சனி, 26 மே, 2012

சிறிலங்கா அரசால் கைவிடப்பட்ட தமிழர்களும் கணவரை இழந்த பெண்களும்

சிறிலங்கா அரசால் கைவிடப்பட்ட தமிழர்களும் கணவரை இழந்த பெண்களும் – மதகுருமார் குற்றச்சாட்டு

Vanni Refugees-July-2008-16
“தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மொழி பேசத் தெரியாத சிங்கள வைத்தியர்கள், தமிழ்ப் பிரதேசங்களில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால் நோயாளிகளுகளுடன் நேரடியாகப் பேசமுடியாத நிலை காணப்படுகின்றது” என தென் சிறிலங்காவைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுரு ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு AsiaNews செய்தித் தளத்திற்காக Melani Manel Perera எழுதிய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
அந்த செய்திக்குறிப்பின் விபரமாவது,
சிறிலங்காவின் வடக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கமே காரணம் என யாழ்ப்பாணத்தில் கூடிய கத்தோலிக்க மதகுருமார்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், நீர், மின்சாரம், மலசலகூட வசதிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் எந்தவித நிதி சார் உதவிகளும் கிடைக்கப் பெறாத யுத்தத்தில் கணவன்மாரை இழந்த 184 பெண்கள் தற்போதும் தற்காலிக வீடுகளில் வாழ்கின்றனர்.
சிறிலங்காவில் தமிழர் அதிகம் வாழும் வடக்குப் பகுதியில் மதசார் விழாக்கள் மேற்கொள்ளப்படுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒன்றுகூடல்களை மேற்கொள்வதற்கான சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும், பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த கலாசாரங்கள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிறீஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பின் [Christian Solidarity Movement - CSM] சந்திப்பொன்றில் கலந்து கொண்ட சிறிலங்காவின் தென்பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர்.
“சிறிலங்காத் தீவின் தேசிய இனமாக தமிழ் மக்கள் அடையாளங் காணப்பட்டு அங்கீகரிப்பதற்கான அரசியற் தீர்வொன்று இன்றியமையாததாகும்” என இச்சந்திப்பில் கலந்துகொண்ட மதகுருமார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் வாழும் போரில் தமது கணவன்மாரை இழந்த பெண்கள் நாளாந்தம் சந்திக்கும் பிரச்சினைகளும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த முப்பது ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் ஒன்று தொடரப்பட்டது. இதில் புலிகள் அமைப்பு தமது சொந்த மக்களாகிய தமிழ் மக்களுக்கு தனிநாடு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக இந்த யுத்தத்தை தொடர்ந்தனர்.
இவ்வாறு பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தமானது புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தும், புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் முடிவுக்கு வந்தது. இந்த யுத்தத்தின் போது கணக்கிடமுடியாத இழப்புக்கள் ஏற்பட்டன.
இந்த யுத்தத்தின் விளைவாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த 200,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில் தென்னிலங்கையில் வாழ்ந்த சிங்கள மக்கள் மிகச் செழுமையான வாழ்வை வாழ்ந்தனர். இதனால் சிறிலங்காத் தீவில் வாழும் இவ்விரு இனங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் உருவாவதற்கு யுத்தம் காரணமாக அமைந்தது.
யுத்தம் முடிவுற்றதிலிருந்து, மதத் தலைவர்களும் உள்ளுர் மற்றும் அனைத்துலக மட்ட அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழ் மக்கள் தற்போதும் பாதிக்கப்பட்ட மக்களாக வாழ்வதுடன், அவர்களது தேவைகள் கவனிக்கப்படாது உள்ளதாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவ மதகுருமார்களின் சந்திப்பிலும் தமிழ் மக்கள் படும் துன்ப துயரங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. “தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மொழி பேசத் தெரியாத சிங்கள வைத்தியர்கள், தமிழ்ப் பிரதேசங்களில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால் நோயாளிகளுகளுடன் நேரடியாகப் பேசமுடியாத நிலை காணப்படுகின்றது” என தென் சிறிலங்காவைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுரு ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெலிககண்டிய, கோவெலி, தும்பலச்சோலை, கித்துல், உறுகாமம் போன்ற ஐந்து கிராமங்களில் மட்டும் யுத்தத்தில் கணவன்மாரை இழந்த 184 பெண்கள் வாழ்கின்றனர். இவர்கள் அடிப்படையில் நீர், மின்னசாரம் மற்றும் மலசலகூட வசதிகள் எதுவும் வழங்கப்படாது தற்காலிக வீடுகளில் தற்போதும் வாழ்ந்துவருகின்றனர்.
“இவை இந்தப் பெண்கள் சந்திக்கின்ற மிகப் பாரிய பிரச்சினைகளாகும். இவ்வாறான அடிப்படை வசதிகள் உடனடியாக செய்துதரப்பட வேண்டும். இது தொடர்பாக நாங்கள் அறிக்கை ஒன்றின் மூலம் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடமும் தெரியப்படுத்தியுள்ளோம்” என வடக்கு கிழக்கு பெண்கள் நிகழ்ச்சித் திட்டமான Nafso இன் ஒருங்கிணைப்பாளரான லவீனா தெரிவித்தார்.
இந்தக் கிராமத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமுர்த்தி திட்டத்தின் கீழ் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த 250 குடும்பங்கள் எந்தவொரு உதவியையும் பெற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் வறிய மக்களுக்கு வழங்கப்படும் தேசிய சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களுக்குள் உள்வாங்கப்படவில்லை. இங்கு வாழும் 647 குடும்பங்கள் மலசலகூட வசதியின்றியும் 780 குடும்பங்கள் குடிநீர் வசதி இன்றியும், 790 குடும்பங்கள் மின்சார வசதி இன்றியும், 584 குடும்பங்கள் நிரந்தர வீடுகளைப் பெறமுடியாதவர்களாகவும் வாழ்வதாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக