வியாழன், 1 டிசம்பர், 2011

பேருந்து மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப்போராட்டம்





கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மோதி காளை மாடு இறந்தது. உடன் திரிந்த மாடு, இறந்த மாட்டை தலையால் முட்டி எழுப்பியதை பார்த்தவர்களின் நெஞ்சம் நெகிழ்ந்தது.
கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு, இரண்டு காளை மாடுகள் ரோட்டில் முட்டி மோதி விளையாடித்திரிந்தன.அப்போது, பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த மாடுகளில், ஒரு காளை மாடு மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த மாடு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. உடன் இருந்த மாடு பெரும் சத்தத்துடன் சாலையில் விழுந்த மாட்டை தலையில் முட்டி எழுப்பியது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த மாட்டை மற்றொரு மாடு சுற்றி சுற்றி வந்து தலையால் முட்டி எழுப்பியது.மனிதர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், அந்த வழியே செல்வோர் பார்த்தும் பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில், கால்நடைகள் மனிதாபிமானத்துடன் உடன் வந்த மாடு இறந்ததை அறியாமல் முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள் நெஞ்சம் நெகிழந்தனர்.

விபத்தில் சிக்கிய மாடு இறந்ததால், உடன் வந்த காளை மாடு பெரும் சத்தம் போட்டு அந்த பகுதியில் வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்களை துரத்தியது. இதனால், அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில் இருந்து, காளை மாட்டை விரட்டி அடித்தனர். ஆனால், மாடு சிறிது தூரம் ஓடி சென்று அந்த பகுதியையே சுற்றி சுற்றி வந்தது. சாலையில் இறந்த காளை மாட்டை பொதுமக்கள் அகற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக