வெள்ளி, 10 ஜூன், 2011

because of cong. d.m.k. fall down -k. veeramaniyar: திமுகவின் தோல்விக்குக் காங்கிரசே காரணம்: கி. வீரமணி குற்றச்சாட்டு

ஆசிரியர் வீரமணியார் சரியாகத் தெரிவித்து உள்ளார். எனினும் காங்.உடன் விரும்பியே தி.மு.க., இணைந்திருந்ததும் அது  துரத்தினாலும் விரட்டினாலும் ஒட்டிக் கொண்டிருந்ததும்தானே இனப்படுகொலைகளுக்குத்  துணையாக அமைந்தது.தமிழர் நலன் கருதி வெளியேறாமல் மத்திய அரசை இறுகப் பற்றிக் கொண்டு தவம் இருந்தது ஏன்? எனவே, தீ வினை விதைத்தவர்கள் தீ வினை அறுக்க வேண்டும்.  ௨.) குற்றம் செய்தவர்கள் தண்டனை பெறும்  பொழுது பரிவு காட்டலாம். ஆனால், குற்றமற்றவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கக்கூடாது அல்லவா? எனவே, படுகொலைகளுக்கு உதவியவர்களுக்காகப் பல்லக்கு தூக்காமல். இனி அ.தி.மு.க. அரசிற்கு ஒத்துழைப்பாக இருந்து தமிழ் நலப் பணிகளை விரைந்து ஆற்ற வழிகாட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திமுகவின் தோல்விக்கு காங்கிரஸே காரணம்: கி. வீரமணி குற்றச்சாட்டு

First Published : 10 Jun 2011 02:34:49 AM IST


சென்னை, ஜூன் 9: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு செயல்களுக்கு பழியேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால்தான் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.  "லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.  இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இது வரவேற்கப்பட வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாயந்ததாகும். தமிழர்களின் நன்றிக்குரிய தீர்மானமாகும். இதனை திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ளன.  ஒட்டுமொத்தமாக தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்தத் தீர்மானத்துக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சனம் செய்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்.  தமிழக அரசியலில் கடந்தகால கசப்பான அனுபவங்களையே சுட்டிக்காட்டி ஒவ்வொருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்படும் நிலையால் ஏற்படும் விளைவுகள்தான் என்ன?  பொது எதிரியான ராஜபட்ச தப்பித்துக் கொள்ளவே இது வழிவகுக்கும். மத்திய அரசை அந்தரங்க சுத்தியுடன் வற்புறுத்தி செயல்பட வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு எதிர் விளைவாக பொதுப்பிரச்னையை மறந்து விட்டு, பொது எதிரிகளை ஒதுக்கிவிட்டு இங்குள்ள கட்சிகள் ஒருவருக்கொருவர் தன்னிலை விளக்கம் அளித்து வருகின்றனர். இதன் மூலம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னையை இன உணர்வுப் பிரச்னையாகவோ, மனித உரிமை பிரச்னையாகவோ பார்க்காமல், நல்ல அரசியல் முதலீடு எனக் கருதி தீயை அணைக்க முயலாமல், யார் எந்த அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள் என்ற ஆராய்ச்சி லாவணியிலா இறங்குவது?  காங்கிரஸே காரணம்: இலங்கைக்கு ராணுவப் பயிற்சி முதற்கொண்டு அளித்ததற்குக் காரணமான காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் கூறியதையெல்லாம் இப்போது மறுமொழியாக திமுக கூற ஆரம்பித்தால் தமிழக அரசின் வலிமை குறைந்து விடும்.  மத்தியில் ஆளும் காங்கிரசுடன் இருந்து கொண்டு அதன் பல்வேறு செயல்களுக்கும் பழியேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால்தான் தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியைப் பெற்றது திமுக.  எனவே, அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று தீர்மானத்தை செயலாக்க ஆளும் கட்சியும், முதல்வரும் முன்வர வேண்டும். அதற்கு நம் அனைவருக்கும் இடையே ஒற்றுமையும், ஒத்துழைப்பும் தேவை' என கி. வீரமணி வியாழக்கிழமை விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

1 கருத்து: