செவ்வாய், 20 மார்ச், 2012

new research programmes in Humanities dept. of CICT - செம் மொழி மானிடவியல் துறையில் புதிய ஆய்வுகளுக்குத் திட்டம்

செம்மொழி மானிடவியல் துறையில் புதிய ஆய்வுகளுக்குத் திட்டம்

சென்னை : செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துவங்கப்பட்டுள்ள மானிடவியல் துறை சார்பாக, சமயம், மருத்துவம், சுற்றுச்சூழல் உறவு உள்ளிட்ட பிரிவுகளில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு உள்ளது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், வரலாறு, சமூகவியல், மானிடவியல் என, புதிய துறைகள் துவங்கப்பட்டுள்ளன. வரலாறு, சமூகவியல், மானிடவியல் ஆகியன, தனித்தனித் துறைகளாக இருந்தாலும், செம்மொழி ஆய்வு நிறுவனத்தில், ஒரே துறையாக இணைக்கப்பட்டு துவங்கப்பட்டுள்ளது.
இத்துறையின் சார்பாக, தமிழ் பண்டைய மானிடவியல் ஆய்வு பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று துவங்கியது. இதில், பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணைவேந்தர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன முதுநிலை ஆய்வாளர், சுந்தரமூர்த்தி வரவேற்றார்.

கணினியில் பதிவு
வரலாறு, சமூகவியல், மானிடவியல் துறைத் தலைவர் ராமசாமி தலைமை வகித்து பேசியதாவது: கர்நாடக மாநிலம் மைசூரில் தமிழ் மொழி ஆய்வு மையம் இயங்கி வந்தது. 2008 முதல் சென்னைக்கு மாற்றப்பட்டு செம்மொழி தமிழ் ஆய்வு மையமாக தொடங்கி செயல்பட்டு வருகிறது. சென்னையில் தொடங்கப்பட்டது முதல், தமிழில் உள்ள ஓலைச் சுவடிகள், கல்வெட்டு ஆகியவற்றில் உள்ள செய்திகளை கணினியில் பதிவு செய்தல் உள்ளிட்ட, 10 திட்டங்களைக் கொண்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிறுவனத்தில் 12 துறைகள் உள்ளன. தற்போது, வரலாறு, சமூகவியல், மானிடவியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே துறையாக துவங்கப்பட்டு உள்ளது. இத்துறைமூலம், என்னென்ன ஆய்வுகளைச் செய்யலாம் என்பது பற்றி திட்டமிட கலந்தாய்வு நடக்கிறது.

தொல்காப்பியத்தின் சிறப்பு
தமிழின் காலத்தை 1,500 ஆண்டுகள் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி, தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். மேலும், சங்க இலக்கியங்கள் போன்றவை, தொடர் தமிழ் ஆய்வுகளுக்குக் கை கொடுக்கின்றன. மானிடவியலை, நேற்று, இன்று, நாளை என வகுத்துக் கொண்டால், மொழி மானிடவியல், சமூக, பண்பாட்டு மானிடவியல், உயிரியல் மானிடவியல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளை கொண்டுள்ளது.
மானிடவியல் வளர்ச்சி, தனியான வளர்ச்சியைக் கொண்டுள்ளதாகவே தொல்காப்பியத்தில் சொல்லப்படுகிறது. மேலும், உயர்திணை, அஃறிணை என்பதையும் தொல்காப்பியம் மட்டுமே கையாள்கிறது. இந்நிலையில், மானிடவியல் தொடர்பான ஆய்வை உலகளாவிய முறையில் செய்ய வேண்டும். அதற்கான சிந்தனைகளை வரவேற்பதற்காகவே, இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

ஆய்வுக்கு வழிகாட்டுவோம்
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கப்பட்ட பின், பல்வேறு தமிழ் அறிஞர்களைக் கொண்டு நடத்தப்படும் முதல் கலந்தாய்வுக் கூட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதுவரை நடந்துள்ள ஆய்வுகளை பரிசீலனை செய்து, அதன் நிறை, குறைகளை அறிந்து, புதிய ஆய்வுகளை மானிடவியலில் மேற்கொள்ள, வழிகாட்டுதல்களை இக்கருத்தரங்கம் அளிக்கும்.
தமிழர்களின் சமயம், பண்பாடு, மருத்துவம், உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் உறவு, விலங்குடனான தொடர்பு போன்றவை பற்றி, உலகளாவிய பார்வையை உருவாக்க வேண்டும். மேலும், ஆய்வுகளின் எல்லைகளையும் வரையறுக்க வேண்டும்.
தமிழ்ப் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரின் பங்களிப்பை இந்த ஆய்வுகளுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு ராமசாமி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக