தமிழ்ப் பல்கலைக் கழகப் பாதுகாப்பு இயக்கம்
38, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.
பேசி
: 9445237754
நாள் : 22-5-2012
பேரன்புடையீர், வணக்கம்.
உலகின் முதல் செம்மொழியாகவும் நம் மொழியாகவும் உள்ள தமிழ்மொழிக்கென உள்ளது ஒரே
ஒரு பல்கலைக் கழகம். அது தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம். தமிழ்ப் பல்கலைக்
கழகத்தை 1981ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் அப்போதைய தமிழக
முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அதற்கென ஆயிரம்
ஏக்கர் நிலம் ஒப்படைத்தார்.
அப் பல்கலைக் கழகத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தகுதிமிக்க தமிழறிஞரான முனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் முதல் துணைவேந்தராக
இருந்து
பல்வேறு அறிஞர் பெருமக்கள்
கருத்துகளைக் கேட்டு, பல்துறைஆராய்ச்சித்
துறைகளை நிறுவினார். வேற்றுமொழித் துறைகளும், வெளிநாட்டு மாணவர்களுக்கான பயிற்சி அமைப்புகளும்
உருவாக்கப்பட்டன.
மருத்துவம், பொறியியல், சட்டம்
உள்ளிட்ட உயர்கல்வி அனைத்தையும்
தமிழ் வழியில் கற்பிக்கப் பாடநூல்
உருவாக்கப் பணிகள் தொடங்கப்பெற்றன. அவற்றிற்கான கல்லூரிகள் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் தொடங்கவும்
திட்டமிடப்பட்டது.
இவ்வளவு தொலைநோக்கோடும், திட்டங்களோடும்
தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக் கழகம் பின்னர் யாரும் கவனிக்காத அனாதைக் குழந்தைபோல் ஆக்கப்பட்டுவிட்டது.
மாதந்தோறும் சம்பளம் வழங்கவே பணம் இல்லாமல் அப்பல்கலைக் கழகம் திண்டாடுகிறது. பொறியியல், சட்டம் ஆகியவற்றிற்கான கல்லுரிகள்
தொடங்கும் முயற்சிகள்
முடமாகிக் கிடக்கின்றன.
1995இல் நடந்த உலகத்
தமிழ் மாநாட்டிற்கு வரும்
பேராளர்கள் தங்குவதற்காகக்
கட்டப்பட்ட வீடுகள் வணிக நோக்கில் தனியாரிடம் விடப்பட்டன. அப்பொழுதும், பிறகும் பல்கலைக்கழக வளாகத்தில்
50 ஏக்கர்
நிலம் தமிழ்நாடு வீட்டுவசதி
வாரியத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. அந்த வாரியம் வீடுகட்டித் தனியாருக்கு விற்றுவிட்டது.
இப்பொழுது பல்கலைக் கழக முதன்மை வாயிலுக்கு அருகே 62 ஏக்கர் நிலம் எடுத்து தஞ்சை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற
வளாகம் ஆகியவை கட்ட தமிழக அரசு
ஒப்படைத்துள்ளது.
எனவே, தமிழ் மக்களின்
உயிராகவும் வாழ்வாகவும் உள்ள
தமிழ் மொழிக்கென இருக்கும்
ஒரு பல்கலைக் கழகத்தையும் அழியவிடாமல்
பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டுத் தமிழருக்கும் உலகெங்கும் உள்ள தமிழருக்கும் இருக்கிறது .
தமிழ்ப் பல்கலைக் கழக நிலத்தைப்
பாதுகாக்கவும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி கலந்து பேசி முடிவுகள் எடுக்க 24.05.2012 வியாழன்
மாலை 4.00 மணிக்குச் சென்னை, திருவல்லிக்கேணி, நீலி வீராசாமித் தெருவிலிருக்கும் தமிழ்நாடு
அரசு அலுவலர் ஒன்றியம், சிவ. இளங்கோ
இல்லத்தில் கலந்தாய்வுக் கூட்டம்
நடைபெற இருக்கிறது.
அரசியல் சார்பற்று, இக்கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தர்களும், தமிழறிஞர்களும், இன உணர்வாளர்களும் கலந்துகொள்கிறார்கள். தாங்கள்
அவசியம் கலந்துகொண்டு கருத்துகள்
வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தங்கள் அன்புள்ள,
பெ. மணியரசன் பா.
இறையெழிலன்
அமைப்பாளர்
சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக