திங்கள், 6 ஜூன், 2011

dinamani article about gold: மாயத்தங்கம் மருந்தாகுமா?

கோவில் தங்கங்களில் நான்கில் ஒரு பகுதியை அரசு எடுத்துக் கொண்டாலே நிதி ஆதாரம் பெருகும்; தங்கம் விலை குறையும்; பண மதிப்பு உயரும்.திரு என்.டி.ஆர். கோவில் தங்கங்களைக் கல்விப்பணிக்கும் மருத்துவப் பணிக்கும் பயன்படுத்த முனைந்தார். மதவாதிகள் எதிர்த்துக் கெடுத்து விட்டனர். அவ்வாறு இல்லாமல் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

மாயத்தங்கம் மருந்தாகுமா?

First Published : 05 Jun 2011 11:26:07 PM IST


தமிழ் சினிமாக்களில் ""கோல்டன் ஹிட்ஸ்'' வகைகளில் நிஜமாகவே தங்கம் பற்றிய பாட்டுகள் எவ்வளவோ இருக்கலாம். என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாட்டு ஐம்பதுகளில் ஹிட் சாங். அநேகமாக டி.ஆர். மகாலிங்கம் நடித்த திருநீலகண்டராயிருக்கலாம். எம்.கே.டி. பாகவதர் நடித்த திருநீலகண்டரே வெற்றிப்படம். டி.ஆர். மகாலிங்கம் நடித்த படம் தோல்வியுற்றாலும், ""மாயப் பிரபஞ்சமடி தங்கமே தங்கம். மதிமயங்கிக் கலங்கிடாதே தங்கமே தங்கம்'' என்று தொடரும் பாட்டில், நிறையத் தத்துவங்கள் கூறப்பட்டுள்ளன.எந்தச் சித்தர் இப்பாட்டை எழுதினாரோ, அவற்றை ஒருகணம் கண்முன் நிறுத்திப் பார்த்தால் இன்றைய உலகப் பொருளாதாரச் சீரழிவை நினைவுபடுத்துவதாயுள்ளது. அதே பாட்டின் பல்லவியைச் சற்று மாற்றி, ""மாயத்தங்கமடி பிரபஞ்சமே பிரபஞ்சம்'' என்றும் பாடலாம்.அமெரிக்கப் பொருளாதார மேதைகள் பணவீக்கத்தையும், டாலரின் வீழ்ச்சியையும் சரிசெய்ய ""கோல்டு ஸ்டாண்டர்ட்'' வேண்டுமென்று கூறுகிறார்கள். இந்தியாவிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதுவே வழி என்ற பேச்சு வந்துவிட்டது. ஆனால், தங்கத்துக்கு எங்கே போவது?இந்தியாவில் உள்ள ஒரே தங்கச் சுரங்கம் கோலாரில் உள்ளது. பாதாளம்வரை நோண்டிவிட்டார்கள். கோலாரில் பொட்டுத் தங்கம்கூட இல்லை. 8 கிராம் தங்கம் விலை கூடிய விரைவில் ரூ. 20,000-ஐ தொடலாம்.பாலமுரளி கிருஷ்ணா, "தங்கரதம் வந்தது வீதியிலே' என்று பாடினார். திருப்பதி, மதுரை, பழனி போன்ற ஊர்க் கோயில்களில் தங்கத் தகடு பதித்த குட்டித்தேர் உண்டு. வேண்டிக்கொண்டால் லட்ச ரூபாய் பணம் கட்டி இழுக்கலாம். கவிஞர் வாலிக்கு ""தங்கத் தோணியிலே சென்று தவழும் வெண்ணிலவைப் பார்க்க வேண்டுமாம்!'' ஒருக்கால் எகிப்திய நாகரிகத்தின் சிறப்பாக பரோ மன்னர் ராம்úஸ - 2 வைத்திருந்தால் பிரமீடு கோயில்களில் அகப்படலாம். ஜீவன்முக்தி பெற தங்கத் தோணியில் நைல் நதி வழியே கடலின் எல்லையை அடைய வேண்டுமென்று எகிப்திய புராணம் கூறுகிறது. என்ன செய்வது? கோல்டு ஸ்டாண்டர்ட் வர வேண்டுமென்றால் தங்கமெல்லாம் இந்தியாவில் குவிய வேண்டுமே!பணவீக்கத்தால் பணத்தின் மதிப்பு குறைகிறது. தங்க மதிப்பை இருப்பு நிதியாக வைத்து நோட்டடிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுக்கடன் - பப்ளிக் டெட் குறைய வேண்டும். அரசாங்கம் அசல் பணத்தை அளவுக்கு மீறி அச்சடிப்பு ஒருபுறம்.கள்ளநோட்டுப் புழக்கம் ஒருபுறம். கறுப்புப் பணப்புழக்கம் ஒருபுறம். இப்படிப் பணவீக்கம் ரணவீக்கம் ஆனதால் தங்க ஊசிதான் தக்க மருந்து என்று ஒருசாரார் வாதமிடுகின்றனர். தங்க நாணயம் அச்சாகுமோ?நாயக்க மன்னர்கள் தென்னாட்டை ஆண்டபோது சென்னையில் உள்ள தங்கசாலைத் தெருவில் "வராகன்' என்று பைசா அளவில் தங்கக்காசு வெளியிட்டார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி வெள்ளி ரூபாய் எக்ஸ்சேஞ்ச் அடிப்படையில் ஒரு வராகனுக்கு மூன்றரை அணா மதிப்பிட்டு சமஸ்தானங்களுக்கு மானியம் வழங்கியதாம். வராகனில் ""வராகமூர்த்தி'' திருவுருவம் பதிக்கப்பட்டிருக்கும்.இப்படியெல்லாம் நினைவு அலைகள் பின்னோக்கிச் செல்கிறது. முற்போக்கு சக்திகளால் நிதிப் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் பிற்போக்கு சக்தியான தங்கம் நம்மை ஆளப்பிறந்துவிட்டது. அமெரிக்காவில் கோல்டு ஸ்டாண்டர்டு ஏறத்தாழ வந்துவிட்டது. இந்தியாவுக்கும் வரவேண்டுமா? வேண்டாமா? என்று பொருளியல் - நிதியியல் நிபுணர்களிடையே வாக்கு வாதம் இருந்தாலும்கூட நாடே தங்கத்துக்கு அடிமையாகிவிட்ட எதார்த்தத்தைப் புரிந்துகொள்வது நன்று.பிரிட்டிஷ் இந்தியாவில் 1893-ல் ஹெர்ச்சல் கமிட்டி யோசனையை ஏற்று கோல்டு எக்ஸ்சேஞ்சு ஸ்டாண்டர்ட் உருவானது. இந்தியாவில் அதற்குமுன் வெள்ளித்தரமே செயல்பட்டது. சில்வர் ஸ்டாண்டர்ட் என்று சொல்வார்கள். 1835-ல் 165 குண்டுமணி எடை வெள்ளியில் 15 குண்டுமணி நிக்கல் கலந்து 185 குண்டுமணி எடையில் ஒரு ரூபாய் வெள்ளி நாயணம் வெளியிட்டார்கள். அந்த வெள்ளிப்பணம் இன்றுள்ள பணமதிப்போடு ஒப்பிட்டால் ரூ. 10,000 வரை இருக்கும். அன்று புதுக்கோட்டை சமஸ்தானம் வெளியிட்ட அம்மன்சல்லிக்குக்கூட பொருள் மதிப்பு உண்டு.பிரஹதாம்பாள் உருவம் அந்தச் சல்லியில் இருக்கும். 3 அம்மன்சல்லி = 1 பைசா. 3 பைசா = காலணா. மாதம் 1 ரூபாய் சம்பளம் என்றால் அந்தக்காலத்தில் ராஜ உத்தியோகமாம்!1870-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோல்டு ஸ்டாண்டர்ட் வந்தது. வெள்ளி மதிப்பு குறைந்தது. இந்தியாவில் 1894-ல் கோல்டு ஸ்டாண்டர்ட் வந்தது. எனினும் வெள்ளி ரூபாய்களை பவுண்ட் - ஸ்டர்லிங்காக மாற்றலாம். அதன்பின்னர், தங்கமாக மாற்றலாம். நாணய மாற்றுகளில் புழங்கிய வெள்ளி ரூபாய்கள், பித்தளை, செப்புக்காசுகள் எல்லாம் டோக்கன் பணங்களே. உள்நாட்டில் டோக்கன் பணங்களைக் கொண்டு தங்கமாக மாற்ற முடியாது. ஆனால், வெளிநாட்டு வணிகத்தில் ரூபாய்களைத் தங்கமாக மாற்றிக் கொள்ளலாம். இரண்டு விதமான நாணய மாற்றுகள் உருவாயின. இந்தியாவில் ரூபாய் இருப்பு நிதியும் இங்கிலாந்தில் தங்க நிதியும் வைக்கப்பட்டன.1 ரூபாய் = 1 ஷில்லிங் + 4 பென்ஸ் என்பது நாணயமாற்று. எனினும், 1914-ல் கோல்டு ஸ்டாண்டர்ட் கைவிடப்பட்டுப் பணவீக்கம் தொடங்கியது.இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் இங்கிலாந்தின் பொற்காலம் முடிந்து அமெரிக்காவின் பொற்காலம் வந்தது. ஸ்டர்லிங் மதிப்பிழந்தது. டாலர் தங்க மதிப்பைப் பெற்றது. எனினும், 1971-ல் அனைத்துலகச் சந்தையில் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையை ஈடுசெய்ய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் தங்க நிதிச் சேமிப்புக்கு ஏற்ப நோட்டு அச்சடிக்கும் நாணய மாற்று முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.அனைத்துலகச் சந்தையில் டாலரின் நிலைப்பாட்டை அனைத்துலக நாடுகளின் நிதிக் கூட்டுறவின் மூலம் நிலை நிறுத்தலாம் என்று கூறினார்.""ரிசர்வ் கரன்சி தங்கத்துடன் இணைக்காதவரை டாலர் பலவீனமாயிருக்கும் என்றும், சர்வதேச நிதிக்கூட்டுறவு பற்றி ஒவ்வொரு நாடும் பேசுமே தவிர, செயல்படாது என்றும்'' அன்றே வில்ஹம் ரோப்கி என்ற பொருளியல் நிபுணர் எச்சரித்தது இன்று உண்மையானதை அமெரிக்கர்கள் உணர்ந்துவிட்டனர். ஏனெனில், இப்போது டாலர் மட்டுமே மிகவும் பலவீனமான அனைத்துலக ரிசர்வ் கரன்சியாக உள்ளது. டாலரோடு ஒப்பிடும்போது யூரோவும் சரி ஜப்பானின் யென்னும் சரி ரிசர்வ் கரன்சியாக ஏற்கப்படாமல் இருக்கவே மேற்படி நாடுகள் விரும்புகின்றனவாம்.வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, ரஷியா, தென்னாப்பிரிக்கா ஒருங்கிணைந்து பிரிக்ஸ் என்ற பெயரில் ஒரு ரிசர்வ் கரன்சியை நிலைநிறுத்தும் யோசனையில் உள்ளது. மேற்படி ஆறு நாடுகளும் அனைத்துலக நிதிக் கூட்டுறவுக்கு முயல்வதன் மூலம் அங்காடி விரிவாக்கமும் இருநாட்டு வர்த்தக உறவும் மேம்படும்.பிரிக்ஸ் நாடுகள் ஒருவருக்கொருவர் அவரவர் கரன்சியையே கொடுத்து வாங்குமாம். இந்தியப் பொருளியல் வல்லுநர்கள் பிரிக்ஸ் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர். ஜப்பானும், ஐரோப்பிய நாடுகளும்கூட அவர்களின் கரன்சியை ரிசர்வ் கரன்சியாக ஏற்காமல் டாலரை மதிக்கும்போது பிரிக்ஸýக்கு அவசரம் ஏன் என்று வினவுகின்றனர். அனைத்துலக அளவில் தங்கம் வைப்புநிதிச் சொத்தாக மாறி வருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அனைத்துலக மொத்த வைப்புநிதிச் சொத்தில் 11 சதவீதம் தங்கத்தின் பங்கு உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகள் தத்தம் தங்க நிதிப் பங்கை உயர்த்தியவண்ணம் உள்ளன. தங்க நிதியில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 80 %, ஜெர்மனி 69%, பிரான்ஸ் 60%, இத்தாலி 70%, சுவிட்சர்லாந்து 15% தங்கப் பங்கு உள்ளது. இங்கிலாந்தில் 15%, ஜப்பானில் 2 % மட்டுமே. எமர்ஜிங் மார்க்கெட் எக்கானமி என்று முத்திரை குத்திக்கொண்ட பிரிக் நாடுகளும் தங்கம் வாங்கத் தொடங்கிவிட்டன. ரஷியா தங்கம் வாங்குகிறது. கடந்த மூன்றாண்டுகளாக உலக நாடுகள் தங்கம் வாங்கிக் குவிக்கின்றன.சீனாவை எடுத்துக்கொண்டால் 2008-ல் 600 டன் தங்க இருப்பு நிதி இன்று 1,050 டன்களாக உயர்ந்துவிட்டது. இந்தியாவில் 300 டன் தங்கம் இன்று 500 டன்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்போது மொத்த வைப்புநிதியில் தங்கத்தின் பங்கு 7.5 சதவீதமாகும்.டாலரின் மதிப்பை உயர்த்த அமெரிக்கா தங்கம் வாங்கிக் குவிப்பதைப் பின்பற்றி இந்தியா அண்மையில் அனைத்துலகப் பணநிதியமாகிய ஐ.எம்.எப்.-லிருந்து 360 டன் தங்கம் வாங்கியுள்ளது. அமெரிக்காவைப்போல் இந்தியாவும் தங்கத்தில் முகம் எடுக்கத் தொடங்கிவிட்டது.எனினும், 1914-க்கு முன்பு நிலவிய கோல்டு ஸ்டாண்டர்ட் முழுமையாக ஏற்படவில்லை என்றாலும் இன்று உலக நாடுகள் தங்கத் தரத்தை நிலைப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவது புலனாகும்.அமெரிக்காவில் மட்டும் தன்னிச்சையாக யுடாஹ் மாநிலம் கோல்டு ஸ்டாண்டர்டை அறிவித்துவிட்டது. யுடாஹைத் தொடர்ந்து 13 மாநிலங்கள் தங்கத் தரத்தை நிலைப்படுத்தி அறிவிக்கத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.2012-ல் அமெரிக்கா முழுமையாக தங்கத்தர நாணயமாற்றுச் சந்தையை அறிவித்து கோல்டு ஸ்டாண்டர்டாகும் என்று இலக்கு வைக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவுக்கு ஒரு கவலையும் இல்லை. தங்கக் குவியலில் தங்கமயமாக அமர்ந்துள்ளார்கள்.இந்தியாவிலும் தங்கத்துக்குப் பஞ்சமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவை ரிசர்வ் வங்கிச் சொத்து அல்ல. திராவிட தேசங்களாகிய ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் உள்ள தங்கத்தையும், திராவிட தேசத்துப் பெண்களின் கழுத்தில் பூட்டியுள்ள நகைகளையும், வங்கி லாக்கர்களில் அடமானம் அல்லது பத்திரம் கருதி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்கங்களையும் கூட்டினால்..... அப்படிக் கூட்டும்படி அவற்றைத் தேசத்தின் ரிசர்வ் நிதி என்று அறிவித்து அவசரச்சட்டம் இயற்றப்படுமானால், டாலரை ரூபாய் வெல்லும்.நேற்று அண்ணா ஹஸôரே, இன்று யோகாகுரு ராம்தேவ்போல், நாளை ஒருவர் மேற்படி கோரிக்கையை வைத்து தில்லி ஜந்தர் மந்தரில் உட்காரலாம். அதற்கெல்லாம் மீண்டும் தங்கக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்த மொரார்ஜி தேசாய் உயிர் பெற்று வந்தால் மாயத்தங்கம் மருந்தாகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக