வனக் காவலன்!
வன உயிர்களிடத்தில் பிரியமுடன் பழகும் வனசுந்தரபாண்டியன்: என் சொந்த ஊர் தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர். என் அப்பா, போலீஸ்காரர் என்பதால், எனக்கும் துணிச்சல் அதிகம். வீட்டிற்கு அருகிலேயே மலை இருப்பதால், சிறு வயதிலிருந்தே பள்ளிக்குச் செல்லும் நாட்கள் தவிர, மற்ற நாட்களில் காட்டுப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருப்பேன். இதனால், காட்டில் வசிக்கும் பல விலங்குகள், பறவைகளின் நடவடிக்கைகளும், குணாதிசயங்களும் எனக்கு அத்துப்படி.
கூடலூர் வனப்பகுதியில், யானை, மான் போன்ற விலங்குகள் அதிகமென்பதால், அவை வாகனங்கள் செல்லும் வழியில் அடிபட்டுக் கிடக்கும். அவற்றுக்கு சிகிச்சை அளிக்கச் செல்லும் மருத்துவர்களுடன் நானும் சென்று, மருந்தளிக்கும் வழிகளை ஆர்வமுடன் கற்றுக் கொண்டேன்.நான், 10 ஆண்டுகளாக வன விலங்குகளைப் பாதுகாத்து வருகிறேன். குமுளி செல்லும் வழியில், பறவைகள் மயங்கிக் கிடப்பதாக ஒரு முறை எனக்கு தகவல் வந்தது. உடனே, அங்கு சென்றேன்.
கோடை வாழிடங்களில் மட்டுமே வசிக்கும், "ஹோம் ஷிப்ட்' பறவைகள் என்பதை அறிந்து கொண்டேன். "ஹோம் ஷிப்ட்' பறவைகள் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவை. சிறிய அளவில் பருவ மாற்றம் ஏற்பட்டால் கூட, தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்து விடும். புதர்கள், பாறைகளின் இடுக்குகளில் களிமண்ணால் கூடு கட்டி வாழும்.
கடும் குளிரினால், மயங்கிக் கிடந்த அந்த பறவைகளை, ஒரு தனி அறையில், மெர்க்குரி விளக்குகளின் மூலம் வெப்பமூட்டிப் பாதுகாத்தேன். இரண்டு நாட்களுக்குப் பின், பறவைகளிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவைகளுக்கு உணவாக, ஈசல்களை விலைக்கு வாங்கி வந்து ஊட்டி பாதுகாத்தேன்.
அவைகளுக்கு கொஞ்சம் தெம்பு வந்த பின், மிதமான வெயில் அடிக்கும் இடத்தில் பறக்கவிட்டேன். தற்போது, அவைகள் கூடு கட்டி வாழ்கின்றன.
என் பணியைப் பார்த்த பொதுமக்களும், வனத்துறை அதிகாரிகளும் பாராட்டியது, எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது. என் வேலை, பொழுதுபோக்கு எல்லாமே வன விலங்குகளை பாதுகாப்பது மட்டுமே. இதற்காக, பொது இடங்கள் மற்றும் பள்ளி களில், துண்டு பிரசாரம் செய்து வருகிறேன்.தொடர்புக்கு: 98423 94442.
உதவக் காத்திருக்கிறோம்!
ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் உதவிக் கரம் நீட்டும் லட்சுமி: திருவாரூர் தான், சொந்த ஊர். ராணுவத்தில் வேலை பார்த்த கணவருடன் மூன்றாண்டுகள் மட்டுமே வாழ்ந்தேன். சீனப் போரில் அவர் மரணம் அடைந்து விட்டார். ஒன்றரை வயதிலும், ஆறு மாதத்திலும் என் கையில் இரண்டு ஆண் பிள்ளைகள். என் அண்ணனின் அரவணைப்புடன், அத்தியாவசியப் பொருள் வினியோக அலுவலராக வேலை பார்த்து, பிள்ளைகளைக் காப்பாற்றினேன். கூடவே, பிறருக்கு உதவும் காரியங்களையும் செய்தேன்.அரசியல் மீதிருந்த நம்பிக்கையினால், பிரசாரத்திற்கும் சென்றிருக்கிறேன். இந்நிலையில் தான் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்த நிகழ்வை எதிர்கொண்டேன். இதயத்தின் நான்கு வால்வுகளும் பழுதடைந்து விட்டன. இனி அவ்வளவு தான் என்று நினைக்கையில், நல்ல உள்ளங்கள் எனக்கான மருத்துவச் செலவுகளை ஏற்றதால், செயற்கை வால்வுகள் பொருத்தப்பட்டன.
இது எனக்கு மறு ஜென்மம் போன்றது. பிறருக்கு உதவும் வகையில், பயன்பட வேண்டும் என்று, அதற்கான வேலைகளில் இறங்கினேன். ஆயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு, "அன்னை தெரசா இல்லம்', முதியவர்களுக்கு, "இந்திரா காந்தி இல்லம்' ஆரம்பித்தேன்.ஆர்வத்தில் இல்லங் களை ஆரம்பித்தாலும், அதை கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டேன். அதையெல்லாம் சமாளித்து, அர்ப்பணிப்புடன் சேவையை தொடர்ந்தேன். பொருளாதார உதவிகளைப் பகிர்ந்து கொள்ள சில நல்லவர்களும், உடல் உழைப்பை பகிர்ந்து கொள்ள சில ஆதரவற்ற தொண்டுள்ளப் பெண்களும் என்னுடன் இணைந்து, இல்லங்களை வழி நடத்த உதவினர்.
தற்போது நான் உட்பட இல்லத்தில் உள்ள அனைவரின் கண்களை தானத்திற்கு எழுதி வைத்திருக்கிறோம். விருப்பம் உள்ளவர்கள், தங்கள் உடலை, மருத்துவக் கல்லூரிகளுக்கு உடல் தானமும் செய்திருக்கிறோம். இருக்கும் வரை மட்டுமல்ல, அதற்குப் பின்பும் பிறருக்கு உதவக் காத்திருக்கிறோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக