஒருத்தரைக் காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு, குடியாத்தத்தில் குடியேறினோம். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தனர். கொஞ்ச நாளில், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு கொடுமைகளை அனுபவித்தேன். குழந்தைகளுடன் சென்னையில் உள்ள சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு சென்றேன். யாரும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்காவது மணல் கொட்டிக் கிடந்தால், அன்று அது தான் என் வீடு. மணலில் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு, அங்கேயே கண் அசந்து தூங்கிவிடுவேன். அப்படி ஒரு நாளில் தான் மகாலட்சுமி என்பவரை சந்தித்தேன். அவர், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு அமைப்பை நடத்திக் கொண்டிருந்தார். அதில் என்னை சேர்த்துவிட்டு, ஒரு வீட்டில் சமையல் வேலைக்கு அனுப்பினார். பின், அவரின் அலுவலகத்திலேயே வேலை கொடுத்தார். நல்ல அனுபவம் கிடைத்தது. தற்போது, அவர் மும்பையில் இருக்கிறார். அவரின் பேரிலேயே ஒரு அமைப்பை ஆரம்பித்தேன். எனக்கு அவர் செய்ததைத் தான், நான் மற்ற பெண்களுக்கு செய்கிறேன். ஆதரவற்ற பெண்களுக்கு மட்டுமல்ல, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், தனிமையில் உள்ள மூதாட்டிகள் என, பலருக்கும் உதவுகிறோம். சில பெண்கள், குழந்தைகளுடன் வந்துவிடுவர். அந்த சமயத்தில், அந்த குழந்தைகளின் கல்விக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம். இங்கு வரும் பெண்களுக்கு, சமையல், வீட்டு வேலை, குழந்தைகள் பராமரிப்பு, நோயாளி பராமரிப்பு உள்ளிட்ட வேலைகள் கிடைக்க உதவிகள் செய்கிறேன். என்னைத் தேடி வரும், ஒவ்வொரு பெண்களுக்கும், ஏகப்பட்ட கண்ணீர்க் கதைகள் உண்டு. முடிந்தவரை அவர்கள் மனக்காயத்திற்கு மருந்திடுகிறேன். தொடர்புக்கு: 044 - 65681213

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக