சிறுநீரகப் பிரிவு சிறப்பு மருத்துவர் சம்பத்குமார்:
சர்க்கரை வியாதியும், ரத்தக் கொதிப்பும் தான் சிறுநீரகக் கோளாறுக்கு மூல காரணம். சிறுநீரக பாதிப்பு வராமல் தடுக்க, மூன்று விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, நம் உடலுக்கு ஒரு நாளைக்கு ஆறு கிராம் உப்பு போதும். ஆனால், நாம் 10 முதல் 12 கிராம் உப்பு சாப்பிடுகிறோம். குறைந்தபட்சம் ஆறு கிராம் உப்பிலேயே ரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்புண்டு. ரத்தக் கொதிப்பு சிறுநீரகத்தைப் பாதிக்கும். கூடவே, சர்க்கரை நோயாலும் கிட்னி பாதிக்கும். எனவே, உப்பை படிப்படியாகக் குறைத்துக் கொள்ளுதல் சிறுநீரகத்திற்கு நன்மை தரும்.இரண்டாவது, சிகரெட் பழக்கம். இது நுரையீரலை மட்டுமல்ல, சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடியைவிட அதிகமாக சிகரெட்டால் தான் சிறுநீரகத்திற்கு ஆபத்து.மூன்றாவது, மருத்துவரின் அனுமதியின்றி, எடுக்கும் வலி நிவாரண மருந்தும் சிறுநீரகம் செயலிழக்க ஒரு காரணியாக அமைகிறது. எனவே, இந்த மூன்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால், சிறுநீரகம் பாதிக்காது.சீனாவில், சோடியம் குளோரைடு என்று நாம் பயன்படுத்தும் சாதாரண உப்புக்கு மாற்றாக 50 சதவீதம் சோடியம் குளோரைடு, 50 சதவீதம் பொட்டாசியமும், மெக்னீசியமும் கலந்து புதிய உப்பை அறிமுகப்படுத்தி, அதை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால், அங்கு ரத்தக் கொதிப்பு நோயும் சிறுநீரகக் கோளாறும் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. நம் அரசும் இந்த முயற்சியைக் கவனத்தில் கொண்டால் நல்லது.சிறுநீரகப் பிரச்னை வராமல் தப்பிக்க, அரிசியைக் குறைத்து நார்ச்சத்துப் பொருட்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்; மருத்துவரின் ஆலோசனையின்றி, தாமாக எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவைகளைச் சரியாகப் பின்பற்றினால், சிறுநீரகப் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக