சனி, 26 மே, 2012

"சமூக அவலங்களைப் பேசும் ஓவியம்!'



ஓவியர் முகிலன்: இந்த சமூகத்தின் மீது நான் வைக்கும் விமர்சனம் தான் என் ஓவியம். வெறும் ரசனை சார்ந்தது மட்டுமல்ல, எந்த ஒரு கலைப்படைப்புமே, அதைச் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என நம்புகிறேன். அதனால், சமூகம் என் ஓவியங்களில் பிரதிபலிக்கிறது. அடிப்படையில் ஒவ்வொரு கலைஞனும், தான் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதிதான். நானும் ஓவியங்களின் வழியாக ஒடுக்கப்படும் மக்களின் சார்பாக பேசுகிறேன்.என் ஓவியங்கள், நான் சார்ந்த அரசியலின் கருத்துக்களை பிரதிபலித்தாலும், அவற்றை வெறும் பிரசாரம் என ஒதுக்கிவிட முடியாது. சென்னை கவின் கலைக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போதே, துவங்கிய அரசியல் ஆர்வமும், அதன் மூலம் கிடைத்த அனுபவங்களும் தான், என் ஓவியங்களின் உள்ளடக்கத்தை மாற்றியது. இல்லையேல், நானும் மற்றவர்களைப் போல, இயற்கை ஓவியங்கள் வரைந்து கொண்டு இருந்திருப்பேன். ஒரு கிராமத்தை ஓவியத்திற்குள் கொண்டு வருதல் என்பது, மாட்டு வண்டி, தலையில் கலையம் சுமந்த பெண்கள், மருதாணி விரல்கள் என்பது மட்டுமல்ல; கிராமங்களின் சமூகப் பிரச்னைகளை சொல்வதும் தான்.ஜாதியும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், இரட்டை குவளை முறையும் தான் என்னை வெகுவாகப் பாதித்துள்ளன. கிராமம் என்றால் எனக்கு அவைகள் தான் கண்ணுக்குத் தெரிகிறது. பாஸ்கோ ஆலைக்காக மலைகளை தாரைவார்ப்பதை, பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்காக நீர் நிலைகளைக் கையளிப்பதை என் ஓவியங்கள் வேறு கோணத்தில் பிரதிபலிக்கின்றன.எனக்குக் கிடைத்த ஆயுதமாகத்தான் நான் தூரிகையைப் பார்க்கிறேன். வணிக ரீதியாக இதுவரை என் ஓவியங்களை விற்பனை செய்தது இல்லை. எவரும் வாங்கியதும் இல்லை. மலம் வாளி சுமக்கும் ஓவியத்தை எந்த வரவேற்பறையில் வைப்பர். ஆனால், அது தான் என் ஓவியங்களின் தனித் தன்மையாக இருக்கிறது. சில நேரங்களில் நான் எதை வரைய வேண்டும் என்பதைவிட, எதை வரையக் கூடாது என்பதில் தான் தெளிவாக இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக