திங்கள், 28 நவம்பர், 2011

Dinamani editor about kambar and valluvar: கம்பரும், வள்ளுவரும்-தினமணி ஆசிரியர்


கம்பரும், வள்ளுவரும் இலக்கிய உலகுக்கு அழைத்துச் செல்லும் வாயில்கள்:
தினமணி ஆசிரியர்

First Published : 28 Nov 2011 01:43:15 AM IST

Last Updated : 28 Nov 2011 03:41:12 AM IST

கம்பன் கழகத் தலைவர் சி.டி.எஸ். சிதம்பரத்துக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவிக்கிறார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன். உடன் (இடமிருந்து) கவிஞர
தாம்பரம், நவ. 27: கம்பரின் ராமாயணமும், வள்ளுவரின் திருக்குறளும் இலக்கிய உலகுக்கு அழைத்துச் செல்லும் வாயில்கள் என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.  சென்னையை அடுத்த தாம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கம்பன் கழகம் தொடக்க விழாவில் அவர் பேசியது:  30 ஆண்டுகளுக்கு முன் தாம்பரத்தில் செயலிழந்து போய்விட்ட கம்பன் கழகம் மீண்டும் தொடங்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கது.  ஒரு காலத்தில் கம்பராமாயணத்தை எதிர்த்து "தீ பரவட்டும்' என்று கோஷத்தை எழுப்பி கம்ப காவியத்தைத் தமிழகம் முழுவதும் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தைத் தொடங்கினார்கள் பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் திராவிட இயக்கத்தினர். புதுவையில் பாரதிதாசனிடம் கம்பகாவியத்தை எரிக்கப் போவது பற்றிக் கூறியபோது, அவர் ""சரி, கம்பராமாயணத்தை எரித்துவிடுவோம். கம்பரை எரித்துவிட்டால் அந்த இடத்துக்கு வேறு யார் என்று சொல்லுங்கள்'' என்று திரும்பக் கேட்டார் என்பது சரித்திரம்.  அதேபோல, பேராசிரியர் இலக்குவனார் "தீ பரவட்டும்' அறிவிப்பைப் பற்றிக் கேள்விப்பட்டதும் ""நல்லதொரு தமிழ்க் கவிஞனின் தமிழ்க் கவிதையை எரிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே, இதுவா தமிழுணர்வு?'' என்று கடிதம் எழுதினார் என்பதும் சரித்திரம்.  கம்பராமாயணத்தைக் காவியமாக, இலக்கியமாக, வாழ்வில் பாடமாகப் பார்க்க வேண்டும்.  கம்ப காவியத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும், எவ்வளவு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சோடை இல்லை என்பது பிரமிக்கத்தக்க விஷயம்.  கடைசிவரை பேசவே மாட்டான் சுக்ரீவன் என்கிற கதாபாத்திரம். அந்தப் பேசாத தம்பிக்குக் கம்பன் இரண்டே இரண்டு பாடல்கள்தான் வைத்திருப்பார். அந்த இரண்டும் மாணிக்கப் பரல்கள்.  கம்பனின் தமிழிலும் கவிதைச் செறிவிலும் மனதைப் பறிகொடுத்தவர்களில் மகாகவி பாரதியும் ஒருவர். அதனால்தான் "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், இளங்கோவைப்போல், வள்ளுவரைப்போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை'' என்பான். காலத்தால் வள்ளுவருக்கும் இளங்கோவடிகளுக்கும் பிற்பட்ட கம்பனுக்கு பாரதி முன்னுரிமை கொடுப்பதற்குக் காரணம் கம்பனின் கவிதை நயம். அதேபோல, வள்ளுவன் என்று குறிப்பிடாமல் வள்ளுவர் என்று குறிப்பிட்டு மரியாதை கொடுத்திருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும்.  திருக்குறளும், கம்ப காதையும் தமிழ் இலக்கியச் சோலைக்கு நுழைவு வாயில்கள். நம்மைக் கவர்ந்து இழுத்து சிந்திக்கத் தூண்டும் இந்த இரண்டு படைப்புகளையும் படிக்கத் தொடங்கிவிட்டால் அதன் தொடர்ச்சியாகச் சங்க இலக்கியத்தைச் சுவைக்கும் பக்குவத்தையும் பெறமுடியும்.  கம்பன் விழாபோல, இலக்கியக் கூட்டங்கள் எங்கே நடந்தாலும் அதற்கு தினமணி நாளிதழின் ஆதரவும், உறுதுணையும் நிச்சயமாக உண்டு. தமிழ் இருக்கும் இடத்தில் எல்லாம் தினமணியும் இருக்கும்'' என்றார் அவர்.  விழாவில் தாம்பரம் கம்பன் கழகத் தலைவர் சிடி.எஸ். சிதம்பரம், பொதுச்செயலாளர் கவிஞர்  அரு. நாகப்பன், நெறியாளர் தி.ராசகோபாலன், கெüரவத் தலைவர் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக