சனி, 3 டிசம்பர், 2011

Gold medal for chikun-kunia disease: மடக்குநோய் (சிக்-குன் குனியா) ஆய்வுக்காக தங்கப் பதக்கம்




திருக்கோவிலூர் : திருக்கோவிலூரைச் சேர்ந்த, உயிரி மருத்துவ ஆராய்ச்சியாளருக்கு, சிக்-குன் குனியா வைரஸ் தொற்று பற்றிய ஆய்வுக்காக, தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த, அந்திலி கிராமத்தைச் சேர்ந்தவர், நாகராஜ். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மகன் முருகானந்தம், 29. அந்தமானில் உள்ள மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். உயிரி மருத்துவ ஆராய்ச்சி பிரிவில், ஆராய்ச்சி செய்து வரும் இவர், சிக்-குன் குனியா நோய் மற்றும் அதனால் ஏற்படும் மூட்டுவலி பற்றி, ஆய்வு மேற்கொண்டார். போர்ட்பிளேரில் நடந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் நூற்றாண்டு விழாவில், இவரது ஆய்வு கட்டுரை தேர்வு செய்யப்பட்டு, தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. சுகாதாரத் துறை இயக்குனர் எஸ்.கே.பால், பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

ஆராய்ச்சியில் கண்டுபிடித்த விவரம்

முருகானந்தத்தின் ஆராய்ச்சி கீழ்க்கண்டவாறு அமைந்தது: சிக்-குன் குன்யா கிருமி, கிழக்கு மத்திய மற்றும் தெற்கு ஆப்ரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தது. இதில், அந்தமான் - நிக்கோபார் தீவில், இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்கள், மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள், மூட்டு வீக்கம் தவிர, ஆர்த்ரைட்டிஸ் உட்பட, நெடுநாளைய நோய்களால் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க, சிக்-குன் குன்யா கிருமியைத் தனியே பிடித்து எடுத்து, அதன் மரபணுக்களின் தன்மை குறித்து படித்தபோது, ஒரு நோயாளியின் உடலில் புகுந்த பின், ஏழு, எட்டு மாதங்களுக்குப் பின், அதன் மரபணுவில் மாற்றம் ஏற்படுவது தெரிந்தது. இது தான், மக்கள் அதிகமாய் பாதிப்புக்குள்ளாகக் காரணமாய் அமைகிறது என்று கண்டறியப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக