தரமற்ற குளிர்பானங்கள், பழச்சாறுகள் விற்பனை தடுக்கப்போவது யார்?
First Published : 22 Mar 2012 03:06:27 AM IST
கடலூர், மார்ச் 21: கோடை காலம் நெருங்கி விட்டது. இதனால் குளிர்பானங்களின் தேவை, வெயிலின் கடுமையைத் தணிக்க, தர்ப்பூசணி போன்ற பழங்களின் தேவையும் அதிகரித்து உள்ளது.கோடை நெருங்கி விட்டதால், சாலைகளின் ஓரங்களில் எல்லாம் பழச்சாறுகள் விற்கும் கடைகள், தர்ப்பூசணி போன்ற பழங்கள் விற்கும் கடைகள், கரும்புச் சாறு விற்பனைக் கடைகள் புற்றீசல் போலப் பெருகி விட்டன. சாலைகளின் நடைபாதைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு, பழங்களாலும், குளிர்பானங்கள் தயாரிக்கத் தேவையான பொருள்களாலும் நிரம்பிக் கிடக்கின்றன.நேற்று வரை சாக்கடை வழிந்தோடும் இடங்களாக, அசுத்தத்தின் புகலிடமாக இருந்த இடங்கள் எல்லாம், பாலித்தீன் ஷீட்டுகளால் கூரை வேயப்பட்ட பழக் கடைகளாகவும், குளிர்பானக் கடைகளாகவும், ஐஸ்கிரீம் விற்பனை நிலையங்களாகவும் மாறியிருக்கின்றன. ÷இக்கடைகளில் மாணவர்களின் கூட்டம் மொய்க்கத் தொடங்கி இருக்கிறது. இவற்றில் ஈக்களின் கூட்டமும் மொய்த்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதும் கவலை தரும் விஷயமாக உள்ளது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எத்தகைய சுகாதார விழிப்புணர்வும் இன்றி இவற்றில் பழங்களையும், பழச்சாறுகளையும் குளிர்பானங்களையும் வாங்கி உட்கொள்ளும் நிலை, விவரம் அறிந்தவர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது.பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலியான குளிர்பானங்களின் விற்பனைக்கு, எவ்விதக் கட்டுப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. வீடுகளில் தயாரிக்கப்படும் பானங்கள் பலவும் தரமற்ற பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு, கடைகளில் அழகாக விற்பனைக்குத் தொங்க விடப்பட்டு உள்ளன. இவை எப்போது தயாரிக்கப்பட்டவை? அவற்றின் தரமும், சுகாதாரமும் என்ன? அவை எத்தகைய தண்ணீரில் தயாரிக்கப்பட்டவை? என்று யாருக்கும் தெரியாது.பிராண்டட் நிறுவனங்கள் அன்றி, பலரும் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் தயாரிக்கும் பானங்கள், பழச்சாறுகள் விற்பனைதான் சந்தையில் அதிகம் காணப்படுகிறது. ÷இந்த பானங்கள், பழச்சாறுகள் நல்ல சுகாதாரமான குடிநீரில் தயாரிக்கப்பட்டவைகளா? அவற்றுக்கு சுகாதார அதிகாரிகள் யாராவது சான்று அளித்து இருக்கிறார்களா? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத விஷயம்.பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் உள்ள இடங்கள் ஆகியவற்றில்தான் இத்தகைய தரமற்ற பழச்சாறு, குளிர்பானங்கள் விற்பனை தற்போது அமோகமாகக் காணப்படுகிறது.சுகாதாரமற்ற குடிநீர், கடைகளில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவு வகைகள் பற்றியெல்லாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று, அவ்வப்போது நடைபெறும் விழாக்களில் மட்டும் தெரிவிக்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள், இத்தகைய திடீர் சாலையோர குளிர்பானக் கடைகளுக்கும், பழச்சாறு விற்பனை நிலையங்களுக்கும், பழக்கடைகளுக்கும் எத்தகைய சான்றளிக்கப் போகிறார்கள்? விலை குறைவு என்பதற்காக, அவற்றின் மோசமான விளைவுகளை எண்ணிப்பாராமல், வெயில் கொடுமையால் பலரும் இச்சாலையோரக் கடைகளில் தஞ்சம் புகுந்து விடுகிறார்கள்.இந்தியாவில் உணவுப் பாதுகாப்புக்கு ஏராளமான சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் வந்து விட்டன. அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. ஆனால் இத்தகைய சுகாதாரமற்ற பானங்களுக்கும் அவற்றை விற்பனை செய்யும் விதிமுறைகளுக்குப் புறம்பான நடைபாதைக் கடைகளுக்கும் கடிவாளமிடப் போவது யார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக