வெள்ளி, 10 ஜூன், 2011

will D.M.K. continue in the central govt.? : மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா? இன்று முடிவு

சிங்கள அரசுடன் மத்திய அரசு கூடா நட்பு கொண்டதே ஈழத்தமிழர்க்கும் அதனால் ஆட்சிக்கும் பெருங்கேடாய் அமைந்தது. எனினும் கலைஞர் அதைக் கூறும் உறுதி பெற்றிருக்கவில்லை. காங்.உடன் தி.மு.க. கூடா நட்பு கொண்டதே பெருந்தோல்விக்குக் காரணம். எனினும் கலைஞர் அதை வெளிப்படுத்தும் துணிவு பெற்றிருக்கவில்லை. மத்திய ஆட்சியில் பெயரவிற்கேனும் பங்கு  இல்லாவிடில் பெருந் தொல்லை. எனவே, காங்.ஐ எதிர்க்க முடியாது. தொண்டர்கள் அ.தி.மு.க.வுடன் நட்பு கொண்டு கட்சி மாறும் சூழல் வரக்கூடாது என்பதற்காகக் கட்சியினருக்குத்தான் அதனைக் கூடா நட்பாகக் கூறியுள்ளார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா?இன்று முடிவு

First Published : 10 Jun 2011 02:10:39 AM IST

Last Updated : 10 Jun 2011 05:06:07 AM IST

சென்னை ஜூன் 9: திமுக - காங்கிரஸ் உறவு தொடர்பாக, வெள்ளிக்கிழமை நடக்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  அக் கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் மாலை 4.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் வளாகத்தில் இக் கூட்டம் நடக்கிறது.  பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின். முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.  சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியானதற்குப் பிறகு கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் முறைப்படியான முதலாவது கூட்டம் இதுவாகும்.  தேர்தல் தோல்விக்குக் காரணம், "கூட்டணிக் கட்சிகள் கேட்டுப் பெற்ற இடங்களா, அவர்களுக்கு விட்டுக் கொடுத்த இடங்களா' என்று கருணாநிதி கூறியுள்ளார். கூட்டணி ஆட்சிதான் வரும் என்றால் அதை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்ற கருத்தை காங்கிரஸ் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் கருணாநிதி.  இருந்தாலும் காங்கிரஸ் தலைமை பிடிவாதமாக இருந்து 63 தொகுதிகளைப் பெற்றதால், திமுக 118 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டது. எனவே கூட்டணி ஆட்சி என்ற சூழ்நிலையை தவிர்க்கவே மக்கள் விரும்புவர் என்ற கருணாநிதியின் கருத்தை உறுதி செய்வதைப் போலவே தேர்தல் முடிவு அமைந்துவிட்டது.  அதைத் தொடர்ந்து தனது பிறந்த நாளன்று அண்ணா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, கூடாநட்பு கேடாய் முடியும் என்பதை தொண்டர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கு பல அர்த்தங்கள் கூறப்பட்டாலும், அதில் ஒன்று காங்கிரஸ் உறவைக் குறிப்பது என்று காங்கிரஸ் தரப்பினரே கருதுகின்றனர்.  இதுதவிர, கருணாநிதியின் மகள் கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு 18 நாள்களாகிவிட்டன.  திருவாரூரில் கடந்த 5-ம் தேதி நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, மத்திய அரசு உத்தரவாலோ அல்லது அலட்சியத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ கனிமொழி சிறை செல்ல நேரிட்டது என குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையில் கனிமொழி கைதாகி இருப்பதால் இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.  சி.பி.ஐ. நீதிமன்றத்திலும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் கனிமொழியின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. கருணாநிதிக்கு இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.  மாநிலத்தில் ஆட்சி இல்லாத சூழ்நிலையில், மத்திய ஆட்சியில் நீடிப்பதே பாதுகாப்பானதாக இருக்கும் என திமுக தலைவர்கள் கருதி வந்தனர்.  ஆனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காததும், மாநிலத்தில் ஆட்சியை இழக்க காரணமாக இருந்தது என்ற கருத்தும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவே இருக்கிறது.  2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த ஆ. ராசா சிறை சென்று சுமார் 4 மாதங்கள் ஆகிவிட்டன. கனிமொழியும் சிறையில் உள்ளார். மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், வலுப்பெற்று வருவதால் அவரும் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அடுத்தடுத்து திமுக அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் வருவது குறித்து கட்சித் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிகிறது.  இவ்வளவு நடந்த பிறகும் காங்கிரஸ் கட்சியுடன் உறவு இருந்து எதைக் காப்பாற்றப் போகிறோம் என்ற கருத்து கட்சித் தலைவர்களிடம் காணப்படுகிறது.  இதற்கிடையில், வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, ""தேர்தலில் திமுக இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களில் ஒன்று மத்திய ஆளும் காங்கிரசுடன் இருந்து அதன் பல்வேறு செயல்களுக்கும் பழி ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதுதான்'' என கூறியுள்ளார்.  திமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இப்படி ஒரு கருத்தை வீரமணி தெரிவித்திருக்க மாட்டார் என்றே அரசியல் வட்டாரத்தில் கருத்தாக உள்ளது.  இவைதவிர, இக் கூட்டத்தில் தலைவர்கள் பேசும்போது தேர்தல் தோல்விக்கான காரணங்களைப் பட்டியலிடுவார்கள். அதிலும் காங்கிரஸ் மீது குறைகள் தெரிவிக்கப்படலாம். எனவே காங்கிரஸ் கட்சியுடன் உறவைத் தொடருவதா, மத்திய அமைச்சரவையில் பங்கேற்பைத் தொடருவதா அல்லது வெளியில் இருந்து ஆதரவா என்று முக்கிய முடிவு ஏதாவது இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்திவைப்பு, புதிய தலைமைச் செயலக பணிகள் நிறுத்தம் போன்றவற்றைக் கண்டித்து ஏற்கெனவே மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைவரிடம் கலந்து பேசி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  அதுபோன்ற போராட்ட முடிவுகளும் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

1 கருத்து: