சனி, 3 டிசம்பர், 2011

Buddhist dominations is the real reason for ethinic problems : பௌத்த மேலாதிக்கமே இனவாதத்திற்கு முதன்மைக் காரணம்!- பேராசிரியர் பீற்றர் சால்ககு


பௌத்த மேலாதிக்கமே இனவாதத்திற்கு முதன்மைக் காரணம்!- பேராசிரியர் பீற்றர் ஸ்சால்க்

| December 2, 2011 | 0 Comments
பௌத்த மேலாதிக்கமும் அதற்குத் துணைப் போகும் சிங்கள சக்திகளும் தமிழர்களிற்கு எதிரான இனவாதத்திற்குக் காரணம் என சுவீடனைச் சேர்ந்த பேராசிரியரும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தன்னை முழுமையாக அர்ப்பணித்தவருமான பீற்றர் சால்க் ரொறன்ரோவில் இடம்பெற்ற கருத்தரங்கில் குறிப்பிட்டார்.
கனடியத் தமிழ் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இலங்கை இனப்பிரச்சினையில் மதங்களின் பங்கு என்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே பேராசிரியர் பீற்றர் சால்க் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிங்களமொழி பேசும் கிறிஸ்தவர்களின் தலைமை போர்க்காலத்தில் பௌத்தசிங்களம் மேற்கொண்ட தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்களின் மீதான இனப்படுகொலைக்கு மௌனமாக ஆதரவை வழங்கியதைக் குறிப்பிட்ட அவர், கிழக்குத் திமோரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்ட போது குரல் கொடுத்த பாப்பரசர் மற்றும் வத்திகான் தலைமைகூட தமிழ்க் கிறிஸ்தவர்கள், பாதிரியார்கள் படுகொலை செய்யப்பட்டபோது குரல் கொடுக்கத் தவறி விட்டது எனவும் சுட்டிக் காட்டினார்.
கனடியத் தமிழ் ஒன்றியப் பிரமுகர் திரு. தியோடர் அந்தனி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யோர்க் பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரையாளரான கலாநிதி பார்வதி கந்தசாமி உரையாற்றுகையில், பௌத்த மதப் பரவலாக்கல் வட கிழக்குப் பகுதியில் எவ்வாறு புரையோடிப் போயுள்ளது என்பதை ஆதாரங்களோடு தெளிவுபடுத்தியதோடு,
மாதகல் கடற்கரையே சங்கமித்திரை வந்திறங்கிய இடம் எனக் குறிப்பிட்டு அங்கே பெரிய விகாரை கட்டப்படுவதையும் வவுனியாவிலிருந்து யாழ் செல்லும் பாதையின் பல இடங்களிலும் புத்த கோவில்கள் தற்போது கட்டியெழுப்பப்படுவதையும் குறிப்பிட்டு இதனை இந்தியாவிலுள்ள இந்து மத, சைவ மதத் தலைமைகள் கண்டிக்காதையும் சுட்டிக் காட்டினார்.
இக் கருத்தரங்கில் பேசிய ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியரான கலாநிதி யோசப் சந்திரகாந்தன் அவர்கள் இலங்கையில் இனங்கள் ஒண்றினைந்து வாழுவதற்கு பௌத்த சிங்கள இனவாதமே பெருந்தடையாக உள்ளது என்பதை தெளிவுபட விளங்கப்படுத்தியதோடு அது விரைவில் உலகால் உணரப்படும் என்ற ஆதங்கத்தையும் தனது பேச்சில் தெரிவித்ததோடு,
இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டத்தின் பின்னர் ஏற்படதொன்றல்ல என்றும் அது பல நூற்றாண்டுகளாகப் புரையோடிப் போயுள்ள ஒரு விவகாரம் என்றும், இரண்டு மொழி பேசும் இரு தேசிய இனங்கள் இலங்கைத் தீவை தமது தாயகமாகக் கொண்டவை என்பதையும், அவை இரு தனித்துவமான பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டவை என்பதையும் மேற்குலகு தெளிவுபட உணர்ந்த பின்னரே தீர்வு முயற்சிகளிற்கு முனைய வேண்டுமெனவும் கூறினார்.
இவ் விழாவில் மத்திய கன்சவேட்டிவ் கட்சியைச் சார்ந்த திரு. சக் கொங்கல் அவர்களும், மாகாணக் கன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த திரு. சான் தயாபரன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததோடு பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள் எழுதிய “தமிழர்கள் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு” என்ற நூலிற்கான மதிப்பீட்டயையும் திரு. சக் கொங்கல் மேற்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக