வியாழன், 22 மார்ச், 2012

     சொல்கிறார்கள்                                                                                                                 
 
 
                                     "தோல்வியை நாசூக்காக சொல்லணும்!'
இந்தியக் குழந்தைகள் நலச் சங்கத்தின் கவுரவ இணைச் செயலர் கிரிஜா குமார்: குழந்தைகள் வளர வளர அவர்களுக்குள் தங்களைப் பற்றிய ஒரு பாசிட்டிவ் சுய பிம்பமும் சேர்ந்தே வளரும். கேரம் போர்ட் கேமில் நான் கில்லி, எனக்கு கணக்கில் அதிக ஆர்வம் உண்டு, ஓட்டப் பந்தயத்தில் நான் தான் எப்போதும் முதன்மையானவன் என்று தன் மீது ஒரு குழந்தை கொண்டிருக்கும் சுய பிம்பம் வளரும். இதற்கு அந்தக் குழந்தை தன்னை திறமை மிக்கவனாக உணரக் கூடிய துறை சார்ந்த போட்டிகளில் பங்கேற்க வேண்டியது அவசியம்.உதாரணமாக, நான் நன்றாக ஓவியம் வரைவேன் என்று உணரும் குழந்தை, தொடர்ந்து ஓவியப் போட்டிகளில் பங்கேற்கும் போது, ஓவியம் குறித்த அதன் திறமையும், தன்னம்பிக்கையும் மெருகேறும்.போட்டிகள் என்பது சிறந்த படிக்கட்டுகள், தோல்விகள் என்பது சிறந்த அனுபவங்கள். ஆனால், அந்தத் தோல்வியை சம்பந்தப்பட்ட குழந்தைக்கு உணர்த்தும் விதம் பக்குவமானதாக இருக்க வேண்டும். அந்தக் குழந்தையின் தோல்வியை மற்றவர்கள் முன் வெளிச்சமிடாமல், "சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தான் வெற்றியை நழுவ விட்டிருக்கிறாய். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்தால், பரிசு உனக்குத் தான்' என்று, அதன் கை பிடித்து, பேசினால், அந்தக் குழந்தையை தோல்வி பாதிக்காது.ஆனால், நம் சேனல்களில் நடப்பதோ வேறு விதமாக உள்ளது. ஒரு பாடலைப் பாடுவதிலோ, நடன அசைவுகளிலோ ஒரு குழந்தை சிறிது பிசகினால், கேமரா முன், நடுவர்களின் கண்டிப்பு அநியாயம்.பொதுவாக, எந்தக் குழந்தைக்குமே தோல்வி பிடிக்காது. "நீ தோற்று விட்டாய்' என்பதை அழுத்தமாகக் கூறி, அந்தக் குழந்தை அதுவரை தன்னைப் பற்றி வளர்த்து வந்த சுய பிம்பத்தையும், தன்னம்பிக்கையையும் கேமராவின் காலடியில் போட்டு நசுக்குகின்றனர். போட்டியில் சில இடங்களில், தடுமாறும் குழந்தைகளிடம், திட்டாமல், அவர்கள் அழுவதை காட்டாமல், தோல்வியைக் கூட தோள் பிடித்து அன்பாகச் சொல்லும் ஆரோக்கிய அணுகுமுறை, அனைத்து சேனல்களிலும் வர வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக