புதன், 8 ஜூன், 2011

Thamizh kadamaigal 22: தமிழ்க்கடமைகள் 22 தமிழர்கள் தமிழ் நிலத்தின் பழங்குடிகளே

தமிழ்க்கடமைகள் 22
தமிழர்கள் தமிழ் நிலத்தின் பழங்குடிகளே
தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தில் மூவேந்தர்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. சங்க இலக்கியங்களில் மூவேந்தரைப் பற்றியும், குறுநில மன்னர்கள், சிற்றூர்த் தலைவர்கள், அவர்களுக்கு உட்பட்டு வாழ்ந்த மக்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றியும் பல அகச் சான்றுகள் காணக்­கிடைக்கின்றன. இவர்கள் அனைவரும் ஒரு மூதாதையரிடமிருந்து வந்தவர் என்பதற்குரிய அகச் சான்றுகளோ சமூகப் புனைகதைகளோ (Social Myth) எவையும் கிடைத்தில. எனினும் ஒவ்வொரு குடிவழி­யினரும் இந்த நாட்டுக்கே உரிய தொல்பழங்குடியைச் சேர்ந்தவர்களே என்பதற்கும், அவர்கள் வாழ்ந்த ஊர், நகரம் ஆகியன தொன்மை வாய்ந்தனவே என்பதற்கும் அகச்சான்றுகள் பல கிடைக்கின்றன.
ஆவினன் குடி     முருகு. 178
எவ்வி தொல்குடி புறம்: 202: 14
சீர்மை சிறப்பின் தொல்குடி   கலி.105: 2
தென்திசை ஆய்குடி       புறம். 132: 8
தொல்குடி    முருகு.128
தொல்லிசை நட்டகுடி   கலி.104:15
நல்லிசை முதுகுடி      புறம் 58:5
பண்பின் முதுகுடி புறம். 391:9
பழங்குடி     அகம்: 290:8
பீடுபெறு தொல்குடி     புறம்: 289: 4
மன்பதை காக்கும் நீள்குடி    புறம்: 335:8
முரசு கெழு முதுகடி    கலி.105:2
வாணன் சிறுகுடி அகம்.117:18
எனக் குடிகளின் தொன்மையினையும்,
நியம மூதூர்   நற்.45:4
மல்லல் மூதூர்      நற்.319:3
அழியா மரபின் மூதூர்     நற். 311:5
மணல்மலிமூதூர் நற்.319:3
பெருங்கலி மூதூர்      நற்.321:10
ஆதியருமன் மூதூர்     குறுந்.293:4
கம்பலை மூதூர்   புறம் 4:1
மல்லல் மூதூர்    புறம்: 18.12
நனந்தலை மூதூர் புறம் 228:4
என ஊர்களின் தொன்மையின்மையும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தமிழகத்துப் பழங்குடிகள் வெளிநாட்டிலிருந்து வந்தவை என்பதற்கு எவ்வித அகச் சான்றுகளும் இல்லை. மாறாக இங்கேயே தோன்றி வாழ்ந்தவை என்பதையே மேற்காட்டிய எடுத்துக்காட்டுகள் உறுதி செய்கின்றன. எனவே, நாடு தழுவிய பொது வரலாறும், பொது மரபும் தமிழ் மண்ணிலிருந்தே உருப்பெறுகின்றன.
  முனைவர் ப.கிருட்டிணன்: 
தமிழ் நூல்களில் தமிழ் மொழி தமிழ் இனம் தமிழ் நாடு: பக்கம்: 47-48


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக