ஞாயிறு, 27 நவம்பர், 2011

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே.. – வித்யாசாகர் – குவைத்


காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே.. – வித்யாசாகர் – குவைத்

| November 27, 2011 | 0 Comments
தமிழினமே..
தமிழினமே..
என் தமிழினமே..
விண்ணை விரல்நுனியில் சுமக்கவும்
உயரே பறந்து வான்முட்டி நிற்கவும்
என்றோக் கற்ற தமிழினமே…
காலத்தை காற்றுப் போல
கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில்
உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின்
வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே…
தமிழினமே…
தமிழினமே…
என் தமிழினமே…
எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே..
யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய்
யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்..
கடல் தின்றதில் கலங்காத நீ
காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ
பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ
இப்போது எங்கிருக்கிறாய்..
எங்கிருக்கிறாய் என் தமிழினமே..
உன் பாட்டன் முப்பாட்டன் ஆண்ட மண் இன்று
உனதில்லை
உன் தாய் உன் தந்தை கொண்டிருந்த மாண்பு
இன்று உனதில்லை
நீ கொண்டாடிய கலை வீரம் விளையாட்டு
வாழ்க்கைக்கான கல்வி
இன்று உனதில்லை
உன் மொழி உன் இனம் பற்றிய சிந்தை
நீ வாழ்ந்த வரலாறு
நீ படைத்த சாதனைக் குறித்த அக்கறை
ஒன்றுமே யின்று உன்னிடமில்லையே என் தமிழினமே..
எவனோ அடிக்கிறான்
எவனோ கொல்கிறான்
எவனெவனோ உன்னையழிக்க
உலகக் கைபிடித்துத் திரிகிறானே ஏனென்றுக் கேட்டாயா
எதற்கென்று யோசிக்கவேனும் செய்தாயா?
நீ யார் ?
உன் வீரமென்ன?
உன் தீரமென்ன ?
நீ கொண்ட திறனென்ன ?
நீ அசைந்தால் இந்த உலகம் சற்று அசைந்துக்கொடுக்க வேண்டாமா?
நீ நில்லென்றால் நிற்கவும்;
போவென்றுச் சொன்னால் போயிருக்கவும்வேன்டாமா?
அதற்கு மாறாக இருக்கிறாயே என் தமிழினமே
எல்லாம் இழந்து நிற்கிறாயே தமிழினமே..
வெறுமனே நாலுபேர் போகும் தெருவில்
நடக்கும் நீயும் ஒன்றாய் ஆனாயே..
யாரோ சிரிக்கும் சிரிப்பிற்குப் பொருளும்
எவனோ முறைக்கும் முறைப்பிற்கும் பயமும் நீயாய் ஆவதா?
நான்குபேர் செத்தாலும்
ஐந்தாவதாய் முலைத்தவரில்லையா நாம்?
நம்மையழிக்க எந்த கொம்பனுண்டு?
எவனுக்கும் திராணி போதாது தமிழினமே நீ
கூடி நின்றால் அழிக்க;
எப்படி அடிப்பது
எதை தடுப்பது
யாருக்கு அஞ்சுவது
யார்யாரை மதிப்பது
எப்படி வாழ்வதென்று என்றோ எழுதி இலக்கியமும் செய்தாயே
இன்றேன் உனக்கு உலகம்
விரோதமாய் ஆனது தமிழினமே..
கிழக்குப் போனால் இருக்கிறாய்
வடக்குத் தெற்கிலிருக்கிறாய்
மேற்குமெட்டு திசையிலும் நீயிருக்கிறாய் தமிழினமே
இருந்தும் ஒரேயொரு சட்டை யின்றி
பார்ப்போருக்கு நிர்வானமாய் தெரிகிறாய்;
வா.. இதோ பறந்துக் கிடக்கும் நம் தமிழரின்
ஒற்றுமை என்னும் ஒன்றை எடு
அதை துணிவென்னும் நூலால் தை
நம்பிக்கையின் நிறம் மட்டும் தோய்த்து
காலத்திற்கும் அவிழாத சட்டையென உடுத்து;
பார்ப்போர் கண்ணை உறுத்தாத உன் வளர்ச்சியில்
உலகம் மீண்டும்புது நாகரிகத்தை
உன்னிடமிருந்து கற்கட்டும்;
எமை இத்தனைக் காலம்
மண்ணில் புதைத்துவைத்திருந்த தேசங்கள்
எம் வாழ்தல் கண்டு தன் தவறுக்கு வருந்தட்டும்;
காற்றுவீசும் திசையெல்லாமென் தமிழர்
அடிமைத் தனமின்றி வாழட்டும்;
கத்தி கதறி அழத தெருக்களெல்லாம்
எம் சுதந்திர கீதம் ஒலிக்கட்டும்;
எமைக் கொன்று கொன்று புதைத்த
மண்ணில் காலத்திற்கும் அது
நிகழாத வரம் வாய்க்கட்டும்;
பசுமை பொங்குமொரு வாழ்வை
உலகம் கண்டு மேச்சட்டும்..
சின்னக் குழந்தைக்குக் கூட
நாம் தமிழரென்னும் பெருமிதம்
ரத்தத்தில் கலந்திருக்கட்டும்;
அந்த பெருமிதத்தின் நிமித்தம்
உயிர்விட்ட நம் மாவீரர்களின் மனசு
நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றால்
என்றென்றும் நிறையட்டும்!!
——————————————————————————-
வித்யாசாகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக