ஈரோடு: ஈரோட்டில் இருந்து, சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை, அங்கிருந்த ஆண் யானையிடம் மடியை தேடியது, வனத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சென்னம்பட்டி காப்புக்காட்டில் இருந்து வழி தவறிய குட்டியானை, ஜரத்தல் என்ற ஏரிக்கரை அருகே பரிதாபமாக நின்றது. ஒன்றரை மாதமேயான குட்டி யானையை, காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி யாவும் தோல்வியில் முடிந்தது. இதனால், மண்டல வன பாதுகாவலர் அருண் உத்தரவின் பேரில், வனத்துறை அலுவலகத்துக்கு கொண்ட வரப்பட்ட குட்டியானைக்கு, ராஜ உபச்சாரம் நடந்தது. வனத்துறை அலுவலர்களிடம் குழந்தை போல பழகிய குட்டியானை, 29ம் தேதி இரவு, 8.30க்கு நீண்ட நேர பாச போராட்டத்துக்கு பின், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பூங்கா ஊழியர்களுடன் முதலில் பழகவும், அவர்கள் வைக்கும் உணவையும் உண்ண மறுத்த குட்டியானை, அதன் பின் அவர்களிடம் நன்கு பழகியது. அதே பூங்காவில் உள்ள சற்று பெரிய யானையுடன், நேற்று காலை குட்டி யானையை பழக விட்டனர். ஆனால், தன் தாய் வந்து விட்டதாக எண்ணிய குட்டி யானை, ஆண் யானையின் உடல் முழுவதும், தன் துதிக்கையால் முத்தமிட்டது. அதன் பின் துதிக்கையை தூக்கி பால் குடிக்க ஆண் யானையிடம் மடியை தேடியது. மடி இல்லாததால் ஏமாற்றமடைந்த குட்டி யானை, சில மணி நேரத்தில் ஆண் யானையிடம் நன்கு பழகியது.
குட்டி யானை தங்களிடம் குழந்தை போல் பழகியதாகவும், அதை நன்கு பராமரிக்க வேண்டும் என்றும், ஈரோடு மாவட்ட வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குட்டி யானையை ஈரோட்டில் குளிக்க வைக்கும் போது காதில் ஏற்பட்ட காயத்துக்கு, வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளும், ஊழியர்களும் இரவு பகலாக குட்டியானையை கவனித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக