போர்க்குற் ற விசாரணையில் இருந்து திசை
திருப்புகி றார் பிரதமர் – சீமான் அறிக்கை
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள பதில், போர்க்குற்ற விசாரணையில் இருந்து திசைதிருப்புவதாகவே உள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கையாகும். அதனால்தான் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், மக்களும் ஒருமித்த குரலில் மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்தனர். ஆனால் இன்று நாடாளுமன்ற மக்களவையில் அதற்கு பதில் அளித்து பிரதமர் ஆற்றிய உரையில், அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா இல்லையே என்பது தொடர்பான உறுதியான நிலை தெளிவுபடுத்தப்படவில்லை.
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமையும், கெளரவமான வாழ்க்கையும், நீதியும், சுய-மரியாதையும் உறுதிபடுத்தப்பட்ட எதிர்காலமே இந்திய அரசின் இலக்கு என்றும், அதனை உறுதிப்படுத்துவதாக அமெரிக்கத் தீர்மானம் இருக்குமானால் அதனை இந்தியா ஆதரிக்கும் சாத்தியமுள்ளது என்றுதான் பிரதமர் தனது பதிலில் கூறியுள்ளார். இது பிரச்சனையை திட்டமிட்டு திசை திருப்பும் வார்த்தைகளாகும். இலங்கையில் தமிழர்களுக்கு நல்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்பதை ராஜபக்ச அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. தமிழினத்தை கொன்ற ராஜபக்ச அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதுதான் தமிழர்களின் கோரிக்கை. அதற்கான வாய்ப்பு உருவாக வேண்டுமெனில், அங்கு நடந்த போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். அமெரிக்கத் தீர்மானத்தில் விசாரணை நடத்துவதற்கான கோரிக்கை உள்ளது. எனவேதான் அதனை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
இதற்கு நேரடியாக பதிலளிக்காமல், தமிழர்களின் எதிர்காலத்தைப் பற்றியும், இணக்கப்பாடு பற்றியும் பிரதமர் பேசுவதும், அது பற்றி அமெரிக்கத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டால் மட்டுமே அத்தீர்மானத்தை ஆதரிப்போம் என்று கூறுவதும் ஏமாற்றுச் செயலாகும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். திட்டமிட்ட இந்த இனப் படுகொலையை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்து அதற்குக் காரணமாக இருந்த இலங்கை அரசையும், அதற்கு உதவிய நாடுகளையும் குற்றவாளியாக்க வேண்டும் என்பதே தமிழினத்தின் கோரிக்கையாகும். அதைப்பற்றிப் பேசாமல் தமிழர்களின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகிறார் மன்மோகன் சிங். தமிழர்களின் வாழ்விலும் எதிர்காலத்திலும் காங்கிரஸ் அரசுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை தமிழர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. பிரதமர் கூறிய வார்த்தைகளில் உள்ள உண்மையை புரிந்துகொள்ளாமல், அவர் அளித்த பதிலை ஒரு வெற்றியாக கொண்டாடுகிறது தி.மு.க. ஆங்கில வார்த்தைகளால் தன் குற்றத்தையும் மறைத்து, இலங்கையின் குற்றத்தையும் மறைக்கவே மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இதனைப் புரிந்துகொள்ள வக்கற்ற தி.மு.க. தலைமை பிரதமர் அளித்த பதிலில் புளங்காகிதம் அடைந்து பெருமை பாராட்டிக்கொள்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும், கெளரவமும், சுய மரியாதையுடன் கூடிய எதிர்காலமும் கிடைக்க வேண்டுமென்றால் அது தனித் தமிழ் ஈழம் அமைந்தால்தான் உறுதியாகுமே தவிர, பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதுபோல், தமிழினத்தைக் கொன்று குவித்த இனவெறியாளன் ராஜபக்சவின் ஆட்சியில் நடக்காது. புள்ளி விவரங்களைக் கூறி பொருளாதார வளர்ச்சி இருப்பதாக ஏமாற்றும் பிரதமர் மன்மோகன் சிங், தமிழர் பிரச்சனையில் எதிர்காலத்தைப் பற்றிப் பேசி ஏமாற்றப் பார்க்கிறார். இதில் தமிழர்கள் எச்சரிக்கயாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக